Published:Updated:

வழக்குரைஞர் வேலை பெண்களுக்கு ஏற்றதா?! #Letslearn

வழக்குரைஞர் வேலை பெண்களுக்கு ஏற்றதா?! #Letslearn
வழக்குரைஞர் வேலை பெண்களுக்கு ஏற்றதா?! #Letslearn

எவ்வளவு பெரிய ரௌடிகள் என்றாலும் வழக்கறிஞர்களை மதித்து, அவர்களுக்குக் கட்டுப்படுவார்கள். நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது மட்டுமே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

கத்துவா சிறுமி வழக்கில் நீதிக்காகப் போராடிய பெண் வழக்குரைஞர் தீபிகா சிங்க் ராஜவத்தை, இன்று இந்த தேசம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியப் பெற்றோர், தங்கள் பெண் குழந்தைகள் சட்டம் படிப்பதைப் பல்வேறு காரணங்கள் சொல்லித் தடுத்து, மகள்களின் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். 

பெண் கல்வி பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கும் நிலையில்கூட, இன்றளவும் நமது நாட்டில் `வழக்குரைஞர் வேலை பெண்களுக்கு உகந்த துறையல்ல, வழக்குரைஞர் ஆவது பெண்களுக்குப் பாதுகாப்பான தொழில் அல்ல' என்ற கருத்து பல பெற்றோரிடம் காணப்படுகிறது.

``வக்கீலுக்குப் படிக்கணும்னு கேட்டா... நான் ஒத்துக்கல. அப்புறம் மாப்பிள கிடைக்கிறது கஷ்டம்ல" - பக்கத்து வீட்டுத் தங்கையைக் கல்லூரியில் சேர்க்கும் தறுவாயில், அவர் அம்மா என்னிடம் இப்படித்தான் சொன்னார். 

வழக்குரைஞர் வேலை பெண்களுக்கு ஏற்றதா?! #Letslearn

இதுமட்டுமல்ல, `ரௌடிங்க, கொலைகாரங்ககிட்ட எல்லாம் பேசணும்', `டைவர்ஸ் வாங்கிக் கொடுக்கிற வேலை செய்தா, புகுந்த வீட்ல என் பொண்ணுக்கு அட்ஜஸ்ட் பண்ண வராது', `லா காலேஜ், ரெளடி காலேஜ்... அங்கெல்லாம் படிக்க வேண்டாம். பாதுகாப்பு இல்லை', `படிச்சதும், வேற ஆண் வக்கீல்கிட்டதான் ஜூனியரா வேலை செய்யணும்', `குடும்பப் பொண்ணுக்கு வக்கீல் படிப்பெல்லாம் சரிவராது', `வக்கீலுக்குப் படிச்சா, வீட்டுக்கு அடங்காம வாயாடியா இருப்பா' இப்படி எத்தனையோ காரணங்கள் பெண்களின் சட்டக்கல்விக் கனவை, கனவாகவே நிறுத்திவைத்திருக்கின்றன.  

சட்டம் படிப்பது, உண்மையில் பெண்களுக்கு ஏற்ற படிப்பு இல்லையா? பெண்கள் சட்டம் படிப்பதில் உள்ள சாதக, பாதகம் என்ன என்று சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் இருவரிடம் கேட்டோம். முதல் தலைமுறை வழக்குரைஞர்களான அவர்களின் சட்டம் பயின்ற கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது. 

வழக்குரைஞர் வேலை பெண்களுக்கு ஏற்றதா?! #Letslearn

சரஸ்வதி மெய்யப்பன் 
கல்லூரி: சென்னை சட்டக் கல்லூரி 
படித்த ஆண்டு: 1977 - 1980 


``என்னுடன் சேர்த்து எங்கள் வீட்டில் ஐந்து பேர். நான்கு பெண்கள், ஒரு ஆண். கல்வி மட்டுமே அழியாத செல்வம் என்று நினைத்த என் தந்தை, ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் வல்லுநர்களாக வர வேண்டும் என விரும்பினார். அவர் விருப்பப்படிதான் நான் சட்டம் படித்தேன். `சட்டம் பயிலப்போகிறேன்' என்றபோது சொந்தங்களிடையே சிறு சலசலப்பு இருந்தது. ஆனால், என் தந்தையிடம் பேசி அதைத் தடுக்க யாருக்கும் தைரியமில்லை. அன்று முதல் இன்று வரை இந்தத் துறை என்னை எந்த இடத்திலும் கைவிடவில்லை.

படித்து முடித்ததும் திருமணம் நடந்தது. என் கணவரும் வழக்குரைஞர்தான். அப்பாவைப் போலவே அவரும் என் மாமனாரும் என் வளர்ச்சியில் பெரும் பங்குகொண்டவர்கள். வழக்குரைஞராக நான் சந்தித்த சவால்கள் எல்லாம் பொதுவானவையே. நான் ஒரு பெண் என்பதால் எனக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. கண்ணியதோடு என் சக மாணவர்களும், வழக்குரைஞர் நண்பர்களும் என்னை அணுகினார்கள். அதற்கு ஏற்றாற்போல்தான் நானும் நடந்துகொண்டேன்.

வேலைக்குச் செல்லும் எல்லா பெண்களைப்போலத்தான் பெண் வழக்குரைஞர்களின் வாழ்க்கையும். உண்மையைச் சொன்னால், இந்தப் படிப்பில் கிடைக்கும் சட்ட அறிவு பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் வழங்குகிறது. தன்னிச்சையான ஒரு தொழில் என்பதால், குடும்பத்துக்காக நேரம் செலவிடுவது போன்ற பல விஷயங்களுக்கு வழக்குரைஞர் தொழில் சிறப்பாகக் கைகொடுக்கும்." 

வழக்குரைஞர் வேலை பெண்களுக்கு ஏற்றதா?! #Letslearn

மஹாலக்ஷ்மி 
கல்லூரி : சென்னை சட்டக் கல்லூரி 
வழக்குரைஞர் படிப்பு: 2009 - 2014 

``என் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விக்கினம்பட்டி என்ற கிராமம். பத்தாம் வகுப்பு முடித்ததும் வரலாறு பாடப்பிரிவு எடுத்துப் படித்தேன். என் ஆசிரியர்கள், `இவ பெரிய வக்கீலாகப்போறா' எனச் சொல்ல, அதுவே என் கனவாகவும் ஆனது. ப்ளஸ் டூ முடித்து, `சட்டம் படிக்கப்போகிறேன்' என்றதும், ஊரே என்னை எதிர்த்தது. `தந்தை இல்லாத பெண்ணை வெளியூருக்குச் சட்டம் படிக்க அனுப்புறது நல்லதில்ல' என்று என் அம்மாவிடம் சொல்லிவிட்டனர். பெரும் போராட்டங்களைச் செய்துதான் கல்லூரியில் சேர்ந்தேன்.

கல்லூரிக் கட்டணம் 2,000 ரூபாய்தான் என்பதால், வேறு வழியின்றி என்னை அனுமதித்து விட்டனர். இருப்பினும், ஓரிரு வருடங்களிலேயே உண்மையைப் புரிந்துகொண்டனர். நண்பர்கள், மூத்த வழக்குரைஞர்கள் உதவியோடு சட்டம் முடித்து, இன்று உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றுகிறேன். எவையெல்லாம் நினைத்து என் வீட்டில் பயந்தார்களோ, அவை  எல்லாமே பொய்யாகிவிட்டன. என் மீதான மரியாதை எல்லோரிடத்திலும் கூடியிருக்கிறது. ஒரு வழக்குரைஞராக இருப்பது என்னைக் கூடுதல் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. எவ்வளவு பெரிய ரௌடிகள் என்றாலும் வழக்குரைஞர்களை மதித்து, அவர்களுக்குக் கட்டுப்படுவார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது மட்டுமே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும், சட்டத் துறையிலும் அப்படியே. பெண்களுக்கு இதைவிடவும் சிறந்த துறை இருக்க முடியாது என்பதே என் கருத்து."

இரு வழக்குரைஞர்களின் அனுபவங்களுக்கும் முப்பது ஆண்டுக்கால இடைவெளி இருக்கிறது. ஆனால், நம் சமூகம் மட்டும் இன்னும் மாறாமல் இருப்பது கவலைக்குரிய விஷயமே. தனக்கான கனவைப் போராடியாவது அடைந்துவிட வேண்டும் என்ற தைரியம், இன்றைய பெண்களுக்கு அதிகரித்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அடிப்படை சட்ட அறிவு இன்று அனைவருக்குமே அத்தியாவசியம் எனும்போது, கூடுதல் சட்ட அறிவும் சட்டப்படிப்பும் பெண்களுக்கு நன்மையே பயக்கும்.

அடுத்த கட்டுரைக்கு