Published:Updated:

`ஆபரேஷன் ரோமியோ'- இரவில் 125 இளைஞர்களை அதிரவைத்த போலீஸ்!

`ஆபரேஷன் ரோமியோ'- இரவில் 125 இளைஞர்களை அதிரவைத்த போலீஸ்!
`ஆபரேஷன் ரோமியோ'- இரவில் 125 இளைஞர்களை அதிரவைத்த போலீஸ்!

`ஆபரேஷன் ரோமியோ' என்ற பெயரில், 125 இளைஞர்கள் ஒரே இரவில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், ஹரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில், எம்.ஜி.ரோடு பகுதியில்தான் இந்தக் கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து உதவி கமிஷனர் உஷா கூறுகையில், ``எம்.ஜி.ரோடு பகுதியில், குறிப்பிட்ட வணிக வளாகங்களுக்கு அருகில் சட்டவிரோதமாக பெண்களுக்கு எதிரான நடவடிக்கைள் நடப்பதாக எங்களுக்குத் தொடர் புகார் வந்தவண்ணம் இருந்தது.  அதனை நாங்கள் கண்காணித்துவந்தோம். இந்தப் பகுதியில் 130 நைட் கிளப்புகள், பார்கள் அதிகமான அளவில் இருக்கின்றன. இதனால், இரவு நேரங்களில் இளைஞர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, வார இறுதியில் இந்த எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.

இவர்கள் அந்தப் பகுதியில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுப்பதாகத் தகவல்கள் வந்தன. இதனை அடுத்துதான் எங்கள் கமிஷனரின் மேற்பார்வையில் ``ஆபரேஷன் ரோமியோ'' என்ற பெயரில் நேரடி கண்காணிப்பைத் தொடங்கினோம். அதன்படி 100-க்கும் அதிகமான காவலர்கள் நேற்று இரவு வரவழைக்கப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களைக் கைதுசெய்தோம். 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆபரேஷன், நள்ளிரவைத் தாண்டியும் நீட்டித்தது. சட்டவிரோதமாக நடந்துகொண்ட 125 இளைஞர்களை ஒரே இரவில் கைதுசெய்தோம். 

இவர்களில் 109 பேரை எச்சரிக்கைசெய்து விடுதலை செய்துவிட்டோம். மீண்டும் இதுபோல் நடந்துகொண்டால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீதமுள்ளவர்கள்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து எங்கள் `ஆபரேஷன் ரோமியோ' திட்டம் செயல்படும்" என்றார்.  ஒரே இரவில் 125 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.