Published:Updated:

``அழகான பணக்காரப் பெண்கள்... 200 வீடியோக்கள்!” - என்ன நடக்கிறது பொள்ளாச்சியில்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``அழகான பணக்காரப் பெண்கள்... 200 வீடியோக்கள்!” - என்ன நடக்கிறது பொள்ளாச்சியில்?
``அழகான பணக்காரப் பெண்கள்... 200 வீடியோக்கள்!” - என்ன நடக்கிறது பொள்ளாச்சியில்?

பணக்காரப் பெண்களையும், அழகான பெண்களையும் குறிவைத்து இந்தக் கும்பல் இயங்கியிருக்கிறது. அவர்களின் செல்போனில் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருக்கின்றன என்று வெளியாகியிருக்கும் தகவல் பொள்ளாச்சியில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

ந்தப் பெண்ணின் பெயர் உமா என்று வைத்துக்கொள்வோம். உமாவுக்குச் சொந்த ஊர் கோவையை அடுத்த பொள்ளாச்சி. அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த சபரிராஜன் என்கிற 25 வயது இளைஞர் ஃபேஸ்புக் மூலம் உமாவோடு நட்பாகிறார். `ஹாய்’ என்று ஆரம்பித்து, பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்து, நட்பு வளர்ந்து நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இப்போது சபரிராஜனின் மீது அபரிதமான காதலும், அசைக்க முடியாத நம்பிக்கையும் வந்துவிட்டது உமாவுக்கு. அதுதான் சபரிராஜன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தருணம்.

``அழகான பணக்காரப் பெண்கள்... 200 வீடியோக்கள்!” - என்ன நடக்கிறது பொள்ளாச்சியில்?

``நண்பர்களோடு எங்கேயாவது வெளியே போகலாமா?" என்று சபரிராஜன் கேட்க, உமாவும் அதற்கு ஓ.கே சொல்லிவிடுகிறார். ``ஊஞ்ச வேலம்பட்டி வரை காரில் போகலாம்" என்று இருவரும் திட்டமிடுகிறார்கள். தன்னுடைய நண்பர்கள் சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகியோருடன் குறிப்பிட்ட நாளில் சபரிராஜன், உமாவை அழைத்துச் செல்லத் தயாரானார். தாராபுரம் சாலையில் ஆள் அரவமற்ற பகுதியில் கார் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தது. திடீரென்று, சபரிராஜனின் நண்பர்களில் ஒருவர், உமாவிடம் அத்துமீறலில் ஈடுபட அதிர்ச்சிக்குள்ளானார் உமா. அதை இன்னொருவர் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். உமாவால் கத்திக் கூச்சலிட முடிந்ததே தவிர, காருக்குள் வேறொன்றும் செய்ய முடியவில்லை. வீடியோவைப் பதிவுசெய்ததும் உமா அணிந்திருந்த ஒரு பவுன் செயினைப் பறித்துக்கொண்டு, நடுவழியில் இறக்கிவிட்டுத் தப்பியோடி விட்டனர். அதோடு மட்டுமல்ல; அவர்கள் எடுத்த அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் கேட்கும்போதெல்லாம் தங்களுக்குப் பணம் தர வேண்டும் என்றும், தங்கள் ஆசைக்கு இணங்கவேண்டும் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றதால், கலங்கிப் போனார் உமா. அப்போதுதான், அவருக்குப் பாதகர்களின் விபரீத எண்ணம் புரிந்தது.

``அழகான பணக்காரப் பெண்கள்... 200 வீடியோக்கள்!” - என்ன நடக்கிறது பொள்ளாச்சியில்?

என்ன செய்வதென்று புரியாத சூழலில் உமாவுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. தன் பெற்றோரிடம் நடந்த விவகாரத்தைச் சொல்லிக் கதறியிருக்கிறார். அவர்கள், உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலையத்தில் இதுதொடர்பாகப் புகார் பதிவானது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீஸார், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட திருநாவுக்கரசை தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இதற்கிடையே, ``உமாவைப் போல பல பெண்கள், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தக் கும்பலிடம் சிக்கியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. பணக்காரப் பெண்களையும், அழகான பெண்களையும் குறிவைத்தே இந்தக் கும்பல் இயங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் செல்போனில் 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. 

``அழகான பணக்காரப் பெண்கள்... 200 வீடியோக்கள்!” - என்ன நடக்கிறது பொள்ளாச்சியில்?

இதுகுறித்து பேசிய பொள்ளாச்சி வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் இப்ராஹிம், ``கல்லூரியில் படிக்கும் பெண்கள், பள்ளிக்கூடம் செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பாகுபாடு இல்லாமல் நிறைய பெண்களை, அந்தக் கும்பல் காதல் என்கிற பெயரில் தங்கள் வலையில் விழ வைத்து சீரழித்திருக்கிறது. வசதியான பெண்களைத் தேர்ந்தெடுத்து ஃபேஸ்புக் மூலம் நட்பு அழைப்பு விடுத்து இதுபோன்ற அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை எப்படி வெளியே சொல்வது என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. குற்றவாளிகளுக்கு இது வசதியாகப் போய்விடவே, அவர்களின் ஆட்டம் அதிகரித்திருக்கிறது. அந்தப் பெண்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவது, தன் நண்பர்களின் ஆசைக்கு இணங்கச் சொல்வது என்று அந்தக் கும்பலின் அக்கிரமத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. தற்போது போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, அந்தக் கும்பல் பிடிபட்டதால் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. ஆனால், போலீஸார் இந்த விவகாரத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். 

இந்தக் கும்பல் பெண்களிடம் அத்துமீறும் வீடியோக்கள் பொள்ளாச்சியின் பல்வேறு இடங்களுக்கும் பரவியிருக்கிறது. அந்தப் பெண்களின் பாதுகாப்பு கருதி அதைப் பகிராமல் வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் இன்னும் பலருக்குத் தொடர்பு இருக்கும் என்று தோன்றுகிறது. பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் யாரும் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகக் கூடாது என்றும், வெளியூர் வழக்கறிஞர்கள் வந்தாலும் அவர்களை ஆஜராக விடக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்தச் சூழலில், தைரியமாகப் புகார் கொடுத்த குடும்பத்திற்கு மிரட்டல்கள் வருவதாகத் தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த இந்தக் கும்பலோடு தொடர்புடைய அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும். மேலும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் நடேசனிடம் பேசினோம், ``திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டால்தான் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்பதைப்போலக் கைது செய்யப்பட்டவர்கள் சொல்கிறார்கள். அவரைப் பிடித்தால்தான் இந்த விவகாரத்தைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியும். மற்றபடி 200 வீடியோக்கள் இருக்கிறது, அரசியல்வாதிகளின் அழுத்தம் இருக்கிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். எதற்காக நாங்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க வேண்டும்? அப்படி ஏதாவது மறைத்து, ஒருவேளை இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டால், எங்கள் ஸ்டேஷன் போலீஸாரின் நிலை கேள்விக்குறி ஆகிவிடாதா? நாங்கள் எதையும் மறைக்கவில்லை. திருநாவுக்கரசைப் பிடித்ததும் தீர விசாரித்து, தக்க நடவடிக்கை எடுப்போம்" என்றார் அழுத்தமாக. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு