Published:Updated:

பிரசவத்தில் தலை துண்டான குழந்தை..! என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரும் சுகாதாரத்துறையினரும்?

பிரசவத்தில் தலை துண்டான குழந்தை..! என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரும் சுகாதாரத்துறையினரும்?
பிரசவத்தில் தலை துண்டான குழந்தை..! என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரும் சுகாதாரத்துறையினரும்?

``குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போதே ரெண்டு நாளைக்கு முன்னாடி இறந்துடுச்சு. அதனால, பிரசவ நேரத்துல இப்படி ஆகிடுச்சுன்னு சொல்றாங்க. ஆனா, அது உண்மை இல்லங்க!"

``நேத்து காலையில 6 மணிக்கெல்லாம் தங்கச்சிக்கு இடுப்பு வலி வந்துடுச்சுங்க. உடனே என் மச்சானுக்கு போன்ல தகவலைச் சொல்லிட்டு அம்மாவையும் என் மனைவியையும் கூட துணைக்குக் கூட்டிக்கிட்டு தங்கச்சியை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போனோம். முதல்ல அவசரம்னுதான் அங்கே போனோம். அதுக்குப் பிறகுதான் அந்த ஆஸ்பத்திரியில எந்த வசதியும் கிடையாதே, அதனால, செங்கல்பட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம்னு சொன்னேன். ஆனா, அங்க இருந்த நர்சுதான், `இது நார்மல் டெலிவரிதான். செங்கல்பட்டுக்குக் கூட்டிட்டுப் போற அளவுக்குப் பெருசா இல்ல. நானே பாத்துடுவேன்' னு சொல்லிட்டாங்க. சரின்னு அம்மாவையும் என் மனைவியையும் அங்க இருக்க வெச்சிட்டு நான் வெளியில கிளம்பிப் போயிருந்தேன். கொஞ்ச நேரத்துல எம் மனைவி போன் போட்டு, `சிசுவைக் காப்பாத்த முடியலைனு சொல்லிட்டாங்க' ன்னு சொல்லி அழுதுச்சு. பதறியடிச்சிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேனுங்க” நேற்று தமிழகத்தையே உலுக்கிய அந்தச் சம்பவத்தைப் பற்றி நம்மிடம் விவரிக்கையில் ஜெயராமனின் குரல் நடுங்குகிறது. 

ஜெயராமன், நேற்று காலை தலைப்பிரசவத்திற்காக கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்ட பொம்மியின் அண்ணன். ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் அங்கிருந்த செவிலியர் ஒருவரே பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரசவம் பார்ப்பது குறித்து அனுபவம் இல்லாததால் இடுக்கியைக் கொண்டு சிசுவை வெளியே எடுக்க முயன்றபோது சிசுவின் தலை மட்டும் தனியாக வெளியே வர அதிர்ந்துபோனவர் அவசர அவசரமாக ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். மருத்துவரின் பரிந்துரையும் முறையான பயிற்சியும் இல்லாத காரணத்தால் செவிலியர் செய்த இந்தச் செயல் தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. 

``காலைல 6 மணிக்கு தங்கச்சிய ஆஸ்பத்திரியில விட்டுட்டுப் போயிருக்கேன். 8 மணிகிட்ட என் மனைவி போன்ல தகவலைச் சொன்னதும் அடிச்சு புடிச்சு ஆஸ்பத்திரிக்கு ஓடினேங்க. அங்கே போனா குழந்தை இறந்துடுச்சு. பெரிய உசுரக் காப்பாத்த போராடிட்டு இருக்கோம். ஆம்புலன்சுக்கு போன் பண்ணியாச்சு. உடனே செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போங்கன்னு சொன்னாங்க. அங்க போனதுக்குப் பிறகுதான் குழந்தையோட தலை மட்டும் தனியா வெளியே வந்துருக்கிற விஷயம் தெரிஞ்சது. என்ன நடந்துச்சுன்னு எங்களால முழுசா தெரிஞ்சிக்க முடியலை. அதுக்குள்ள கூவத்தூர் ஆஸ்பத்திரியில என்னலாமோ பேச ஆரம்பிச்சிட்டாங்க. குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போதே ரெண்டு நாளைக்கு முன்னாடி இறந்துடுச்சு. அதனால, பிரசவ நேரத்துல இப்படி ஆகிடுச்சுன்னு சொல்றாங்க. ஆனா, அது உண்மை இல்லங்க. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வர்ற வரைக்கும் குழந்தை நல்லாத்தான் இருந்துச்சு.

மாசா மாசம் தங்கச்சி செக் அப்லாம் ஒழுங்காதான் போச்சு. தடுப்பூசிலாம் போட்டுக்கிச்சு. அப்படி இருக்கும்போது குழந்தை வயித்துக்குள்ளேயே இறந்துடுச்சுன்னு சொல்றதெல்லாம் அப்பட்டமான பொய். என் வீட்டுல உள்ளவங்க எல்லாரும் பதறி துடிக்கிறாங்க. கதறி அழறாங்க. நான் இன்னும் தங்கச்சியக்கூட பாக்கலை. என் மனைவி மட்டும்தான் போய்ப் பாத்துட்டு வந்தா. இந்த வேதனைய நாங்க எப்படிங்க தாங்கிக்கிறது? நேத்து மதியானம் ஈ.சி.ஆர் ரோட்டுல ஆர்ப்பாட்டம் பண்ணினோம். என்ன பிரயோஜனம்? ஒரு நியாயமும் கிடைக்கல. இப்போ என் தங்கச்சி நல்லபடியா வந்துடணும். அதுக்கு அப்பறம் கோர்ட்டுக்கும் மனித உரிமை ஆணையத்துக்கிட்டயும் போய் நீதி கேட்கலாம்னு இருக்கோம்” என்றபடியே கதற பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவரின் மனைவி தொலைபேசியை வாங்கிப் பேசுகிறார். 

``சார், இவங்களை எல்லாம் விட்டுடாதீங்க சார். நீங்கதான் எங்களை மாதிரியான ஆட்களுக்கு நியாயம் வாங்கித் தரணும். பாவம் பொம்மி. இந்த மாதிரி ஒரு நிலைமை வேற எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது. 10 மாசம் வயித்துல சுமந்த புள்ளைய தலையில்லாமப் பாக்க எந்தப் பொண்ணுக்கு தைரியம் இருக்கும். அய்யோ, எங்களால அழக்கூட முடியாம தவிக்கிறோம் சார். எங்க அத்தை இப்போவே அரை உசுரா போயிட்டாங்க. நேத்துல இருந்து பச்சத்தண்ணிகூட குடிக்கலை. எங்களுக்கு நியாயத்தை வாங்கித் தாங்க. இனிமே வேற எங்கேயும் இப்புடி ஒண்ணு நடந்துடவே கூடாது சார்” என்றவரின் குரல் நம் நெஞ்சைப் பிளக்கிறது. 

இந்தச் சம்பவம் குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியைத் தொடர்பு கொண்டு பேசினோம்,

``என்னைப் பொறுத்தவரை இது மிகவும் வருத்தம் தரும் சம்பவமே. அதேவேளையில் இது போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் நிகழ்ந்திருக்கிறது. முதலில் அந்தக் கர்ப்பிணியும் அவர் வீட்டிலுள்ளவர்களும் பிரசவ நேரத்தில் விழிப்புணர்வோடு இருந்திருக்க வேண்டும். வயிற்றில் குழந்தை சுற்றுவது தெரிந்த உடனேயே மருத்துவமனையை அணுகி இருக்கலாம். ஆனால், அவர்களோ ஏதோ சாப்பிட்டதால் வயிறு வலி இருக்கிறதென்று நினைத்து இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்திருக்கிறார்கள். அது பெரிய தவறு. அதோடு, பிரசவம் பார்க்க இருப்பவரும் தொடர்ந்து கர்ப்பிணிகளோடு கம்யூனிகேஷனில் இருந்திருக்கலாம். இந்தச் சம்பவத்தில் நர்ஸ் பிரசவம் பார்த்ததால் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மக்கள் நினைப்பது தவறானது. ஆரம்ப சுகாதார மையத்தில் இருக்கும் நர்ஸ் பிரசவம் பார்ப்பதிலும் முறையான பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். மருத்துவர் இல்லாத சூழலிலும் அவர்களால் திறமையாகப் பிரசவம் பார்க்க முடியும். 

நேற்று காலை இப்படியொரு சம்பவம் நடந்த உடனேயே நாங்கள் அவசர அவசரமாக 3 உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டோம். முதலில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்டிப்பாக மருத்துவர்கள் இருக்க வேண்டும். அதோடு, 24 மணி நேரமும் டியூட்டி நர்ஸ் இருக்க வேண்டும் என்பது. இது ஏற்கெனவே நடைமுறையில் இருந்தாலும் இப்போது அதை உறுதிப்படுத்தச் சொல்லியிருக்கிறோம். இரண்டாவது, இரண்டு மருத்துவர்களில் ஒருவர் எப்போதும் கால் டியூட்டியில் இருக்க வேண்டும். யார் எந்நேரம் தொலைபேசியில் அழைத்தாலும் உடனடியாக அதற்குப் பதிலளிக்க வேண்டும். மூன்றாவது, நர்ஸ் மற்றும் மருத்துவர்களின் கான்ஃபிடன்ட் லெவலை அதிகப்படுத்த நிறைய டெலிவரி நடக்கும் மருத்துவமனைகளில் டியூட்டிக்கு அனுப்புவதற்கும் அவர்களின் கம்யூனிகேஷன் லெவலை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றவர் இறுதியாக, 

``தற்போது நாங்களும் மாவட்ட ஆட்சித்தலைவரும் குழந்தையின் போஸ்ட்  மார்டம் ரிப்போட்டிற்காகக் காத்திருக்கிறோம். அது வந்த பிறகே மேற்கொண்டு எதையும் உறுதியாகச் சொல்ல முடியும். தவறு ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் நிச்சயமாகச் சம்பந்தப்பட்ட அந்த நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

அடுத்த கட்டுரைக்கு