Published:Updated:

18 வயது மகளை தினந்தோறும் கல்லூரிக்குச் சுமந்து செல்லும் தாய்! ஏன்?

18 வயது மகளை தினந்தோறும் கல்லூரிக்குச் சுமந்து செல்லும் தாய்! ஏன்?
18 வயது மகளை தினந்தோறும் கல்லூரிக்குச் சுமந்து செல்லும் தாய்! ஏன்?

``எனக்கு இரண்டு பொண்ணுங்க, இரண்டு பையன்கள். பாரதி பொறந்து இரண்டு வயசுக்கு அப்புறம்தான், அவ மாற்றுத்திறனாளின்னு தெரிய வந்துச்சு. வருத்தமா இருந்துச்சு."

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் அருகில் உள்ளது மேக்கரிமங்கலம். சராசரி மாணவர்கள் தூக்கிச் சுமக்கும் புத்தகப் பையின் உயரத்தில் மட்டுமே இருக்கும் 18 வயதான பாரதியையும் பாரதியின் புத்தகப் பையையும் தினமும் தூக்கிச் சுமக்கிறார் பாரதியின் தாய் தேவகி. இரண்டரை அடி உயரமுள்ள பாரதி, பேருந்தில் ஏறி கல்லூரி செல்வது இயலாத காரியம். அதனால் குடும்பம் வறுமையில் இருந்தாலும், மகளைப் படிக்க வைக்க வேண்டும் எனும் எண்ணத்தில் நாள்தோறும் பாரதியை இடுப்பில் தூக்கிக்கொண்டு, மேக்கிரிமங்கலத்திலிருந்து மயிலாடுதுறைக்கு 18 கிலோ மீட்டர் தூரம் பேருந்தில் சென்று வருகிறார் தாய் தேவகி.

மேக்கிரிமங்கலம் நடுநிலைப்பள்ளியில் பயின்ற பாரதி, குத்தாலம் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்து, தற்போது மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் படிக்கிறார். தன் மகளின் கல்லூரிப் படிப்பில் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, வேலைக்குச் செல்வதை விட்டுவிட்டார். ``நான் விவசாயக் கூலி வேலைக்குத்தான் போவேன். நடவு நட, கள பறிக்கணு காலையில போனா, சாயந்திரம் ஆயிரும் வாரதுக்கு. பாரதி ஸ்கூல்ல படிச்ச வரைக்கும் அந்த வேலைக்கெல்லாம் போயிட்டு இருந்தேன். இப்ப காலேஜூல விடணும் இல்லையா... அதனால, போக முடியறதில்ல" என்கிறார் தேவகி. அவர்கள் வளர்க்கும் மாட்டுப் பாலை விற்ற பணம்தான் சாப்பாட்டுக்கும் மற்ற செலவுகளுக்கும் உதவுகிறது. ``மாடு கறந்து விக்கிற பாலுக்கு உடனே காசைக் கேட்டு வாங்கிதான் செலவு பண்ண வேண்டியிருக்கு. ஒருநாள் மாடு பால் கறக்கலன்னா, பஸ்க்குக்கூட காசு இருக்காது. ஆனா, இதுக்காக எல்லாம் பாரதியின் படிப்பு தடைப்பட்டு விடக்கூடாது" எனச் சொல்லும் தேவகியும் குரலில் ஒரு தெளிவு. ``பாரதி நல்லபடியா படிச்சு, அரசாங்க வேலை கெடச்சுதுன்னா, எங்களுக்கு நிம்மதியா இருக்கும். சொச்ச வாழ்க்கைக்கும் ஒரு பிடிமானம் கெடைக்கும்" என்கிறார் சிறிது நம்பிக்கையுடன். மகள் 7.30 மணிக்குப் புறப்பட வேண்டும் என்பதால், விடியற்காலையில் எழுந்து வேலைகளை முடித்து, கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறார். பின், கல்லூரியிலேயே காத்திருந்து மாலை மகளை அழைத்துவருகிறார். 

வழக்கறிஞர் ஆவதை லட்சியமாகக் கொண்டு படிக்கும் பாரதி, கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் விடுவதில்லை. ``எனக்கு ஸ்கூல், காலேஜ்ல கூட படிக்கிற எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ்தான். யாரும் என்ன பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. எனக்கு ஏதாவது தேவைன்னா, ஓடி வந்து செய்வாங்க. இதனால, உயரம் கம்மியா இருக்கிறது பற்றி நினைப்பு எனக்கு வர்றதில்லை. நான் ஒரு மாற்றுத்திறனாளினு வருத்தப்பட்டதும் இல்லை" என்று நம்பிக்கை தெறிக்கச் சொல்லும் பாரதியின் ஆசையெல்லாம், அம்மாவின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். மகளின் தலையை அன்போடு தடவிக்கொடுத்தபடி பேசுகிறார் தேவகி. 

``எனக்கு இரண்டு பொண்ணுங்க, இரண்டு பையன்கள். பாரதி பொறந்து இரண்டு வயசுக்கு அப்புறம்தான், அவ மாற்றுத்திறனாளின்னு தெரிய வந்துச்சு. வருத்தமா இருந்துச்சு. ஆனாலும், அவளை எப்படியாவது நல்ல வேலையில, அதுவும் அரசாங்க வேலையில சேர்த்து அழகு பார்க்கணும்னு ஆசை வந்துடுச்சு. மத்த புள்ளைங்க எப்படியாச்சும் பொழைச்சுக்குங்க. பாரதிக்கு நான்தானே கூட நிக்கணும். நான் செத்துப்போறதுக்குள்ள அரசாங்க வேலை கிடைச்சிட்டா போதும். அந்த வேலை அவளைக் காப்பாத்திரும்" என்று சொல்லிமுடிக்கையில் உடைந்து அழுகிறார். தேவகியின் கண்ணீருக்கு அரசுதான் விடையளிக்க வேண்டும். 

குத்தாலம் ஒன்றியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் ராமகுரு, ``ஒரு மாற்றுத்திறனாளிக்கு அரசு கொடுக்க வேண்டிய சலுகை கிடைத்தாலும், சரியான கழிவறை வசதி, இரு சக்கர வாகனம் கிடைச்சா பாரதிக்கு இன்னும் உதவியாக இருக்கும். மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் அரசு வேலை கிடைத்தால், பாரதியின் அம்மா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்" என்கிறார்.  

நியாயமான கனவுகள் நிச்சயம் தோற்கக்கூடாது. பாரதி, அவரின் அம்மாவின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும். 

அடுத்த கட்டுரைக்கு