Published:Updated:

''சைக்கிள் ஓட்டத் தெரியாதவ இப்போ ஆட்டோ ஓட்டுறேன்!" - தூத்துக்குடியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்

''சைக்கிள் ஓட்டத் தெரியாதவ இப்போ ஆட்டோ ஓட்டுறேன்!" - தூத்துக்குடியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்
''சைக்கிள் ஓட்டத் தெரியாதவ இப்போ ஆட்டோ ஓட்டுறேன்!" - தூத்துக்குடியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்

“சைக்கிள்கூட சரியா ஓட்டத் தெரியாத நான், இன்னைக்கு ஆட்டோ ஓட்டுறேன்னா அதுக்குக் காரணம் என்னோட தன்னம்பிக்கை. ஆண்களோட வருமானத்தை மட்டும் எதிர்பார்க்காம பெண்களும் சொந்தக்காலில் நிற்கணும்” என கட்டை விரல் உயர்த்திச் சொல்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஆட்டோ டிரைவர் ரூபாதேவி.

“சைக்கிள்கூட சரியா ஓட்டத் தெரியாத நான், இன்னைக்கு ஆட்டோ ஓட்டுறேன்னா அதுக்குக் காரணம் என்னோட தன்னம்பிக்கை. ஆண்களோட வருமானத்தை மட்டும் எதிர்பார்க்காம பெண்களும் சொந்தக்காலில் நிற்கணும்” எனக் கட்டைவிரல் உயர்த்திச் சொல்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஆட்டோ டிரைவர் ரூபாதேவி.  

சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண்களை ஆங்காங்கே பார்க்க முடியும். சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் ஆட்டோ ஓட்டும் பெண்களைப் பார்ப்பது அரிதுதான். ஆண்களுக்கு நிகராக எத்தனையோ துறைகளில் முன்னேறி வருகின்றனர் பெண்கள். ஆனால், ஆண்களின் வசம் இருக்கும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் குறிப்பிடத்தக்க வகையில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் இருப்பதற்குக் காரணம், இத்தொழிலில் உள்ள சிரமங்களும் பாதுகாப்பற்ற சூழலும்தான். இந்நிலையில், தூத்துக்குடியில் தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஓட்டிவருகிறார் ரூபாதேவி. தூத்துக்குடியின் முதல் பெண் ஆட்டோ டிரைவரும் இவர்தான்.

காலை நேரம். மாணவர்களைப் பள்ளிகளில் இறக்கிவிடுவதற்காகக் காக்கிச்சட்டையை அணிந்துகொண்டு ஆட்டோவைக் கிளப்பிய ரூபாதேவி, வாகன நெரிசல் மிகுந்த சாலையிலும் சாமர்த்தியமாக ஓட்டிச் சென்று குழந்தைகளைப் பள்ளியில் பத்திரமாக இறக்கிவிட்டார். அவர்களுக்கு 'டாட்டா' காட்டிவிட்டு சிரித்த முகத்துடன் அடுத்த சவாரிக்காக வண்டியைத் திருப்பியவரிடம் பேசினோம். நமக்காக சில நிமிடங்கள் ஒதுக்கிப் பேச ஆரம்பித்தார்.

''சைக்கிள் ஓட்டத் தெரியாதவ இப்போ ஆட்டோ ஓட்டுறேன்!" - தூத்துக்குடியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்

“தூத்துக்குடி, மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு சோட்டையன்தோப்புலதான் என் வீடு இருக்கு. அதே பகுதியிலதான் என்னோட பொறந்த வீடும் இருக்கு. ஏழாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். அதுக்கு மேல வீட்டுல படிக்க அனுப்பலை. எனக்கு கல்யாணமாகி 19 வருஷமாச்சு. கணவரோட பேரு ரத்தினகுமார். நாகர்ஜூன், பவதாரணினு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. மூத்தவன் நாகர்ஜூன் 12-ம் வகுப்பும்  பவதாரணி 10-ம் வகுப்பும் படிக்கிறாங்க.

என் கணவர் கட்டடக் கொத்தனார் வேலை பார்க்கிறார். மணல் பிரச்னை, கட்டுமானப் பொருள்களோட மூலப்பொருள்கள் விலைஉயர்வுனு பல காரணங்களால வேலையே நடக்கிறதில்ல. வாரத்துக்கு மூணு நாள் வேலை இருந்தாலே அது பெரிய விஷயம்தான். கூடுதல் வருமானத்துக்காக அக்கம் பக்கத்துல உள்ள பெண்களுக்கு ஜாக்கெட், சுடிதார் தைச்சுக் கொடுத்தேன். சிலர் உடனே பணம் கொடுத்திடுவாங்க. சிலர் இழுத்தடிப்பாங்க. ஒரு கட்டத்துல வீட்டுக்குள்ள ரொம்ப கஷ்டமான சூழ்நிலையாயிடுச்சு. 'ஒத்த ஆளு வருமானத்தை வெச்சிக்கிட்டு குடும்பத்தை நடத்த முடியாது. அதனால, நானும் ஏதாவது வேலைக்குப் போறேன்'னு கணவர்கிட்ட சொன்னேன். சரினு சொன்னார்.

என்ன வேலை செய்யலாம்னு யோசிச்சப்போ என் தம்பி சிவகுமார்தான், 'என்னை மாதிரியே நீயும் ஆட்டோ ஓட்டுறியாக்கா?'னு கேட்டான். 'சைக்கிளே சரியா ஓட்டத் தெரியாத என்னப் பாத்து ஆட்டோ ஓட்டுறியான்னு கேட்கியே... என்னலே நக்கல் பண்றியா?'ன்னேன். 'இல்லக்கா.. நிஜமாத்தான் சொல்றேன். ஆட்டோ ஓட்டு. ஸ்கூல் நடை எடுத்தா ஓரளவு வருமானம் கிடைக்கும். ஏன் ஆட்டோ ஓட்டப் பயப்படுறியா..?'ன்னு கேட்டான். நானும் தம்பி சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன். பல ஊர்கள்லயும் பெண்கள் ஆட்டோ ஓட்டுறாங்கன்னு பேப்பர்ல படிக்கிறோம், டி.வியிலயும் பார்க்குறோம். அவங்களால செய்யமுடிஞ்சதனாலதானே கத்துக்கிட்டு ஆட்டோ ஓட்டுறாங்க, அவங்களும் பெண்கள்தானேன்னு நினைச்சு, ஆட்டோ ஓட்டக் கத்துக்க முடிவு செஞ்சேன். தம்பிகிட்ட சொன்னேன். அவனும் சந்தோஷப்பட்டான். கடந்த 2018 மே 1-ம் தேதி ஆட்டோ ஓட்டிப் பழக ஆரம்பிச்சேன்.   

''சைக்கிள் ஓட்டத் தெரியாதவ இப்போ ஆட்டோ ஓட்டுறேன்!" - தூத்துக்குடியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்

முதல்ல, ஆட்டோவுல ஏறி உட்காரவே பயந்தேன். ஆட்டோ ஸ்டார்ட் ஆனதும் அந்த சத்தத்தைக் கேட்டு கை, கால் உதற ஆரம்பிச்சிடுச்சு. தினமும் காலையில 5.30 மணிக்கு தம்பி, மாநகராட்சி ஆபிஸுக்கு நடைக்குப் போவான். நானும் அவன்கூடவே போயிட்டு, வீட்டுக்கு ரிட்டர்ன் வரும்போது அப்படியே ஆட்டோ ஓட்டிப் பழகினேன். ஒரு மாசத்துல நல்லா ஓட்டிப் பழகிட்டேன். ஆர்.டி.ஓ ஆபீஸ்ல காக்கி யூனிஃபார்ம்ல லேர்னர் லைசன்ஸ் போடப் போனப்போவே எல்லாரும் ஆச்சர்யமா பார்த்தாங்க. முதல்ல, எங்க அம்மாவை வெச்சு ஓட்டினேன். பிறகு கணவர், குழந்தைகளை வெச்சு ஓட்டினேன். ஜூன் மாசம் ஸ்கூல் ட்ரிப் எடுக்க ஆரம்பிச்சேன். இப்போ ஒரு வருசமா ஆட்டோ ஓட்டுறேன்” என்று மூச்சுவிடாமல் பேசியவர் சிறிது இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தார்.     

''மாநகராட்சிப் பணியாளர்களை இறக்கிவிட்டுட்டிருந்த என் தம்பியோட சவாரியை இப்போ நான்தான் பார்த்துக்கிறேன். தினமும் காலையில 5.30 மணிக்கு மாநகராட்சி ஊழியர்கள் சவாரியை முடிச்சுட்டு 6.30 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன். 8 மணிக்குள்ள சமையலை முடிச்சிட்டு,  8.15 மணியில இருந்து 10 மணி வரை ஸ்கூல் சவாரியை முடிப்பேன். சாயங்காலம் 4 மணியில இருந்து 5.30 மணி வரைக்கும் ஸ்கூல் சவாரி இருக்கும். இடைப்பட்ட நேரத்துல துணி துவைக்கிறது, தண்ணீர் எடுக்குறதுன்னு ஏதாவது வீட்டு வேலைகளைப் பார்ப்பேன். இந்த நேரங்களில் யார் எப்போ சவாரிக்குக் கூப்பிட்டாலும் என்ன வேலை செஞ்சுக்கிட்டிருந்தாலும் அப்படியே போட்டுட்டு, காக்கிச் சட்டையை தூக்கி மாட்டிட்டு ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணிட்டுக் கிளம்பிடுவேன். அது இரவு நேரமா இருந்தாலும் சரி.

இந்த ஆட்டோவை வாங்கும்போது அதுல ஏற்கெனவே 'யோகலெட்சுமி'ன்னு ஒரு பேரு இருந்துச்சு. 'படிக்காதவன்' படத்துல ரஜினிக்கு ஒரு 'லெட்சுமி' மாதிரி நமக்கு இது இருக்கட்டும்னு அதே பேரை வெச்சுக்கிட்டேன். தூத்துக்குடியில இருந்து வெளியூருக்கு அதிகபட்சமா 40 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் சவாரிக்குப் போயிருக்கேன். சொந்தக்காரங்க சிலர் நான் ஆட்டோ ஓட்டுறதை நக்கலாவும் கிண்டலாவும் பேசுவாங்க. நான் அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலை. ஆட்டோ ஓட்டிட்டுப் போகும்போது, பலரும் எனக்குக் கையசைச்சும் கைகொடுத்தும் பாராட்டியிருக்காங்க. பாதுகாப்பான பயணமா இருக்கும் என்ற நம்பிக்கையில் என்னோட ஆட்டோவுல மக்கள் தைரியமா ஏறி வர்றாங்க. பெண் வாடிக்கையாளர்கள் பலர் எனக்கு போன் பண்ணி சவாரிக்குக் கூப்பிடுறாங்க. 

''சைக்கிள் ஓட்டத் தெரியாதவ இப்போ ஆட்டோ ஓட்டுறேன்!" - தூத்துக்குடியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்

டீசல் செலவு போக தினமும் 300 முதல் 400 வரைக்கும் வருமானம் கிடைச்சிடுது. லேசா முதுகுவலி மட்டும் இருக்கும். நல்லா தூங்கினா சரியாபோயிடும். கடந்த மார்ச் 8-ல் தூத்துக்குடியில நடந்த மகளிர் தின விழாவுல என்னைப் பாராட்டி தனியார் அமைப்பு விருது கொடுத்தாங்க. விபத்தில்லாம ஆட்டோ ஓட்டணும்; நம்பி ஆட்டோவுல ஏறுறவங்களைப் பத்திரமா இறக்கிவிடணும். இதுதான் முக்கியம்.

எந்தக் கஷ்டம் வந்தாலும் சமாளிச்சிடலாம்னு ஒவ்வொரு பெண்ணும் நினைக்கணும். குடும்பக் கஷ்டத்துல குழந்தைகளை விட்டுட்டு தற்கொலை செஞ்சுக்கிற செய்தியையெல்லாம் கேட்கும்போது  மனசு பதறுது. குடும்பம்னு இருந்தா கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதே நேரத்துல கஷ்டம் கஷ்டம்னு மட்டும் சொல்லிக்கிட்டிருந்தா கஷ்டம் தீரப்போறது இல்ல. கணவரோட வருமானம் காணலேன்னா, அவரோட குடும்பச் சுமையில  பங்கெடுத்துக்கிறது மாதிரி பெண்களும் அவங்கவங்களுக்குத் தெரிஞ்ச வேலைகளைச் செய்யணும்.

நானும் எல்லா பெண்கள் மாதிரியும் ஒரு வேலை பார்த்திருந்தாக்கூட இந்த அளவு அங்கீகாரமும் பாராட்டும் மரியாதையும் கிடைச்சிருக்குமான்னு தெரியலை. ஒரு நாள் பொழுதைக் கழிக்கவே ரொம்பக் கஷ்டப்பட்ட நான், இன்னைக்கு ஓரளவு சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கேன்னா, அதுக்குக் காரணம் என்னோட தன்னம்பிக்கையும் உழைப்பும்தான்” என அவர் பேசி முடிக்கவும் அடுத்த சவாரிக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது. ரூபாதேவியின் தன்னம்பிக்கைச் சிரிப்புடன் ஆட்டோவும் நகர்ந்தது!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு