Published:Updated:

தூத்துக்குடியில் பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! - உதவிப் பேராசிரியர் பணியிடமாற்றம்

தூத்துக்குடியில் பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! - உதவிப் பேராசிரியர் பணியிடமாற்றம்
தூத்துக்குடியில் பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! - உதவிப் பேராசிரியர் பணியிடமாற்றம்

தூத்துக்குடியில் பயிற்சி மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் புகார் கூறப்பட்ட மருத்துவ உதவிப் பேராசிரியர் கந்தசாமி பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! - உதவிப் பேராசிரியர் பணியிடமாற்றம்

``நாங்கள் தற்போது மருத்துவ இறுதி ஆண்டு படித்து வருகிறோம். எங்களது வேலை நேரங்களில் எலும்புமுறிவு அறுவைசிகிச்சை நிபுணரான கந்தசாமி எங்களிடம் தவறான முறையில் பேசி வருகிறார். சில மாணவிகளை மிரட்டி தவறாக நடந்துகொண்டார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் மருத்துவப் படிப்பு முடித்த சான்று வழங்க மாட்டேன் என மிரட்டுகிறார். இதையே எங்கள் ஒவ்வொருவரின் புகாராக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். அந்த மருத்துவரை அழைத்துக் கண்டித்து மட்டும் விட்டுவிட்டால் எங்களுக்கு மீண்டும் பாலியல் தொந்தரவு தருவார். அதனால், பணிநீக்கமோ, இடமாற்றமோ செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு பயிற்சி மருத்துவர்கள்” எனப் பெயர் ஏதும் குறிப்பிடாத ஒரு புகார் கடிதம் கடந்த 10-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்புகார் விவகாரம் கடந்த சில நாள்களுக்கு முன்பு வாட்ஸ்அப்களிலும் கசிய ஆரம்பித்தது. பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கண்டனக் குரல்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, புகார் கூறப்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் எலும்புமுறிவு அறுவைசிகிச்சை நிபுணரும் உதவிப் பேராசிரியருமான கந்தசாமி மீதான புகார் குறித்து டீன் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், பேராசிரியர் லலிதா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர், இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். அவ்விசாரணை அறிக்கை மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவர் கந்தசாமி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! - உதவிப் பேராசிரியர் பணியிடமாற்றம்

மருத்துவத்துறையில் இன்னும் அவருக்குப் பணி ஒதுக்கப்படாததால் காத்திருப்போர் பட்டியலுக்கு அவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டு குறித்து மருத்துவர் கந்தசாமியிடம் பேசினோம், ``என் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு எதிராக சதி நடந்துள்ளது'' என்று மட்டும் சொன்னார்.

இதுகுறித்து, துாத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். ``மருத்துவர் கந்தசாமி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையின் அடிப்படையில் அவரை பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது. அதன்படி, அவர் உதவிப் பேராசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மருத்துவத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இனிமேல் அவர் பேராசிரியராகப் பணியாற்ற முடியாது'' என்றார். மருத்துவக் கல்லூரியில் மருத்துவரே பெண் மருத்துவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan