Published:Updated:

``எங்களுக்கு யாரும் ஆதரவில்லை; சீக்கிரமே குணமாகி நாப்கின் தயாரிக்கணும்!" - புற்றுநோயில் வாடும் `நாப்கின்' வள்ளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``எங்களுக்கு யாரும் ஆதரவில்லை; சீக்கிரமே குணமாகி நாப்கின் தயாரிக்கணும்!" - புற்றுநோயில் வாடும் `நாப்கின்' வள்ளி
``எங்களுக்கு யாரும் ஆதரவில்லை; சீக்கிரமே குணமாகி நாப்கின் தயாரிக்கணும்!" - புற்றுநோயில் வாடும் `நாப்கின்' வள்ளி

``எனக்கு மெனோபாஸ் ஏற்பட்ட காலகட்டத்துல, ரத்தப்போக்கு மிக அதிகமா இருந்துச்சு. இந்தப் பாதிப்பு, பல மாதங்களாகியும் சரியாகலை. எனவே, பலகட்ட முயற்சிகள், மருந்து மாத்திரிகளைப் பயன்படுத்தியும் பலன்கிடைக்கவேயில்லை."

"நீங்க யாரு? என்ன வேலை செய்றீங்க?" - மருத்துவ சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வள்ளியிடம் மருத்துவர்கள் கேட்ட கேள்வி இது. `என் பெயர் வள்ளி. மூலிகை நாப்கின் தயாரிக்கிற வேலை செய்றேன்' என்கிறார், வள்ளி. அவரிடம் மேலதிக விவரங்களைக் கேட்டறிந்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி. 

"பெண்களுக்கு ரொம்பவே பயன்தரக்கூடிய மூலிகை நாப்கின் தயாரிக்கிற உங்களைப் பத்தி நிறைய கேள்விபட்டிருக்கோம். உங்களைப் பார்க்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தோம். அது நீங்கதான்னு தெரியாது. ஆனா, இந்த நிலையில உங்களைச் சந்திப்போம்னு நாங்க நினைக்கவேயில்லை" என்று வள்ளியின் கரம் பற்றி ஆறுதல் கூறுகின்றனர், மருத்துவர்கள். மலிவு விலையில் மூலிகை நாப்கின் தயாரித்தும், அதுகுறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கொடுத்தும் தொழில்முனைவோராக வளர்ந்து வருபவர்தான், திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த வள்ளி. 

``எங்களுக்கு யாரும் ஆதரவில்லை; சீக்கிரமே குணமாகி நாப்கின் தயாரிக்கணும்!" - புற்றுநோயில் வாடும் `நாப்கின்' வள்ளி

நாப்கின் தயாரிப்புப் பயிற்சி வகுப்புகளை புன்னகையுடன் தொடங்குவதுதான் வள்ளியின் பழக்கம். ஆனால், இவர் வாழ்வின் பெரும் பகுதி கண்ணீர் மற்றும் வலிகளால் சூழப்பட்டவை. வள்ளி, தன் மூன்று பிள்ளைகளையும் வளர்க்க எதிர்கொண்ட சிரமங்கள் அதிகம். அதற்கெல்லாம் இவர் கலங்கி உட்கார்ந்தவரில்லை. இந்நிலையில், தன் உடல்நலனில் ஏதோ பிரச்னை இருப்பதை அறிந்த வள்ளி, இது சாதாரணமான ஒன்றாகவே இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன்தான் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவர் நம்பிக்கை பொய்த்துப்போனது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, வள்ளிக்குக் கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதனால் வள்ளிக்கு மட்டுமன்றி, மருத்துவர்களுக்கும்கூட அதிர்ச்சிதான். 

``மாதவிலக்கு தருணத்துல சில மணிநேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாத்தணும். விழிப்புணர்வு இல்லாமை, செலவைக் குறைப்பது உள்ளிட்ட காரணங்களால், பல பெண்கள் ஒரே நாப்கினை பலமணிநேரம் அல்லது நாள் முழுக்கப் பயன்படுத்துறாங்க. இதனால், அதிக ரத்தப்போக்கு, நீர்க்கட்டி, வெள்ளைப்படுதல், கருத்தரிப்பதில் சிக்கல் உட்பட பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பெண்கள் பலர் புலம்புவாங்க. மேலும், சில பிராண்டு நாப்கினைப் பயன்படுத்துவதாலும் இதுபோன்ற பிரச்னைகள் வருவதாகவும் பெண்கள் சொல்வாங்க. அதனால்தான் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வங்கிக் கடனுதவி பெற்று மூலிகை நாப்கினைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். மேலும், மூலிகை நாப்கின் தயாரிச்சு நிறைய தொழில்முனைவோர்கள் உருவாகணும்னு படிச்சவங்க, படிக்காதவங்க, உயர் பொறுப்பில் உள்ளவங்கனு பலருக்கும் பயிற்சிக் கொடுத்துட்டிருக்கேன்" என்கிற வள்ளியின் தொழில் பயணம் இத்துடன் நிற்கவில்லை. வறுமையால் சுற்றுவட்டார ஊர்களுக்குக்கூடச் செல்லமுடியாத நிலையிலிருந்தவர், நாப்கின் தயாரிப்புக்கான பயிற்சி கொடுக்க நேபாளம் வரை சென்றிருக்கிறார்.  

``எங்களுக்கு யாரும் ஆதரவில்லை; சீக்கிரமே குணமாகி நாப்கின் தயாரிக்கணும்!" - புற்றுநோயில் வாடும் `நாப்கின்' வள்ளி

``கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்குச் சென்று மூலிகை நாப்கின் குறித்து விழிப்புணர்வும் கொடுத்துட்டிருக்கேன். ஏராளமான தோல்வி, புறக்கணிப்புகளுக்குப் பிறகு படிப்படியாய் வரவேற்பு கிடைச்சுகிட்டிருக்குது. நான் தயாரிக்கிற மூலிகை நாப்கினைப் பயன்படுத்துற பெண்களுக்கு நல்ல பலன் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் சொல்றாங்க." - வள்ளி, தன் தொழில் பயணத்தில் படிப்படியாய் முன்னேறிவருகிறார். இதனால், `சிறந்த தொழில்முனைவோரு'க்கான அவள் விகடன் விருதையும் கடந்த ஆண்டு பெற்றிருந்தார், வள்ளி.

``எங்களுக்கு யாரும் ஆதரவில்லை; சீக்கிரமே குணமாகி நாப்கின் தயாரிக்கணும்!" - புற்றுநோயில் வாடும் `நாப்கின்' வள்ளி

``பெண்களுக்கு உதவும் நோக்கில், நான் சில சோதனை முயற்சிகளைச் செய்துபார்த்தேன். அதனால் எனக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டுச்சு. குறிப்பா, எனக்கு மெனோபாஸ் ஏற்பட்ட காலகட்டத்துல, ரத்தப்போக்கு மிக அதிகமா இருந்துச்சு. இந்தப் பாதிப்பு, பல மாதங்களாகியும் சரியாகலை. எனவே, பலகட்ட முயற்சிகள், மருந்து மாத்திரிகளைப் பயன்படுத்தியும் பலன்கிடைக்கவேயில்லை. இந்நிலையில்தான், கடந்த டிசம்பர் மாதம் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்குப் போனேன். அங்க என் கர்ப்பப்பையை நீக்கணும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அந்தச் சிகிச்சைக்கு என்கிட்ட போதிய பணமில்லை. அதனால ஓரளவுக்குப் பணத்தைத் தயார் பண்ணிக்கிட்டு, ரெண்டு மாதத்துக்கு முன்பு மீண்டும் ஆஸ்பத்திரிக்குப் போனேன்" - வார்த்தைகள் தடுமாற, கண்ணீரால் தன் தற்போதைய நிலையை வெளிப்படுத்துகிறார், வள்ளி.

கர்ப்பப்பை நீக்குவதற்கான ஆபரேஷன் நடந்தபோது வள்ளிக்குப் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து உறுதிசெய்துள்ளனர். உடனடியாக ஆபரேஷனை கைவிட்டுவிட்டு... புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. தற்போது வள்ளிக்கான ஆதரவு அவரின் மூன்று பிள்ளைகள் மட்டுமே! மூவரும் குடும்ப வறுமையை உணர்ந்து, தொழிற்பயணத்தில் தாயுடன் கரம் கோத்து பல ஆண்டுகளாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். 

``இப்போ ஆஸ்பத்திரியில சிகிச்சை பெற்றுவரும் என்னை, கல்லூரி இறுதியாண்டு படிக்கிற மகள்தான் கவனிச்சுக்கிறாள். பெரிசா சொந்தப் பந்தங்கள்னு சொல்லிக்கவும் யாருமில்லை. ப்ளஸ் டூ முடிச்சிருக்கிற சின்னப் பையன் சதீஷூக்குக் கல்லூரிப் படிப்பு கனவாகிடுமோங்கிற அச்சம் தவிப்பை ஏற்படுத்தியிருக்கு. குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து, என் மூணு பிள்ளைகளும் பொறுப்போடு செயல்படுறாங்க. இப்போ என் ரெண்டு மகன்களும்தான், நாப்கின் தயாரிப்பு தொழிலைக் கவனிச்சுக்கிறாங்க. அவனுங்க உழைப்பாலதான், எங்க குடும்பமே இப்போ இயங்கிட்டிருக்கு." - கண்ணீர் பெருக்கெடுக்க, உரையாடலுக்குச் சற்றே ஓய்வுகொடுக்கிறார் வள்ளி.  

``எங்களுக்கு யாரும் ஆதரவில்லை; சீக்கிரமே குணமாகி நாப்கின் தயாரிக்கணும்!" - புற்றுநோயில் வாடும் `நாப்கின்' வள்ளி

வலிகளும் வேதனைகளும் வள்ளிக்குப் புதிதில்லை. அவற்றை எதிர்கொள்ளவும் இவர் பின்வாங்கியதில்லை. அந்த வகையில் புற்றுநோய் பாதிப்பும் விதிவிலக்கில்லை. தன் போராட்ட குணத்தால், புற்றுநோயிலிருந்து மீண்டு விடுவார், வள்ளி. ஆனால், வறுமை நிலையால் மருத்துவச் சிகிச்சைகளுக்கான பணத்தேவைக்காக மட்டுமே கலங்குகிறார்.  

``தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக இப்போ சிகிச்சை எடுத்துகிட்டிருக்கேன். இது மட்டுமே போதலை. மேற்கொண்டு மருத்துவச் சிகிச்சைகளுக்காக பண உதவியை எதிர்பார்க்கிறேன். இப்போதைய என் வறுமை நிலையில, சின்ன பையனை காலேஜ் படிக்க வைக்க முடியுமாங்கிறதே சந்தேகமாகிடுச்சு. தொழிலுக்காக வங்கியில் வாங்கின நாலரை லட்சம் கடனும் இருக்கு. அதனால நான் சீக்கிரமே குணமாகி, தொழிலை கவனிக்கணும். 

எனக்குப் புற்றுநோய் ஏற்பட்டதால நான் வருத்தப்படலை. நாப்கின் பயன்பாட்டில் முறையான விழிப்புணர்வு இல்லாத பெண்கள் பலருக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுது. அதை நானே அனுபவத்தில் உணர்ந்துட்டேன். இத்தகைய பாதிப்புகள் மற்ற பெண்களுக்கு வரக்கூடாது. அதுக்காக இனி இன்னும் அதிகமா உழைக்கப் போறேன்; விழிப்புணர்வு கொடுக்கப்போறேன்." - இந்த நம்பிக்கை குணமே, வள்ளியை ஆரோக்கிய நிலைக்கு விரைவில் மீட்டெடுத்துவிடும்.

- மீண்டு வருவீர்கள் வள்ளி!

வள்ளியின் சிகிச்சைக்காக, விகடன் உதவ முன்வந்துள்ளது. மேலும், வாசகர்களும் வள்ளிக்கு உதவ முன்வரலாம். உங்கள் உதவியை வள்ளியிடம் நாங்கள் கொண்டுச்சேர்க்கிறோம். வள்ளிக்கு உதவ நினைப்பவர்கள், கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் பண உதவியை அளிக்கலாம்.

வாசகர்களின் கவனத்துக்கு...

வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு `SAVE VALLI’ என description-ல் குறிப்பிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்!

1. இந்தியாவில் இருக்கும் வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் ஹெச்.டி.எஃப்.சி வங்கி சேமிப்பு கணக்கு எண் 00040330019032 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோட்: HDFC 0000004, ஐ.டி.சி. மையம் கிளை, சென்னை - 600 002) மூலம் அனுப்பலாம்.

2. வெளிநாட்டு வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ்.சி கோட் :  IDIB000C032, ஸ்விப்ட் கோட் : IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை - 600 008) மூலம் அனுப்பலாம். 

3. நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர் மற்றும் காசோலை அல்லது டி.டி வாயிலாக உதவ நினைப்போர், `வாசன் அறக்கட்டளை' ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 முகவரியில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

4. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு