Published:Updated:

``வெளிச்சத்தைப் பார்க்கவே பயமா இருக்கும்!'' பாலியல் படுகொலை சேலம் சிறுமியின் தந்தை

``வெளிச்சத்தைப் பார்க்கவே பயமா இருக்கும்!'' பாலியல் படுகொலை சேலம் சிறுமியின் தந்தை
News
``வெளிச்சத்தைப் பார்க்கவே பயமா இருக்கும்!'' பாலியல் படுகொலை சேலம் சிறுமியின் தந்தை

``என் பொண்ணுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து குடும்பமே திடீர் திடீரென இரவுல உட்கார்ந்து அழுவோம். பையனுக்கு வாந்தி, பேதி வந்திடும். சின்னப் பொண்ணு பயந்துட்டு பள்ளிக்கூடமே போகாமல் நின்னுடுச்சு. என் பொண்ணை நினைச்சா உடம்புல எந்த அசைவும் இல்லாமல் போயிடுது."

``அன்னிக்கு, தறி நெய்த அலுப்புல அசந்து தூங்கிட்டோம். வீட்டுக்குக் கதவும் கிடையாது. உள்ள புகுந்து கொழந்தையத் தூக்கிட்டுப் போய், குதறி கொன்னுப்போட்டுடுடானுங்க. நியாயத்தின் பக்கம் நிக்க வேண்டிய அந்த ஊருக்காரங்க, எங்களை மன்னிப்பு கேட்கச் சொன்னாங்க. இந்த உலகத்துல இருக்கவும், வெளிச்சத்தைப் பார்க்கவுமே பயமா இருக்கு'' என்கிறார் பாலியல் கூட்டு வன்முறை செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை பரமசிவம்.

சேலம் வாழப்பாடியை அடுத்துள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள். வயது பத்து. அரசுத் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். 2014 ம் ஆண்டு, அந்த ஊரைச் சேர்ந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நிர்வாகி பூபதி, ஸ்னேக் பாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் மது அருந்தி விட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்றனர். அருகிலுள்ள மலைக்கரட்டில் வைத்து, ஐந்து பேரும் சேர்ந்து பாலியல் கூட்டு வன்முறை செய்தனர். இதில், துடிக்கத் துடிக்க அந்தச் சிறுமி கொல்லப்பட்டாள். இறந்துவிட்ட சிறுமியின் உடலில் மஞ்சள், பவுடர் பூசி மரத்தில் தொங்க விட்டனர். இந்தச் சம்பவம் அப்போது தமிழகத்தையே உலுக்கியது. 23.2.2014ம் தேதியிட்ட ஜூனியர் விகடனில் ``உடம்பெல்லாம் பவுடர்... ரத்தம் சிந்திய கால்கள்!" என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

இந்த வழக்கு, சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் தனசேகரன் வாதாடினார். தமிழகமே எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த 21-ம் தேதி வழங்கப்பட்டது. குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் தலா இரண்டு ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 40,000 அபராதமும் அதைக் கட்டாத பட்சத்தில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கொடுத்து தீர்ப்பளிக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாலியல் வன்முறையில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பமே அந்த ஊரை விட்டுச் சென்று விட்டது. பல இடங்களில் விசாரித்து, சிறுமியின் தந்தையைக் கண்டுபிடித்துப் பேசினோம். ``குடும்பம், குழந்தை, தொழில்தான் என் உலகம். என் கொழந்தையக் கொன்ற அந்தப் பாவிகள் என் வீட்டுப் பக்கத்துல இருந்திருக்காங்க. ஆனா, அவங்களோட பேசினதுகூட இல்லை.

ஆள் பலமும் பண பலமும் இல்லாத அன்னாடக் காட்சிதானே இவன், என்ன பண்ணிடப்போறான்னு நினைச்சு என் கொழந்தையத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. ஊரு மானத்தையே காக்க துணி நெய்கிறேன். ஆனா, என் கொழந்தைய மானபங்கம் செஞ்சுட்டாங்க. அந்த ஊருக்காரங்க, என் மனைவியின் சொந்தக்காரரு கோபத்தில் ஊரைத் திட்டினதாச் சொல்லி எங்களை மன்னிப்பு கேட்கச் சொன்னாங்க.

வெந்த புண்ணுல வேல் பாய்ச்சறது மாதிரி, குடிக்கத் தண்ணிகூட கொடுக்காமல் எங்களைத் தனிமைப்படுத்தினாங்க. வழக்கை வாபஸ் வாங்கவும் அழுத்தம் கொடுத்தாங்க. இனியும் அங்கிருந்தால் மத்த உசுருக்கும் ஆபத்துன்னு தறியை வித்துட்டு பரதேசி கோலமாக யார் பார்வையிலும் படாமல் இங்கு வந்துட்டோம். எங்க குடும்பத்தில, எல்லோரும் அப்ராணிங்க. கொஞ்சம் விவரமான பொண்ணா என் சாமி இருந்துச்சு. அந்தக் கொழந்தைய நாசம் பண்ணிட்டாங்க'' என்று கதறி அழுதவர்.

சற்றுநேரம் கழித்து, ``என் பொண்ணுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து குடும்பமே திடீர் திடீரென இரவுல உட்கார்ந்து அழுவோம். பையனுக்கு வாந்தி, பேதி வந்திடும். சின்னப் பொண்ணு பயந்துட்டு பள்ளிக்கூடமே போகாமல் நின்னுடுச்சு. என் பொண்ணை நினைச்சா உடம்புல எந்த அசைவும் இல்லாமல் போயிடுது. குடும்பமே தற்கொலை பண்ணி செத்திடலாமுன்னு முடிவு பண்ணினோம். போலீஸ் உயர் அதிகாரிங்க சொன்ன ஆலோசனையால் மறுஜென்மம் எடுத்த மாதிரி வாழ்ந்துட்டு இருக்கோம். ஆனாலும் எங்க உசுரு போகும்வரை என் மகளின் ஞாபகம் போகாது.  

என் பொண்ணு வழக்கு, சேலம் நீதிமன்றத்துல நடந்தது. சாட்சி சொல்லக் கூப்பிட்டாங்க. அந்த நேரத்துல எனக்கு அடிக்கடி போன் வரும், ``உன் பொண்ணு இறந்ததுக்கு உதவி பண்ணுறோம். அங்க வா, இங்க வான்னு'' சொல்லி பயமுறுத்தினாங்க. ஆனாலும் குடும்பமே கூண்டேறிச் சாட்சிச் சொல்லிட்டு வந்தோம். நான் சேலத்துல மூட்டைத் தூக்கிட்டு இருக்கேன். வேலைக்குப் போனால்தான் கஞ்சி குடிக்க முடியும். அதனால நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து போக முடியாது. போலீஸ்காரங்க நிலவரத்தைச் சொல்லுவாங்க. தீர்ப்பு வந்ததும் சொன்னாங்க. வேலையை முடிச்சுட்டு வரும்போது பேப்பர் வாங்கிட்டு வந்தேன். குடும்பமே என் பொண்ணை நினைச்சு அழுதோம்'' என்ற போது அருகில் அமர்ந்திருந்த பரமசிவத்தின் மனைவி பழனியம்மாள், ``அந்தப் பாவிகளுக்குத் தூக்குத் தண்டனைதான் கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தோம். ஏன்னா, என் பெண்ணுக்கு நேர்ந்த கதி, இந்த உலகத்துல வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. அவங்கள எல்லாரையும் தூக்கில் போட்டால்தான் உயிரின் வலி என்னான்னு தெரியும்'' என்று ஆதங்கப்பட்டார்.

மனைவியை அமைதிப்படுத்திவிட்டு, பரமசிவம் பேசினார், ``குத்தம் செஞ்சவங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் என் பொண்ணு போனது போனதுதான் திரும்பி வராது. நான் பொறந்த பொறப்புக்கே அர்த்தமில்லாமப் போச்சு. என் பொண்ணை அந்த ஊருல அடக்கம் பண்ணிட்டு வந்ததோட சரி அந்தப் பக்கமே போனதில்லை. ஓட்டுப் போடக்கூட அங்குப் போக மாட்டோம். அந்த ஊரைத் திரும்பிப் பார்க்க மனசுல தெம்பு இல்லை.'' என்றார் வேதனை வெளிப்பட.