Published:Updated:

'செஞ்சோறு!' - சிறுகதை #MyVikatan

நமது நிருபர்
'செஞ்சோறு!' - சிறுகதை #MyVikatan
'செஞ்சோறு!' - சிறுகதை #MyVikatan

“என்னாப்பா சாரங்கா, எடுத்துடலாமா இல்ல யாராச்சும் வரணுமா?” “ஏ அந்த முட்டாப்பயல ஏன்டா கேட்டுகினு இருக்க?’ “இல்ல சித்தப்பா, என்னதான் இருந்தாலும் தாலி கட்னவன்” “இருங்கப்பா கனகத்தோட தம்பி வராப்ல, இப்பதான் போன் பன்னாப்ல. கடைசியா ஒருவாட்டி பாத்துட்டுப் போகட்டும்” கனகம் ஒரு நீளமான தட்டியில் கிடத்தப்பட்டிருந்தாள். உடல் முழுக்க வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டிருந்தது. கழுத்துப் பகுதியில் சற்று மேடாகத் தெரிந்தது. உட்புறம் வைக்கப்பட்டிருந்த வெள்ளைப்பஞ்சில் லேசான ரத்தக்கசிவு காய்ந்திருந்தது.

'செஞ்சோறு!' - சிறுகதை #MyVikatan 

தட்டியைச் சுற்றி நான்கைந்து கிழவிகளும் ஒன்றிரண்டு பெண்களும் முந்தானையை வாயோரம் பிடித்தபடி நின்றிருந்தார்கள். அருகில் நான்கைந்து நாய்களின் சத்தம் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது. முழுதாக ஒருநாள் ஆகப்போகிறது அவள் இறந்து. அவளுக்கு மூன்று குழந்தைகள். முதலில் இரண்டு பெண் பிள்ளைகளும் கடைசியாக ஒரு ஆணும். மூத்த பெண்ணுக்கு ஒன்பது வயது இருக்கும், அழுது தாளாமல் தட்டியின் ஒரு புறம் சுருண்டுகிடந்தாள். உள்ளூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு போகிறாள். இளையவள், அந்தச் சிறுவனை மடியில் வைத்துக்கொண்டு வெறித்தபடி எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் சிவந்திருந்தன. 

நேற்று காலை அவசரமாக வேலைக்குப் போகும்போதே, எதிர்வீட்டு சரசுவிடம் அவசர அவசரமாக வீட்டு சாவியைக் கொடுத்து, “நாலு நாலரைக்கெல்லம் பசங்க பள்ளிகோடம் உட்டு வந்துடுங்க, அதுங்ககிட்ட குடு. அந்தாளு கீளு வந்து கேட்டான்னா குடுத்துடாத, இருக்கிற ஒண்ணுரெண்டு சாமான்ஜெட்டையும் தூக்கினு போய்டுவான்” என்று இரைந்து விட்டுச்சென்றாள். அருகில் உள்ள கல் குவாரியில் அவளுக்கு வேலை. காலையில் குழந்தைகளுக்கு அவசரகதியில் உணவளித்து, பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஓடுவாள். திரும்பி வர பொழுது போய்விடும். லேசான மழை என்றால் அந்த வேலையும் இருக்காது. அந்த நாள்களில் இன்னும் சிரமம். அங்கிருக்கும் இருபது இருபத்தைந்து பெண்களுடன், டெம்போவில் நாலரை மைல் தூரத்தில் உள்ள கிராமத்துக்கு வயல் வேலைக்குச் செல்வாள். வேலை, சற்று பொழுது சாயும் முன்பே முடிந்தாலும், அங்கிருந்து வண்டி பிடித்து வீட்டுக்கு வர இருட்டாகிவிடும். கனகத்தின் கணவன் சாரங்கன் மாதத்தில் பாதி நாட்கள் குவாரியில் லாரி ஓட்டுவான். அதில் கிடைக்கும் பணமே மாதம் முழுதும் அவன் ‘டாஸ்மாக்’ எனப்படும் தமிழக வாணிபக் கழகத்திற்கு அளிக்கும் பங்கிற்குப் போதுமானதாக இருக்கும். அதற்கு மேலும் பணம் விளையாடும் நாட்களில், மேற்படி சமாசாரங்களுக்கு எப்படிப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். வாரக் கணக்கில் விடாமல் பொழியும் மழையினால் வேலையில்லாமல் இவனது அடிவயிறு காயும்போதுதான் வரும் பிரச்னை. வீட்டில் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா என்று ஆராய்வான். 


வீட்டுச் சுவரைத் தவிர மற்ற எந்தப் பொருளாக இருந்தாலும் அதனை எப்படி காசாக்குவது என்ற யுக்தி அவனுக்கு மட்டுமே தெரியும். இப்படி அவனால் ஒவ்வொரு நாளும் தகர்க்கப்படும்போதும், தன் குடும்பத்தை அயராத தன் உழைப்பால் மீட்டெடுப்பாள் கனகம். அவர்களுக்குள் சண்டை வராமல் இருந்தால்தான் அன்று அதிசயம். என்ன கொடுமை நடந்தாலும் கத்தவோ கூச்சல் போடவோ செய்ய மாட்டாள். அவன் என்னதான் திட்டினாலும் பொறுத்துக்கொள்வாள். எதிர் வீட்டு சரசு “ஏண்டி அந்தாளு என்ன செஞ்சாலும் பொறுத்து போற? அவன் கத்தினா பதிலுக்கு நீயும் கத்த வேண்டியதுதான? அந்தமாரி ஆளுங்களுக்கு, சளைக்காம நாமளும் சவுண்டு உட்டாதான் பொழப்ப ஓட்டலாம்” என்பாள். அதற்கு, “ரெண்டு பொம்பள புள்ளைங்கள வச்சிகினு ஊட்டுல நாற வார்த்த பேசுனா நல்லாவா இருக்கும்? புள்ளைங்க பெருசா ஆனா அந்தாளுக்கும் பொறுப்பு வந்துடும்னு பாத்துகினு இருக்கன். இல்லனா அவன் ஆடுற ஆட்டத்துக்கு என்னைக்கோ ஊரஉட்டு ஓடியிருப்பான்” என்று பதில் சொல்வாள் கனகம். அவள் இவ்வாறு சொன்னாலும், அவனுடன் எதிர்த்துப் போராட இவளுக்கு உடம்பிலோ மனதிலோ பலம் இல்லை என்பதை சரசும் அறிவாள்.

'செஞ்சோறு!' - சிறுகதை #MyVikatan


 

 சில நாட்களில் அவனுடைய மிருகத்தனம் முற்றி வெறித்தனமாக தாக்கப்பட்டும், உடலில் காயங்களுடன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சரசுவின் வீட்டுக்குத்தான் வருவாள். சரசு அவளுக்கு ஆறுதல் சொல்லுவாள். அவன் தெருவில் நின்று இரவு முழுக்க கத்திக்கொண்டிருப்பான். சில நாட்களாக அவன் வேலைக்குச் செல்லாமல், அடுத்த தெருவில் உள்ள செண்பா வீடே கதியாய்க் கிடந்தான். இது அரசல் புரசலாக கனகத்துக்கும் தெரியும். இருந்தும் அவனிடம் மன்றாட விருப்பம் இல்லாமல் விட்டுவிட்டாள். அவனுடைய சில்லரை வடிந்த பின் நேற்று காலை வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான். 

வழியில் சிங்காரம் நிறுத்தினான். “இன்னா தல வேலைக்கி போலையா ?” “எங்க, இந்த மழ பெஞ்சிட்டு பொழப்ப கெடுக்குதுப்பா” “இன்னிக்கி ஒரு வேல இருக்கு வரியா?”  “...”  “பஸ் ஸ்டாண்டு கிட்ட போராட்டம் தல, மதியம் வரைக்கும்தான்” “என்னா தேறும்?” “சாப்பாடு, எறநூறு ரூவா” “அடப்போப்பா, சரக்கில்லாம என்னா போராட்டம் பண்றானுங்க” “மது ஒழிப்புப் போராட்டம் தல” “அதுக்கு?” “தலைவர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம், இன்னக்கி மட்டும் சரக்கு போடாதிங்கன்னுட்டு”  “....”  “அதான் அமௌண்ட்டு நூறு ரூபா சேத்து குடுக்குராங்கல்ல, நாம வர்ரப்போ பாத்துக்கலாம்” “ நா ஊட்டுக்கு போயி சட்ட மாத்திட்டு வந்திர்ரேன்.” “இங்க ஸ்கூல்கிட்ட வேன் நிக்கும், சீக்கிரமா வந்துரு” சாரங்கன் அப்படிச் சொல்லிவிட்டு வந்தாலும், அவன் இப்படி போராட்டம் என்று சொல்லிக்கொண்டு வெயிலில் அலைய விரும்ப மாட்டான். அவனுக்கு அலையாமல் காசு கிடைக்க வேண்டும். வீட்டுக்கு வந்தான். கனகமும் நேற்று வேலை எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டன. அவன் கையில் சுத்தமாக காசு இல்லாமல் போனால்தான் வீட்டுப்பக்கம் வருவான் என்பது அவளுக்குத் தெரியும். அவள் பேச்சுக் கொடுக்கவில்லை. “பிள்ளைக பள்ளிக்கோடம் போய்டுச்சிங்களா கனகு ?”  “ம்”  “நாளைக்கி லோடு ஏத்தரானுவலாம், வேலைக்கி வரசொல்லி சிங்காரம் கூப்டான்”  “ம்”  “கையில சுத்தமா காசு இல்ல, ஒரு நூறு நூத்தம்பது இருந்தா தேவல”  “...”  “உண்ட எவ்ளோ இருக்கும் கனகு?”  “அரிசி, பருப்பு வாங்கவே சரசுட்ட தான்…” “ஆமா நீ என்னிக்கிடி ஒத்த பைசா இருக்குனு குடுத்த? ” சில நிமிடங்கள் இரைந்துவிட்டு வெள்ளை வேட்டி சட்டையில் கிளம்பிவிட்டான். 

பள்ளிக்கு அருகில் நின்ற வண்டியில், நாற்பது முதல் ஐம்பது பேர்கள் நின்றார்கள். வண்டியின் இரண்டு புறமும் அவர்களது கட்சிக்கொடி பறந்தன. சிறிது நேரத்தில் வண்டி நிறம்பிய பின் கிளம்பியது. பேருந்து நிலையத்தின் பின்புறம் நிறுத்திவிட்டு, ஆளுக்கொரு அட்டையைக் கையில் பிடித்துக்கொண்டார்கள். அவர்களின் நடுவே சாரங்கனும் நின்றான். சிறிது நேரத்தில் கூட்டம் பெருத்தது. தலைவரும் வந்து இறங்கினார். இவர்களின் முன்பாக நின்றுகொண்டு முழங்கினார். “மதுவை ஒழிப்போம்! குடியைக் காப்போம்!!” அவ்வாறே கூட்டமும், “மதுவை ஒழிப்போம்! குடியைக் காப்போம்!” அரைமணி நேரம் கத்தினார்கள். பின் பேருந்து நிலைய நிழலில் உட்கார்ந்துகொண்டார்கள். மதியம் பன்னிரண்டு மணி இருக்கும். கூட்டம் குறைய ஆரம்பித்தது. இவர்களும் தங்கள் வண்டியின் அருகில் கூடி, சில மணி நேரம் டாஸ்மாக்கில் மூழ்கிவிட்டு வீட்டுக்கு வந்தான்.

கனகம் சமைத்துக்கொண்டிருந்தாள். மதியம் சாப்பிடாமல் பசியில் இருந்ததால், சோற்றை ஒரு தட்டில் போட்டு வைத்துவிட்டு குழம்புக்காகக் காத்திருந்தாள். காலையில் நடந்தது அவன் கண்முன் வந்தது. போன வேகத்தில் செருப்பினை விட்டெறிந்தான். “ஏண்டி, நான் காசு கேட்டா தராம நீ மட்டும் சோத்த முழுங்குரியா? ” என்று வார்த்தைகளால் சுட ஆரம்பித்தான். கனகம் கொஞ்ச நேரம் பொறுத்தாள். பின், அவளும் பதிலுக்கு பேச ஆரம்பித்தாள். இப்படி சாதாரணமாகத்தான் ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே அவனுடைய சத்தம் அதிகமாகியது. கனகமும் கோபத்தில் சில வார்த்தைகள் பேசினாள். வழக்கமாக, சண்டையில் அவன் அருகில் கிடக்கும் கம்பு, செருப்புகளை எடுத்து வீசுவான். அதுபோல, அப்போதும் சுற்று முற்றும் பார்த்தான். அருகில் ஏதும் கிடைக்கவில்லை. பின்னால், அவள் கருவேலங்குச்சி கழிக்க எடுத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வீசிவிட்டான். அது அவ்வளவு குறிப்பாக அவளது கழுத்தில் பாயும் என்று அவனே எதிர் பார்த்திருக்க மாட்டான். அங்கேயே சரிந்துவிட்டாள் கனகம்.

 மூன்று பிள்ளைகளை காத்து, கொடியேற்ற மாடாய் உழைத்தவள், சிறு துடிதுடிப்புடன் கிடந்தாள். ஒரு வேகத்தில் அவன் கத்தியை விட்தெரிந்தாலும் அது இப்படி குடிகெடுக்கும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. உடனே பதறி ஓடினான், தூக்கினான் என்னென்னவோ செய்துபார்த்தான். பக்கத்து வீடுகளில் மருத்துவமனை செல்ல வண்டி ஏதும் இருக்கிறதா என அலைந்தான். அடுத்த சில நிமிடங்களில் சிறு அசைவும் இல்லை கனகத்திடம். அவளருகே கிடந்த தட்டில் ரத்தம் தோய்ந்து சோறு சிவப்பாகியிருந்தது. அதற்குள் சிறு கூட்டம் அங்கு கூடிவிட்டது. யாரோ ஒருவர் எடுத்துவந்த வண்டியில் ஏற்றி புறப்பட்டனர். மருத்துவமனையில் சில மணி நேரம் கழிந்தன. இறுதியில், வெள்ளைத்துணியில் சுற்றப்பட்டு வெளியில் வந்தது கனகத்தின் உடல்.

இன்னும் சிறிது நேரத்தில் அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கிறது. சாரங்கன் கண்ணீருடன் புரண்டான், கதறினான். வருவோர் போவோர் கால்களிலெல்லாம் விழுந்தான். யாரும் இவனைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் பார்த்தது எல்லாம் அந்த மூன்று பிள்ளைகளைத்தான். நேற்று கனகத்தின் ரத்தம் தோய்ந்த செஞ்சோற்றை யாரோ வெளியில் வீச, அதனைப் பங்குபோட அங்கே கத்திக்கொண்டிருந்த நாய்கள் சண்டையிட்டன. 

கதை : தியாகராஜன்  

'செஞ்சோறு!' - சிறுகதை #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/