Published:Updated:

`ஏ.ஆர்.ரஹ்மான் அகாடமியில் பாடம்; தமிழ்ப் பாட்டு' - இசையமைப்பாளர் ஆனார் கேரள பெண் ஹனான்!

`ஏ.ஆர்.ரஹ்மான் அகாடமியில் பாடம்; தமிழ்ப் பாட்டு' - இசையமைப்பாளர் ஆனார் கேரள பெண் ஹனான்!
`ஏ.ஆர்.ரஹ்மான் அகாடமியில் பாடம்; தமிழ்ப் பாட்டு' - இசையமைப்பாளர் ஆனார் கேரள பெண் ஹனான்!

திருச்சூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹனான் கொச்சியில் தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். டாக்டர் ஆகும் கனவில் தொடுபுழாவில் ஒரு கல்லூரியில் வேதியியல் படித்து வருகிறார். குடும்ப வறுமையைப் போக்கவும் படிப்புச் செலவுக்காகவும் காலையில் கல்லூரி சென்றுவிட்டு மாலையில் மீன் விற்கும் தொழில் செய்துவருகிறார். ஹனானின் இந்த முயற்சிக்குத் தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. இதை அறிந்த இயக்குநர் அருண் கோபி தனது அடுத்த படத்தில் ஹனானுக்கு நல்ல கதாபாத்திரம் அளிக்க முன்வந்தார். பட வாய்ப்புக்காகத் தன் துயரக்கதையை வெளியே கூறியதாகச் சமூக வலைதளவாசிகள் ஹனான்மீது பாய்ந்தனர். 

இதைத் தொடர்ந்து ஹனானுக்கு ஆதரவாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவிக்கப் பிரச்னை முடிவுக்கு வந்தது. டி.வி ஷோ-க்களில் சிறு வேடங்களில் நடித்துவரும் ஹனான், மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது வழக்கம். இதற்கிடையே தற்போது இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் மாணவி ஹனான். நடிகர் கலாபவன் மணி மறைந்து நேற்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிறது. கலாபவன் மணியைப் போற்றும் வகையில் ``மணிசேட்டேன்டே குஞ்ஜேட்டா'' எனத் தொடங்கும் பாடலுக்கு ஹனான் இசையமைத்துள்ளார். அவரின் மூன்றாவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் இந்தப் பாட்டையும் நேற்று வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியதுடன், பாடவும் செய்துள்ளார்.

இதுதொடர்பாக மனோரமா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``கலாபவன் மணி சேட்டன் இறக்கும்போது நான் அவரது வீட்டில் இருந்தேன். அவரது உடல் அருகே நின்று இறுதிச் சடங்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மணி சேட்டன் குறித்துப் பாட வேண்டும்  என அன்றைக்கு முடிவு பண்ணியதுதான். அவரைக் குழந்தையாக பாவித்துதான் தாலாட்டுப் பாடல் எடுக்க முடிவு செய்தேன். அப்படிதான் இந்தப் பாடல் முழுவதும் மனதுக்குள் வந்தது. முதலில் மணி சேட்டனின் மனைவி, மகளைத்தான் இதில் நடிக்க வைக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் அது சரிவரவில்லை. இருப்பினும் இந்தப் பாடலுக்காக அவர்கள் எனக்கு நிறைய உதவினார்கள். 

இந்த வீடியோவை பார்த்து நிறைய பேர் என்னைப் பாராட்டினார்கள். இன்னும் நிறைய பேர் அவரை மறக்கவில்லை என்றே தோன்றுகிறது" என்றவரிடம் இசையை எப்படிக் கற்றுக்கொண்டீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு, ``நான் இன்னும் வாரம் முழுக்க மீன் விற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். வார இறுதியில் சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் அகாடமியில் ஹிந்துஸ்தானி இசை கற்றுவருகிறேன். சமீபத்தில் எனக்கு அங்கு அட்மிஷன் கிடைத்தது. 

பொறுத்திருந்து பார்ப்போம் வாழ்க்கை எங்கே என்னைக் கொண்டு செல்கிறது என்று. மீன் விற்பதைப் பற்றியும் பாடல் எழுதி வீடியோ எடுத்திருக்கிறேன். அந்த வீடியோவின் மற்ற பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் அதையும் வெளியிடுவேன்" எனக் கூறும் ஹனான் தமிழிலும் ஒரு பாடல் எழுதியுள்ளாராம். அதுவும் கூடிய சீக்கிரத்தில் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளார்.

news credit: manoramaonline