Published:Updated:

``டிரெயின் என் காலில் ஏறினதுதான் நினைவிருந்துச்சு... இப்போ வீராங்கனை!" - சுபஜாவின் தன்னம்பிக்கை

சுபஜா
News
சுபஜா

''ஆறு மாசம் கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்ல கிடந்தேன். அதுக்கப்புறம் அங்கே இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கூடப் பொறந்தவங்களாலேயும் என்னை ஆதரிக்க முடியாத சூழ்நிலை. வேற வழியில்லாம தவழ்ந்தே ஹாஸ்பிட்டல்ல இருந்து வெளியே வந்தேன்.''

மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து விளையாட்டில் நேஷனல் லெவலில் தேர்வாகியிருக்கும் சுபஜாவிடம் பேசும்போது, பாரதியின் 'வீழ்வேனென்று நினைத்தாயோ' என்கிற வரிதான் மனம் முழுக்க அலைமோதிக்கொண்டே இருந்தது. பிறந்த ஒரு வருடத்துக்குள் தகப்பனை இழந்து, 10 வயதில் தாயையும் இழந்தவர் சுபஜா. இவருடன் பிறந்த மூன்று அக்காக்கள், இரண்டு அண்ணன்கள் என ஆறு பேரும் ஆதரவற்றோர் விடுதியில் படித்து வளர்ந்தவர்கள். நொடிப்பொழுது விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த சுபஜா, இன்று அதையே படிகளாக்கி வீல் சேர் கூடைப்பந்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார். 

``டிரெயின் என் காலில் ஏறினதுதான் நினைவிருந்துச்சு... இப்போ வீராங்கனை!" - சுபஜாவின் தன்னம்பிக்கை

''பொறந்தப்போ நான் அழ ஆரம்பிச்சது இன்னமும் என் வாழ்க்கையில நிக்கலைக்கா. ஆனா, ஒரு கட்டத்துக்கு மேலே அந்த அழுகையை என் பிரச்னைக்கான வடிகாலா எடுத்துட்டு, அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவேன்'' - யதார்த்தமான நேர்மையுடன் பேச ஆரம்பிக்கிறார் சுபஜா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''பொறந்தது நாகர்கோவிலில். பெத்தவங்க தவறினதும் அங்கேயே ஆதரவற்றோர் விடுதியில தங்கிப் படிச்சோம். நான் ப்ளஸ் டூ முடிச்சப்போ, என்கூடப் பொறந்தவங்களுக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சிருச்சு. சென்னையில இருந்த அக்காங்களைப் பார்க்கிறதுக்காக டிரெயின் புடிக்க ஓடி வந்தப்போதான், கால் இடறி தண்டவாளத்துல விழுந்து, டிரெயின் என் ரெண்டு கால் மேலேயும் ஏறின விபத்து நடந்துச்சு. யாரோ ஒரு பெரியவர் என்னைப் பத்தி காவல்துறைக்குத் தகவல் கொடுத்து காப்பாத்தியிருக்காரு.

ஆறு மாசம் கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்ல கிடந்தேன். அதுக்கப்புறம் அங்கே இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கூடப் பொறந்தவங்களாலேயும் என்னை ஆதரிக்க முடியாத சூழ்நிலை. வேற வழியில்லாம தவழ்ந்தே ஹாஸ்பிட்டல்ல இருந்து வெளியே வந்தேன். புண்ணு கால்ல ஈ மொய்க்க ரோட்டுல பிச்சைக்காரி மாதிரி கிடந்த என்னை, அந்தப் பக்கமா வந்த கன்னியாஸ்திரிங்க மீட்டு ஒரு இல்லத்துல சேர்த்தாங்க. அந்த இல்லத்துக்கு எஸ்தர் அப்படீங்கிற ஜெர்மன் லேடி ஒருத்தவங்க வந்திருந்தாங்க. அவங்ககிட்டே வெகுளித்தனமா எனக்குத் தெரிஞ்ச அரைகுறை இங்கிலீஷ்ல பேசினேனா... அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு'' என்கிற சுபஜாவின் குரலில் முதன்முறையாக சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.

அந்த ஜெர்மன் பெண்மணிதான், சுபஜாவுக்கு செயற்கைக்கால் பொருத்த உதவி செய்திருக்கிறார். செயற்கைக் காலுடன் நடக்கப் பயிற்சி எடுத்ததும், அதே எஸ்தர் உதவியுடன் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்திருக்கிறார். ஒரு சின்ன பெண்ணின் தலையில், வெறும் நான்கு (2006 - 2010) வருடங்களில், விதி இத்தனை வரிகளையும் எழுதிச் சென்றிருக்கிறது.

``டிரெயின் என் காலில் ஏறினதுதான் நினைவிருந்துச்சு... இப்போ வீராங்கனை!" - சுபஜாவின் தன்னம்பிக்கை

''படிச்சு முடிச்சதும் என் பெரியக்கா வீட்ல தங்கிட்டு, அக்கம் பக்கத்துல இருக்கிற பிள்ளைகளுக்கு டியூசன் எடுத்துட்டு இருந்தேன். மத்த நேரங்கள்லேயும் வீட்டு வேலைகள்ல அக்காவுக்கு உதவியா இருப்பேன். என் கட்டைக்காலைக் காரணம் காட்டி வேலை செய்யாம இருக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லக்கா. என் ஃப்ரெண்ட் ஒருத்தி மதுரையில இருந்தா. அவகிட்டே போயிடலாம்னு டிரெயின் ஏறிட்டேன். ஆனா, அவ கல்யாணமாகி சிவகங்கை போயிட்டா. அவளைப் பார்க்கிறதுக்காக சிவகங்கை போனேன். அப்புறம் அங்கேயே ஒரு நூல் மில்லுல வேலைக்குச் சேர்ந்தேன். ரூபாய் நோட்டு மதிப்பிழந்தப்போ, எனக்கு வேலை போயிடுச்சு. எனக்கு வேலை கேட்டு சிவகங்கை மாவட்டக் கலெக்டர்கிட்ட மனு கொடுக்கப்போனேன். அங்க ஒரு மாற்றுத்திறனாளி, 'நீ படிச்ச பொண்ணுதானே, நீ இங்க மனு எழுதி சம்பாதிக்கலாமே' னு சொன்னார். எழுத ஆரம்பிச்சேன். தினமும் 100 ரூபாயாவது கிடைச்சிடும். தொடர்ந்து இந்த வேலையே பார்க்க ஆரம்பிச்சேன். இப்ப, நான் மனு எழுதித் தந்தா என் கைராசிக்கு உடனே அவங்க வேலை முடிஞ்சிடுதுன்னு சொல்லிக்கிட்டு வீடு தேடி வந்தெல்லாம் மனு எழுதி வாங்கிட்டுப் போறாங்க'' என்கிற சுபஜாவின் வாழ்க்கையில், கரன்ட் கட்டான ஒரு மாலை நேரம்தான் விளக்கேற்றியிருக்கிறது.

``டிரெயின் என் காலில் ஏறினதுதான் நினைவிருந்துச்சு... இப்போ வீராங்கனை!" - சுபஜாவின் தன்னம்பிக்கை

''எங்க ஏரியாவில் தினமும் சாயங்கால வேளையில கரன்ட் கட்டாகிடும்க்கா. அப்படியொரு நாள் போன்ல ஃபேஸ்புக் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ, ரமேஷ் என்ற காலை இழந்த மாற்றுத்திறனாளி ஒருத்தர், தமிழ்நாடு சார்பாக வீல் சேர் பாஸ்கெட் பால் விளையாடுறாருன்னு தெரிஞ்சுக்கிட்டு, அவருக்குப் போன் போட்டுப் பேசினேன். எனக்கும் அந்த விளையாட்டை விளையாட விருப்பம்னு சொன்னேன். அவரும் கொஞ்ச நேரம் தன்னம்பிக்கையா பேசினாரு. அப்புறம் வேலைப்பளுவுல என்னை மறந்துட்டாரு. ஆனா, நான் விடலை. இந்த விளையாட்டுல ஃபவுண்டேஷன் க்ளாஸ் எடுக்கிறவங்களோட நம்பரை தேடிப் பிடிச்சு, டிரெய்னிங் எடுக்க ஆரம்பிச்சேன். முதல்ல நான் போடற பால்களெல்லாம் கூடைக்குள்ளே போய் விழவே விழாது. ரெண்டு வருஷம் விடாம பயிற்சி எடுத்தேனா... வந்துடுச்சு. இப்ப, 'அஞ்சு வருஷம் பிராக்டீஸ் ஆனவங்க மாதிரி விளையாடுறீங்க'ன்னு என் கோச் பாராட்டுறாரு. ஸ்டேட் லெவலில் விளையாடிக்கிட்டிருந்த என்னை நேஷனல் லெவல்ல விளையாட செலக்ட் பண்ணியிருக்காங்க. அதுக்காக அடுத்த வாரம் பஞ்சாப் கிளம்பப் போறேன்'' என்கிற சுபஜா மட்டும்தான், அவருடைய டீமில் நார்மலாகப் பிறந்து இரண்டு கால்களையும் விபத்தில் பறிக்கொடுத்த வீராங்கனை. மற்றவர்களெல்லாம் பிறவிலேயே அல்லது முதுகுத்தண்டுவடப் பிரச்னையால் மாற்றுத்திறனாளி ஆனவர்கள்.

``டிரெயின் என் காலில் ஏறினதுதான் நினைவிருந்துச்சு... இப்போ வீராங்கனை!" - சுபஜாவின் தன்னம்பிக்கை

''என்னோட 9 வயசுல, படுக்கையில கை, கால் விளங்காம கிடந்த எங்கம்மாவை குளிப்பாட்டி, அவங்களோட மலஜலம் எடுத்துப் போட்டிருக்கேன். அநாதையா ஆசிரமத்துல வளர்ந்திருக்கேன், ரெண்டு கால்களையும் இழந்திருக்கேன், தெருவோரத்துல பிச்சைக்காரங்க மாதிரி கிடந்திருக்கேன். எவ்வளவோ வலி, வேதனைகளைப் பார்த்துட்டேன். இப்போவெல்லாம் எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்கிற தைரியம் எக்கச்சக்கமா வந்துடுச்சு. நான் விளையாட்டுல ஜெயிக்கணும். இந்தியாவுக்காக விளையாடணும். இதுக்கெல்லாம் என்கிட்டே பொருளாதார பலமில்லைன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, கடவுள் ஏதாவது வழி காட்டுவாருக்கா!'' - ரயில் விபத்தில் முன் பற்களையெல்லாம் பறிகொடுத்த சுபஜா புன்னகைக்கையில், அவரது தன்னம்பிக்கை அந்தக் குறையை நிரப்புகிறது!