Published:Updated:

``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க!''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு நெகிழ்ச்சி அஞ்சலி

``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க!''-  நாமக்கல் டாக்டர் கலாவுக்கு நெகிழ்ச்சி அஞ்சலி
``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க!''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு நெகிழ்ச்சி அஞ்சலி

"உண்மையிலேயே டாக்டரோட இறப்பு என்னால தாங்கவே முடியலைங்க. அந்தக் கடவுள்தான் இப்படி ஒரு டாக்டரை எனக்குக் காட்டினான். நல்ல மனிதர்களை, கடவுள் இவ்வளவு சீக்கிரமாவா எடுத்துக்குவான்?"

`நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கிய டாக்டர், சுவர் இடிந்து விழுந்து பலியானார்' என்ற செய்தியைக் கேள்விப்பட்டோம். யாரோ ஒரு டாக்டர் பலியாகிவிட்டார் என்று அனைவரும் கடந்து போயிருக்கக்கூடும். ஆனால், சுவர் இடிந்து பலியான டாக்டர் கலா, தன் வாழ்நாளை ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர் என்ற தகவல், பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த விளம்பரமும் இல்லாமல் சத்தமில்லாமல் சேவை செய்துவந்த டாக்டர் கலாவின் மறைவும், பத்தோடு ஒரு செய்தியாகிவிட்டது!

நாமக்கல் என்றால், பிராய்லர் கோழியும் பிரபல பள்ளிகளும்தான் நினைவுக்கு வரும். கூடவே இன்னொரு தொழிலுக்கும் நாமக்கல் ஃபேமஸ். லாரி தொழிலில், நாமக்கல்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன். நாமக்கல்லிலிருந்து தினமும் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் செல்லும். சென்றவை ஹெச்.ஐ.வி-யைச் சுமந்துகொண்டு திரும்பும். ஹெச்.ஐ.வி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத 1990-ம் ஆண்டுகளில், நாமக்கல் லாரி டிரைவர்களிடத்தில் ஹெச்.ஐ.வி பாதிப்பு அதிகம் இருந்தது. தனக்கு ஹெச்.ஐ.வி இருப்பது தெரியாமலேயே மனைவியிடத்திலும் உறவு வைத்துக்கொள்வார்கள். விளைவு... கர்ப்பம் அடையும் பெண்களையும் ஹெச்.ஐ.வி தொற்றியிருக்கும். இந்தச் சமயத்தில் ஹெச்.ஐ.வி- யால் பாதிக்கப்பட்ட கருணாநிதி என்பவர், 1998-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் `ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் நெட்வொர்க்' என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி, பாதிக்கப்பட்டோரை  ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருந்தார்.  

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பது, மீதி வாழ்க்கையை எப்படி நிம்மதியாகக் கழிப்பது போன்ற விழிப்புணர்வு பணிகளில் கருணாநிதி ஈடுபட்டுக்கொண்டிருந்தார். கருணாநிதிக்கு, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லாத குழந்தையைப் பெற்றுக்கொள்ளவைப்பது பெரிய சவாலாக இருந்தது. ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறுவைசிகிச்சை செய்துதான், குழந்தைகளைத் தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். நார்மல் டெலிவரி ஏற்பட்டால், குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டுவிட வாய்ப்பு உண்டு. இதற்கு அந்தக் காலகட்டத்தில் 15,000 ரூபாய் வரை செலவாகும்.

பணம் செலவழிக்கத் தயாராக இருந்தாலும் அறுவைசிகிச்சை செய்ய மருத்துவமனைகள் தயாராக இருக்காது. அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களை, தட்டிக்கழிப்பார்கள். இதனால், கர்ப்பிணிப் பெண்கள் சொல்ல முடியாத துயரத்தைச் சந்தித்தனர். இந்தச் சமயத்தில்தான் டாக்டர் கலாவும் அவரின் கணவர் செல்வக்குமாரும் தெய்வம்போல கருணாநிதிக்குக் கிடைத்தனர். 

இந்தத் தம்பதியர், நாமக்கல்லில் பூர்ணிமா என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவந்தனர். இவர்களிடத்தில் அணுகி தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளைக் கருணாநிதி எடுத்துச் சொன்னார். ``நாங்கள் இருக்க இனி உங்களுக்குப் பயம் ஏன்... எத்தனை பேர் என்றாலும் என்னிடத்தில் அனுப்புங்கள். நான் அறுவைசிகிச்சை செய்து குழந்தைகளை எடுக்கிறேன்'' என்று கருணாநிதிக்கு நம்பிக்கை சொன்னார் டாக்டர் கலா.

கிட்டத்தட்ட 1998-ம் ஆண்டு முதல் இறக்கும் வரை டாக்டர் கலா. ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட 500 பெண்களுக்கு அறுவைசிகிச்சை செய்துள்ளார். ஆபரேஷன் தியேட்டர் செலவு, மயக்க மருந்து ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்டோருக்கான செலவு என, சொற்பத்தொகையை மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொள்வார். அறுவைசிகிச்சை செய்து குழந்தைகளை வெளியே எடுத்ததோடு, தன் பணி முடிந்துவிட்டது என்று அவர் இருந்துவிடுவதில்லை. வாரம் ஒருமுறை குழந்தை பெற்ற பெண்ணின் வீட்டுக்குச் சென்று, தாயையும் சேயையும் தொடர்ந்து கண்காணிப்பார். எப்படி சத்தமில்லாமல் சேவை செய்துகொண்டிருந்தாரோ... அதேபோல் அவரின் இறப்பும் சாதாரணமாகவே போய்விட்டது. 

டாக்டர் கலா குறித்து கருணாநிதியிடம் பேசியபோது, ``உண்மையிலேயே டாக்டரோட இறப்பு என்னால தாங்கவே முடியலைங்க. அந்தக் கடவுள்தான் இப்படி ஒரு டாக்டரை எனக்குக் காட்டினான். நல்ல மனிதர்களை, கடவுள் இவ்வளவு சீக்கிரமாவா எடுத்துக்குவான்? ஹெச்.ஐ.வி நோயாளிங்கனு எங்களை ஒதுக்கித் தள்ளிய டாக்டர்களுக்கு மத்தியில எங்களை அரவணைச்ச டாக்டர் அவங்க. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு அவங்கதாங்க தெய்வம். பணம் பிடுங்குற மருத்துவமனைகளைத்தான் பார்த்திருப்போம். இங்க நாங்க சிகிச்சைக்குப் போனா, கையில காசு இல்லைன்னு தெரிஞ்சா பணம் கொடுத்து அனுப்புவாங்க.

எங்க சங்கத்துல வாரத்துக்கு ஒரு முறை மீட்டிங் போடுவோம். அதுல, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டாலும் எப்படி வாழணும்னு விழிப்புணர்வு ஏற்படுத்த டாக்டர் கலாவும் அவங்க கணவர் டாக்டர் செல்வகுமாரும் வருவாங்க. ஒரு வாரம்கூட வராம இருந்ததில்லை. யாராவது ஒருவர் மாறி மாறி வருவாங்க. ஹெச்.ஐ.வி-னு இந்தச் சமூகத்துலயிருந்து எங்களை ஒதுக்கிவெச்ச காலகட்டத்துல, எங்களுக்காக நேரத்தை ஒதுக்கித் தந்த தெய்வமுங்க. அந்தத் தெய்வத்தை நாங்க இழந்துட்டும்யா'' என விம்மினார்.

அடுத்த கட்டுரைக்கு