Published:Updated:

`மீட்டர் கட்டணம்தான்; கூடுதல் கட்டணம் கிடையாது!'- சென்னையில் `எம்' ஆட்டோ அறிமுகம்

`மீட்டர் கட்டணம்தான்; கூடுதல் கட்டணம் கிடையாது!'- சென்னையில் `எம்' ஆட்டோ அறிமுகம்
`மீட்டர் கட்டணம்தான்; கூடுதல் கட்டணம் கிடையாது!'- சென்னையில் `எம்' ஆட்டோ அறிமுகம்

சென்னையில், பெண்கள் முன்னேற்றத்தில் மற்றுமொரு அடி முன்னெடுத்து வைத்திருக்கிறது மக்கள் ஆட்டோ, பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணி செய்வதே இன்னும் அரிதாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில், திருநங்கைகளையும் பர்தா(ஹிஜாப்) அணிந்த மூன்று முஸ்லிம் பெண்களையும் ஆட்டோ ஓட்டுநர்களாக நேற்று அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்த நிறுவனம். இந்த சிறப்பு ஆட்டோ சேவையை அரபு இளவரசி ஷெய்கா அறிமுகப்படுத்தினார்.

சென்னையில் நடந்த அறிமுக விழாவில், ஐக்கிய அரபு நாடுகளின் அரச குடும்பத்தைச் சேர்ந்த, ஷார்ஜாஹ்வின் இளவரசி ஷெய்கா ஹிந்த் பைசல் அல் கஸாமி,  இந்தச் சேவையைத் தொடங்கிவைத்தார். இவரோடு இசையமைப்பாளர் ஜிப்ரான், இந்தியாவின் பசுமை மனிதர் அப்துல் கனி, மக்கள் ஆட்டோ முதன்மை செயல் அலுவலர் யாஸ்மீன் ஜவஹர் அலி, மக்கள் ஆட்டோ ஆலோசகர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளவரசி ஹிந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ``இந்தியப் பெண்கள், முன்னேற்றத்தில் சிறப்பாக கோலோச்சுவதாகவும் குறிப்பாக, பர்தா அணிந்த பெண்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளிவரவே தயங்கும் நிலையில், அவர்களை ஊக்கப்படுத்தும் இந்த புதிய முயற்சியைத்  தான் வரவேற்பதாகக் கூறினார்.

M ஆட்டோ ஆப்பில் அவசரகால உதவிக்குத் தொடர்புகொள்ளும் வசதி, பெண் ஓட்டுநர்கள், திருநங்கை ஓட்டுநர்கள், புர்கா அணிந்த பெண் ஓட்டுநர்கள் ஆகியோருக்கான வேலை வாய்ப்பு, பெண்களுக்கு சிறப்புச் சலுகை ஆகியவற்றோடு, முழுமையான பாதுகாப்பான பயணத்தைப் பெண்கள் உணர வழிவகை செய்த  M ஆட்டோ நிறுவனத்தைப் பாராட்டிப் பேசிய அவர், `உற்சாகமாக பெண் ஆட்டோ ஓட்டுநரோடு சவாரி செய்தேன்’ என்றார். மேலும், தான் அந்த ஆட்டோ ரிக்ஷா சவாரியை மிகவும்  ரசித்ததாகவும், இவ்வளவு போக்குவரத்து நெரிசலில் ஒருவரின் பயணத்தை ஆட்டோ சுலபமாக்குவதாகவும் கூறினார்.  தற்போதுதான் தன்னுடைய இந்தியப் பயணம் முழுமையடைந்தது' எனவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், " சினிமா நிகழ்ச்சிகள் தாண்டிய, இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தனக்கு மனநிறைவை அளிப்பதாகவும், பெண்கள் முன்னேற்றத்தில், அதிலும் திருநங்கைகள் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சி எல்லோராலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்"  என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சிபற்றியும், தன்னுடைய பணிகள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட மக்கள் ஆட்டோ நிர்வாகி மன்சூர் அலிகான், "இது லாப நோக்கத்துக்காக மட்டும் நடத்தப்படும் நிறுவனமல்ல. அதனால்தான், அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம் மட்டுமே மக்கள் ஆட்டோவில் வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் பாதுகாப்பிற்காகவும் பணி செய்வதே எங்கள் முதன்மை நோக்கம் " என்றார்.