
படங்கள்: எஸ்.ரவிக்குமார்
கடன் பிரசுரமும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகடமியும் இணைந்து நடத்திய ‘நீங்களும் IAS ஆகலாம்’ - இலவசப் பயிற்சி முகாம் சென்னை எத்தி ராஜ் கல்லூரியில் நடைபெற்றது.

“தமிழக அரசு நடத்தும் `TNPSC குரூப் 2’ தேர்வில் 20 லட்சம் தமிழர்கள் பங்கேற்கும் நிலையில், அதே தரத்தில் இந்திய அரசு நடத்தும் குடிமைப்பணிகளுக்கான `UPSC’ தேர்வில் ஏன் வெறும் 15,000 பேர் மட்டும் கலந்துகொள்கிறார்கள்?” என்கிற கேள்வியோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன். “சிவில் சர்வீஸ் தேர்வுகளைச் சுற்றிப் பல கட்டுக்கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் தேர்வின் மீது அச்சத்தை ஏற்படுத்துகின்றன” என்று, தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “எதற்காக ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கேள்வி மிக முக்கியமானது. அதற்கான பதிலை முதலில் கண்டுபிடியுங்கள். உங்கள் லட்சியம் பெரிதாக இருக்கட்டும்” என்று மாணவர்களிடமே கேள்விகளைக் கேட்டு, பதில் பெற்று, பரிசுகளையும் வழங்கினார்.

“10-வது முதல் 12-ம் வகுப்பு வரை இருக்கும் CBSE மற்றும் NCRET பாடநூல்களைப் படிக்க வேண்டும், தினமும் செய்தித்தாள், ஆங்கில நாவல்களைப் படித்து எழுதிப்பழக வேண்டும், மத்திய அரசின் யோஜனா எனும் மின் இதழைப் படிக்க வேண்டும்” என்று டிப்ஸ்களை வாரி வழங்கினார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

தொடர்ந்து, பார்வைக் குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் குடிமைப்பணியில் தேர்வு பெற்று, தற்போது பிரான்ஸ் நாட்டில் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருக்கும் பெனோ ஜெபின் பேசியது அரங்கத்தில் உற்சாகத்தைத் தூண்டியது. “CBSC மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சமச்சீர்க் கல்விப் புத்தகங்களும் `UPSC’ தேர்வுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. ஐஏஎஸ் தேர்வுக்கு அதிகம் செலவு செய்யத் தேவையில்லை. அதிகபட்சம் 10,000 செலவாகும். தமிழ்ப் புத்தகங்களை வாங்கினால் 2,500 ரூபாய் போதும்’’ என்று பேசினார், எழுத்தாளர் முனைவர் சங்கர சரவணன்.
விழா முடிந்து திரும்பும்போது பலரின் விழிகளில் வெளிச்சம்!
- ரஞ்சித் ரூஸோ.