Election bannerElection banner
Published:Updated:

''பூர்ணிமா பாக்யராஜின் ஆலோசனை, 10 தொழிலாளர்கள் '' - ஆடை பிசினஸில் கலக்கும் ஜீவஜோதி

''பூர்ணிமா பாக்யராஜின் ஆலோசனை, 10 தொழிலாளர்கள் '' -  ஆடை பிசினஸில் கலக்கும் ஜீவஜோதி
''பூர்ணிமா பாக்யராஜின் ஆலோசனை, 10 தொழிலாளர்கள் '' - ஆடை பிசினஸில் கலக்கும் ஜீவஜோதி

ஜீவஜோதி எனப் பெயர் வைத்தாலும், கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட பிறகு, ஜீவஜோதி தன் வாழ்கையில் ஜீவனும் ஒளியும் இல்லாமலேயே இருந்திருக்கிறார்.வாழ்நாளில் ஒரு பகுதியை வழக்கு, விசாரணை எனக் கழித்தவர், தனக்கான நீதி கிடைப்பதற்கு பெரும் பகுதியைச் செலவுசெய்தார்.18 ஆண்டுகள் இவர் பட்ட கஷ்டத்திற்கு சாட்சியே இந்த வழக்கில் வந்துள்ள தீர்ப்பு.

ஜீவஜோதி, அத்தனை எளிதில் யாராலும் மறந்துவிட முடியாத ஒரு பெயர். சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், தன்னிடம் வேலைபார்த்த ஊழியரின் மகள் ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்துகொள்ள விரும்பியதும், அது ஜீவஜோதியின் கணவர் கொல்லப்படும் அளவுக்குச் சென்றதும் ஊர் அறிந்ததே.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது. ஜூலை 7-ம் தேதிக்குள் ராஜகோபால் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் வெளியான இந்த தீர்ப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்த ஜீவஜோதி, 'பவின்' என்கிற பெயரில் அசைவ ஹோட்டலையும், 'ஆரி உலகம்' என்கிற பெயரில் மகளிர் தையலகம் ஒன்றையும் நடத்திவருகிறார். ஆரி, ஜர்தோஸி, ஹேண்ட் எம்ப்ராய்டரி என மணப்பெண்ணுக்கான ஜாக்கெட் வடிவமைக்கும் தொழிலிலும்  நல்ல வளர்ச்சியைச் சந்தித்துவருகிறார்.  

ஜீவஜோதியின் உறவினர்களிடம் பேசினோம். ''தன்னோட கணவர் கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படணும்ங்கிறதுல ஜீவ ஜோதி உறுதியா நின்னுச்சு. ஜெயலலிதா அம்மாவைப் பார்த்து உண்மையைச் சொல்லி கதறியிருக்காங்க. நிச்சயம் நியாயம் கிடைக்கும் வகையில் விசாரணை நடக்கும்னு அம்மா சொல்லவும், நம்பிக்கையானாங்க.வாழவேண்டிய வயசுல கோர்டுக்கும், போலீஸ் நிலையத்துக்கும் அந்தப் பொண்ணு நடந்ததை நினைச்சு நாங்க வருத்தப்படாத நாள் இல்ல. ஜீவஜோதியோட நிலைமையை மாத்த நினைச்ச அம்மா, திருவாரூர் கலெக்டரோட ஆபீஸ்ல ஒரு வேலைபோட்டுக் கொடுத்தார். 

வேதாரண்யம் தோத்தாக்குடியில் இருந்த ஜீவஜோதியைத் தேடி, வேலைக்கான ஆர்டரோடு போலீஸ்காரங்க வந்தப்ப, நாங்கெல்லாம் சந்தோஷப்பட்டோம். வேலைக்கான ஆர்டரை சந்தோஷமா வாங்கிட்டாங்க ஜீவஜோதி.  ஆனா, தினமும் அவங்களைப் பத்தி பேப்பர் முதற்கொண்டு புத்தகம் வரை எல்லாத்திலேயும் நியூஸ் வந்ததுனால கவனத்தோட வேலைபார்க்க முடியலைங்கிற காரணத்தைச் சொல்லி,  'என்னை மன்னித்துவிடுங்கள்'னு போலீஸ் உயர் அதிகாரிகள்மூலம் ஜெயலலிதாவிற்கு தெரியப்படுத்தியிருக்காங்க. அதுக்குப் பிறகு, ஆறு மாதம் கழித்துதான் அந்த வேலைக்கான ஆர்டரை கேன்சல் செஞ்சாங்களாம். இதெல்லாம் ஜீவா சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்.

மனசுக்கு நிம்மதி வேணும்ங்கிறதுக்காக டெய்லரிங்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சது ஜீவா. அவங்க அம்மாவும் டெய்லரிங்க்ல எக்ஸ்பர்ட். அதனால பொண்ணுக்கும் அந்த ஆசை, திறமை இயல்பாவே வந்தது ஆச்சர்யமா இல்லை.  ஜீவாவின் அம்மாதான் ஜீவாவுக்கு டெய்லரிங் கத்துக்கொடுத்திருக்காங்க. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் பக்கத்துல 'ஜீவா டெய்லரிங்' ஆரம்பிச்சதுல இருந்து, அது  நல்ல நிலைமைக்கு வர ஆரம்பிச்சது. அப்போதான் மணமகளுக்கான ஜாக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டாங்க ஜீவா.

சென்னையில், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தான் மணமகளுக்கான பிரத்தியேக ஜாக்கெட் வடிவமைப்பை செய்துட்டிருக்காங்கங்கிறதைத் தெரிஞ்சுகிட்டு, ஒரு நண்பர் மூலமா பூர்ணிமா மேடத்தோட ஆலோசனைகளைப் பெற்றிருக்காங்க. அதை அடிப்படையா வெச்சு தொழில் ஆரம்பிக்க நினைச்சப்ப, ஏகப்பட்ட தடங்கல்கள்.   ஆனாலும், மூணு வருஷத்துக்கு முன்னாடி ஆரி உலகம்ங்கிற பேர்ல அவங்க ஆரம்பிச்ச பிசினஸ் இன்னைக்கு 10 தொழிலாளர்களோட அமோகமா போகுதுங்க. சொந்த வீடு, காருனு வசதியா இருக்காங்க.

மலேசியா,சிங்கப்பூர்னு வெளி நாடுகளில் இருக்கும் ஏஜென்ஸி மூலமாகவும் ஜீவாவுக்கு ஜாக்கெட் ஆர்டர் வருது.  வாழ்க்கையில கஷ்டப்படுற பொண்ணுங்களுக்கு ஜீவா ஒரு முன்னுதாரணம்னுதான் சொல்லுவேன். எத்தனையோ மன உளைச்சல்கள், சங்கடங்கள் வந்தப்பவும் அதையெல்லாம் தாங்கிகிட்டு, இன்னைக்கு ஒரு பிசினஸ்ல ஜெயிச்சிருக்காங்க ஜீவா. பத்து நாளைக்கு முன்னாடி அவங்க மகனுக்கு பொறந்தநாள். ஒரு தாயா நான் ஜெயிச்சுட்டேன்... ஒரு பொண்ணா ஜெயிக்கணும்னு சொல்லிட்டு இருந்துச்சு ஜீவா. ராஜகோபாலுக்கு கிடைச்ச தண்டனையை அந்தப் பொண்ணு கேட்டதும், கண்ணுல தண்ணீர். என் கஷ்டத்துல உடனிருந்த உறவுகளுக்குத்தான் நன்றி சொல்லணும்னு ஜீவா உணர்ச்சிப்பெருக்குல சொல்லுச்சு'' என்று நெகிழ்ந்தார் உறவுக்காரர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு