Published:Updated:

2019-ம் ஆண்டின் 19 சூப்பர் பெண்கள்

super women
பிரீமியம் ஸ்டோரி
News
super women

2019-ம் ஆண்டில் பெண்கள் உலகில் பல்வேறு களங்களில் தடம் பதித்து கவனம் ஈர்த்த 19 பெண்கள் இவர்கள். இந்த ஆண்டு முழுமைத் தன்மை பெறுவதற்கு இவர்களும் காரணம் என்றால் மிகையில்லை!

365 நாள்கள்

கிரேட்டா துன்பெர்க்

15 வயதில் உலகின் கவனம் ஈர்க்க ஒருவரால் முடியுமா? ஆம் என்று நிரூபித்துள்ளார் கிரேட்டா துன்பெர்க். சுவீடன் நாட்டைச் சேர்ந்த துன்பெர்க் பருவநிலை மாற்றம் பற்றி 2011-ம் ஆண்டு தெரிந்துகொண்டார். எட்டு வயதான இந்தச் சிறுமி மூன்றாண்டுகள் இது குறித்தும், அதனால் மனித குலத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்து குறித்தும் படித்துத் தெரிந்துகொண்டு ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். விளைவு... ஆஸ்பர்கர் சின்ட்ரோம், ஓ.சி.டி, செலக்டிவ் மியூடிசம் என்று வரிசையாக உடல் உபாதைகளுக்கு உள்ளானார்.

கிரேட்டா துன்பெர்க்
கிரேட்டா துன்பெர்க்

அதன் பின்பும் முயற்சியைக் கைவிடாமல் இரண்டு ஆண்டுக்காலம் தன் வீட்டிலேயே மாற்றம் கொண்டுவர முயற்சி செய்தார் கிரேட்டா. கரிமத் தடத்தைக் குறைக்க வீட்டிலுள்ள பொருள்களை மறுசுழற்சி செய்தல், விமானங்களில் பறத்தலைத் தவிர்த்தல் என்று குடும்பமே கிரேட்டா சொல்லுக்குக் கட்டுப்பட்டு பூமி வெப்ப மயமாதலைத் தடுக்க தங்களால் இயன்றதைச் செய்தது.

வீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டதால் மனமகிழ்ந்த கிரேட்டா, 2018-ம் ஆண்டில் தனிநபர் விழிப்புணர்வுப் போராட்டங்களைப் பள்ளியிலும் முன்னெடுத்தார். ஒவ்வொரு விடுமுறை நாளிலும் சுவீடன் நாட்டு நாடாளுமன்ற வாசலில் அமர்ந்து சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க வேண்டும், இயற்கையைப் பாதுகாக்க வழிமுறை செய்ய வேண்டும், குழந்தைகள் வாழத் தகுதியான உலகம் வேண்டும் என்று பதாகைகளைப் பிடித்துக்கொண்டு முழங்கினார். குழந்தைகள் ஆதரவு பெருக, பொதுமக்கள் ஆதரவும் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்ற பேரணியைத் தலைமை தாங்கி நடத்தினார்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சுவீடனிலிருந்து பாய்மரப் படகு மூலம் அட்லாண்டிக் கடலை தனியே கடந்து அமெரிக்கா சென்றார் கிரேட்டா. மாநாட்டில் `ஹவ் டேர் யூ?' என்று குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலையற்ற உலகத் தலைவர்களை நோக்கிக் கேள்வி எழுப்பினார். புகழ்பெற்ற ‘டைம்’ இதழ் கிரேட்டாவை 2019-ம் ஆண்டின் `டைம் பர்சன் ஆஃப் தி இய'ராகத் தேர்ந்தெடுத்துள்ளது. சூழலியல் குறித்து கிரேட்டா ஏற்படுத்திவரும் சமூக விழிப்புணர்வை `கிரேட்டா துன்பெர்க் எஃபெக்ட்' என்றே குறிப்பிடுகின்றன பத்திரிகைகள். இந்த ஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார் கிரேட்டா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மதுரை சின்னப்பிள்ளை

2019-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ பட்டியலில் இடம்பிடித்தவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 66 வயதான சின்னப்பிள்ளை. கடந்த 30 ஆண்டுகளாக தன்னை சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் சின்னப்பிள்ளை, `களஞ்சியம்' என்ற பெயரில் மகளிர் சுய உதவிக் குழு அமைப்பை நிர்வகித்து வருகிறார். தமிழகம் முழுவதும் சுமார் 2,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்க உதவியிருக்கிறார் இவர்.

மதுரை சின்னப்பிள்ளை
மதுரை சின்னப்பிள்ளை

மரபுசார் வேளாண்மைமீது கொண்ட ஈடுபாட்டால், அது குறித்த விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார் சின்னப்பிள்ளை. தமிழகத்தில் மருத்துவ முகாம்களை நடத்தவும் உதவுகிறார். கடந்த 2000-வது ஆண்டு `ஸ்த்ரீ புரஸ்கார்' விருதை இவருக்கு வழங்கி கௌரவித்த அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இவரது சமூக சேவையைப் பாராட்டும் வகையில் சின்னப்பிள்ளையின் கால்களைத் தொட்டு வணங்கினார். கிராமப்புறங்களில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை நகரத்துப் பெண்களும் பயன்படுத்தலாம் என்ற தெளிவைக் கொண்டுவந்தவர் சின்னப்பிள்ளை. இப்போது 12 மாநிலங்களைச் சேர்ந்த 250 கூட்டமைப்புகளுக்குத் தலைவியாக முதிய வயதிலும் ஓடி உழைத்து வருகிறார் இந்த அம்மணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சௌமியா சுவாமிநாதன்

லக சுகாதார நிறுவனம் (WHO) புதிதாக உருவாக்கும் துறையின் தலைமை விஞ்ஞானியாக (WHO அமைப்பின் இரண்டாவது பெரிய தலைமைப் பதவி இது) சௌமியா சுவாமிநாதனை நியமித்திருக்கிறது. இந்த அமைப்பின் துணைப் பொது இயக்குநர் பதவியைக் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வகித்துவந்தார் சௌமியா. அந்தப் பதவியை வகித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் இவருக்கே.

சௌமியா சுவாமிநாதன்
சௌமியா சுவாமிநாதன்

மருத்துவப் மேற்படிப்பு பயின்றிருக்கும் சௌமியா, காசநோய் மற்றும் ஹெச்.ஐ.வி. பற்றிய ஆய்வு மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள்!

ரோஷ்னி மல்ஹோத்ரா

ரோஷ்னி மல்ஹோத்ரா
ரோஷ்னி மல்ஹோத்ரா

புகழ்பெற்ற கணிப்பொறி நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரோஷ்னி மல்ஹோத்ரா 2019-ம் ஆண்டின் `ஃபோர்ப்ஸ் டாப் 100' பெண்கள் பட்டியலில் 54-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஹெச்.சி.எல் நிறுவனரான ஷிவ்வின் மகளான ரோஷ்னி, வெல்த் ஹுருன் இந்தியா ரிச் பட்டியலின்படி நாட்டின் மிகப்பணக்காரப் பெண்மணி என்ற சிறப்பையும் பெறுகிறார். டெல்லியில் பிறந்து வளர்ந்த ரோஷ்னி, அமெரிக்காவின் கெல்லாக் மேலாண்மைக் கல்லூரியில் பயின்றார். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, தந்தையின் நிறுவனத்திலேயே பணியாற்றத் தொடங்கினார். ஒரே ஆண்டில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னையின் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் தாளாளராகப் பணியாற்றிய ரோஷ்னி, அருமையாகப் பாடக்கூடிய இசைக்கலைஞரும்கூட. 2010-ம் ஆண்டு, சங்கர் மல்ஹோத்ராவைத் திருமணம் செய்துகொண்டார் ரோஷ்னி. தம்பதிக்கு அர்மான், ஜஹான் என்று இரு குழந்தைகள்.

சொசிபினி துன்சி

மிஸ் யுனிவர்ஸ் 2019... பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டிருக்கும் சொசிபினி துன்சி தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்பினப் பெண். மிகச் சாதாரணப் பின்புலம்கொண்ட சொசிபினி, நான்கு சகோதரிகளுடன் வளர்ந்தவர். 2017-ம் ஆண்டு, மிஸ் தென்னாப்பிரிக்கா போட்டியில் பங்கேற்ற இவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. மீண்டும் 2019-ம் ஆண்டு கலந்து கொண்டு வெற்றிபெற்றார். இதன் மூலம் பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா சார்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. முதல் மூன்று போட்டியாளர்கள் மட்டும் கலந்து கொண்ட இறுதிக் கேள்விச் சுற்றில் சொசிபினியிடம் முன்வைக்கப்பட்ட கேள்வி... `இன்றைய இளம்பெண்களுக்கு நாம் என்ன கற்றுத்தர வேண்டும்?' பதிலளித்த சொசிபினி, `நாம் தலைமைப் பண்பையே சொல்லித்தர வேண்டும். இன்றைய பெண்களுக்கும் நாளைய பெண்களுக்கும் இதுவே அவசியம். பெண்களுக்குத் தலைமைப் பண்பே தேவையில்லை என்று சமூகம் ஒதுக்கியே வைத்திருக்கிறது. சமுதாயத்தில் மிக பலசாலிகள் பெண்களாகிய நாம்தாம்' என்று பதில் அளித்தார்.

சொசிபினி துன்சி
சொசிபினி துன்சி

2011-ம் ஆண்டு லெய்லா லோபஸ் என்ற பெண்ணுக்குப் பின் பிரபஞ்ச அழகியாக முடிசூடும் கறுப்பினப் பெண் சொசிபினிதான். ஆஃப்ரோ எனப்படும் ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் பாணி தலைமுடியைக் கொண்ட பெண் ஒருவர் பிரபஞ்ச அழகியாவது இதுவே முதன்முறை!

ரைகா செதாப்ச்சி

சிறந்த குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றவர் இரானிய-அமெரிக்கப் பெண் ரைகா செதாப்ச்சி. 1990-களில் வளைகுடா போரின்போது அகதிகளாக அமெரிக்காவில் குடிபுகுந்த இரானியக் குடும்பங்களில் ஒன்று ரைகாவுடையது. நிறத்திலிருந்து மொழி வரை அத்தனையும் பிரச்னைதான். ஆனாலும், படித்துத் தேறிய ரைகா, திரைப்படங்கள், குறும்படங்கள் இயக்குவதில் ஆர்வம்காட்டத் தொடங்கினார்.

ரைகா செதாப்ச்சி
ரைகா செதாப்ச்சி

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஆசிரியை மெலிசா பர்டன் பணியாற்றும் ஓக்வுட் பள்ளி மாணவிகள் `தி பேட்' என்கிற திட்டத்தை வடஇந்தியாவில் செயல்படுத்திவருவதை அறிந்தார் ரைகா. இந்தியப் பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள் ஓக்வுட் பள்ளி மாணவிகளை பாதிக்க, பேட் செய்யும் கருவி ஒன்றை டெல்லியை அடுத்த ஹாபூர் என்ற சிற்றூரில் நிறுவினார்கள் அந்த மாணவிகள். அந்தக் கருவி மூலம் கிராமப் பெண்களுக்கு என்ன மாற்றம் வந்தது என்பதை `பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்' என்ற குறும்படமாக இயக்கினார் ரைகா. படத்தின் தயாரிப்பாளர் ஆசிரியை மெலிசாதான்!

கிறிஸ்டினா கோச் & ஜெசிகா மேய்ர்

மெரிக்க விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மேய்ர் ஆகிய இருவரும் `பெண்களின் முதல் ஸ்பேஸ் வாக்' எனப்படும் விண்வெளி நடை சாதனையை நிகழ்த்தினர். முழுக்க முழுக்க பெண்களே விண்வெளி நடை மேற்கொள்வது இதுவரை நிறைவேறாத கனவாகவே இருந்தது.

கிறிஸ்டினா கோச் & ஜெசிகா மேய்ர்
கிறிஸ்டினா கோச் & ஜெசிகா மேய்ர்

2019 செப்டம்பர் 25 அன்று சோயூஸ் எம்.எஸ்.15 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சென்ற ஜெசிகா, தோழி கிறிஸ்டினாவுடன் இணைந்து அக்டோபர் 15 அன்று பெண்கள் மட்டுமே பங்கேற்ற விண்வெளி நடை சாதனையை நிகழ்த்திக் காட்டினார். “நீங்கள் இருவரும் மிகச் சிறந்தவர்கள். உங்கள் பணி அளப்பரியது. வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் உங்களை வாழ்த்துகிறேன்” என்று பூமியிலிருந்து வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஜெசிந்தா ஆர்டர்ன்

ந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட பெண்களில் ஒருவர் இவர். நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்ன், கிரைஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் பாதிக்கப்பட்டவர்களுடன் துணை நின்றது, கட்டியணைத்து உருகியது, அதன்பின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எடுத்த கடுமையான நடவடிக்கைகள் என்று உலகின் கவனம் ஈர்த்தார். 39 வயதான ஜெசிந்தா எளிய பின்புலத்திலிருந்து இந்த நிலைக்கு உயர்ந்தவர். தந்தை காவல் துறை வீரர், தாய் சமையல் வல்லுநர். கல்லூரியில் படிக்கும் போதே உணவுக் கடையில் பகுதி நேரப் பணியாளராக வேலை செய்துவந்தார் ஜெசிந்தா. 17 வயதில் லேபர் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்த ஜெசிந்தா, 37 வயதில் (2017-ம் ஆண்டு) அந்தக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்து அந்த நாட்டின் மிக இளம் வயதுப் பிரதமரானார்.

ஜெசிந்தா ஆர்டர்ன்
ஜெசிந்தா ஆர்டர்ன்

தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின், தனியார் துப்பாக்கிகள் வைத்துக் கொள்வதைத் தடுக்கும் நிலையை ஏற்படுத்தினார். நியூசிலாந்து மண்ணின் மைந்தர்கள் பேசும் மாவோரி மொழியை அந்நாட்டுக் குழந்தைகள் பள்ளிகளில் கற்க வேண்டும், பாலஸ்தீன அகதிகளுக்கு ஆதரவு, சீபாவின் உய்கர் இஸ்லாமிய அகதிகளுக்கு ஆதரவு என்று ஆதரவற்ற மக்களின் பக்கம் தொடர்ந்து நிற்கிறார் ஜெசிந்தா.

சைமன் பைல்ஸ்

திக உலகக் கோப்பை பரிசுகள் வென்ற ஜிம்னாஸ்ட் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சைமன் பைல்ஸ். 1997-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஒஹையோ நகரில் கறுப்பினப் பெற்றோருக்குப் பிறந்தார் சைமன். வறுமை காரணமாக பாட்டியிடம் வளர்ந்தார். எட்டு வயது முதல் ஜிம்னாஸ்டிக் ரிங்கில் பயிற்சி பெறத்தொடங்கிய சைமன், தன் 11-வது வயதில் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

சைமன் பைல்ஸ்
சைமன் பைல்ஸ்

ஐந்து முறை ஆல்ரவுண்டு உலக சாம்பியன், ஐந்து முறை தரைப் பயிற்சி உலக சாம்பியன், மும்முறை உலக பாலன்ஸ் பீம் சாம்பியன், இருமுறை உலக வால்ட் சாம்பியன் என்று சைமன் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் முடிசூடா ராணியானார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தன் 24-வது உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்று, 24 தங்கப்பதக்கங்கள் வென்ற உலகின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார் சைமன்.

கரோலா ராகீட் சால்வினி

கரோலா ராகீட் சால்வினி
கரோலா ராகீட் சால்வினி

டலில் தத்தளித்துக் கொண்டிருந்த 53 அகதிகளை மீட்டு காப்பாற்றியதற்குப் பலனாக கைது செய்யப்பட்டவர் கப்பலின் கேப்டன் கரோலா ராகீட் சால்வினி. ஜெர்மனியில் பிறந்த 31 வயதான கரோலா, `சீ வாட்ச்-3' என்ற சரக்குக் கப்பலை 2019 ஜூன் மாதம் கேப்டனாகச் செலுத்திக் கொண்டிருந்தார். ஜூன் 12 அன்று மத்தியதரைக்கடலில் ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 53 அகதிகளை மனிதநேய அடிப்படையில் காப்பாற்ற எண்ணி தன் கப்பலில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார் கரோலா. ஜூன் 29 அன்று தன் கப்பலை அகதிகளின் நலனுக்காக இத்தாலியத் துறைமுகத்தில் அனுமதியின்றி நிறுத்தினார் கரோலா. இதன் காரணமாக இத்தாலிய அரசால் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் கரோலாவை விடுதலை செய்த இத்தாலிய நீதிமன்றம் எந்தச் சட்டத்தையும் அவர் மீறவில்லை என்றும் மனிதநேய அடிப்படையில் அவர் செய்தது உதவி என்றும் அறிவித்தது.

சுஷ்மிதா மோஹந்தி

2019-ம் ஆண்டின் மகத்தான பெண் ஆளுமைகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் சுஷ்மிதா மோஹந்தி ஒரு விண்கல வடிவமைப்பாளர். 48 வயதான சுஷ்மிதா, சூழலியல் ஆர்வலரும்கூட. ஆசியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா என்று மூன்று கண்டங்களிலும் தொழில் நிறுவனங்களை நடத்திவரும் முதல் விண்கல வடிவமைப்பாளர் சுஷ்மிதாதான். இவரின் தந்தை நிலாமணி மோஹந்தி முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி. இதனால், சிறு வயதிலேயே விண்வெளி ஆய்வுகள் செய்ய ஈர்க்கப்பட்டார் சுஷ்மிதா. அகமதாபாத் நகரில் படித்த இவர், ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள சர்வதேச விண்வெளிப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றார். 2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் மூன்ஃப்ரன்ட் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தைத் தொடங்கினார்.

சுஷ்மிதா மோஹந்தி
சுஷ்மிதா மோஹந்தி

இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான `எர்த் ஆர்பிட்'டை 2009-ம் ஆண்டு தன் நண்பருடன் இணைந்து தொடங்கினார். 2012-ம் ஆண்டு `ஃபைனான்ஷியல் டைம்ஸ்' இதழின் 25 டாப் இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். `இந்தியாவின் விண்வெளிப்பெண்' என்ற பெயர் பெற்ற சுஷ்மிதா, பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் மகத்தான 100 பெண்கள் பட்டியலிலும்இடம் பெற்றுள்ளார்.

எஸ்தர் டஃப்லோ

மெரிக்காவில் வசிக்கும் பிரெஞ்சு பெண்ணான எஸ்தர் டஃப்லோ 2019-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசை தட்டிச்சென்றுள்ளார். இவரோடு பரிசைப் பகிர்ந்துகொள்பவர்கள் எஸ்தர், அவர் கணவர் அபிஜித் பானர்ஜி மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மைக்கில் க்ரெமெர். பாரிஸ் நகரில் பிறந்த எஸ்தருக்கு இப்போது வயது 47. அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தவருக்கு அப்போது கைடாக இருந்தவர் இந்தியரான அபிஜித் பானர்ஜி!

எஸ்தர் டஃப்லோ
எஸ்தர் டஃப்லோ

அபிஜித்தை காதல் மணம் செய்துகொண்ட எஸ்தர், எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார். 2003-ம் ஆண்டு, ஏழ்மை நடவடிக்கை ஆய்வகத்தை எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் தொடங்கியவர், இந்தியாவை தன் ஆய்வுக்களமாகத் தேர்ந்தெடுத்து பல்வேறு பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டார், பொருளாதார நோபல் வெல்லும் மிகவும் இளவயதுப் பெண் எஸ்தர்!

ஜோகா அல்ஹரிதி

மான் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜோகா அல்ஹரிதி. 40 வயதான ஜோகா ஒமன் மற்றும் இங்கிலாந்தில் படிப்பை முடித்தவர்.

சிறுவயது முதலே எழுத்தின் மேல் தீராத காதல்கொண்டவர் ஜோகா. 2016-ம் ஆண்டு இவர் எழுதிய நரிஞ்சா' புதினம் சுல்தான் கபூஸ் விருது வென்றது. `செலெஸ்டியல் பாடீஸ்' என்ற புத்தகத்துக்காக இவருக்கு 2019-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஜோகா அல்ஹரிதி
ஜோகா அல்ஹரிதி

ஆங்கிலப் புனைவல்லாத பிற மொழி நூல்களுக்கு வழங்கப்படும் சர்வதேச மேன் புக்கர் பரிசை வெல்லும் முதல் அரபு மொழிப் புத்தகம் இதுதான். பண்டைய அடிமை வாழ்க்கை வரலாற்றையும், இப்போதைய நுகர்வு கலாசாரத்தையும் எதிர்கொண்டு பாலைவனத்து நகரம் ஒன்றில் வாழும் மூன்று சகோதரிகளின் கதையையும் விறுவிறுப்புடன் சொல்கிறது செலஸ்டியல் பாடீஸ்.

அன்ஷுலா காந்த்

ந்தியாவின் ரூர்கீ நகரைச் சேர்ந்த 59 வயதுப் பெண்மணி அன்ஷுலா. 1981-ம் ஆண்டு, டெல்லி பொருளாதாரக் கல்லூரியில் படித்து முடித்த அன்ஷுலா, 1983-ம் ஆண்டு, பாரத ஸ்டேட் வங்கியில் சாதாரண பயிற்சி அலுவலராகத் தன் பணியைத் தொடங்கினார். மகாராஷ்டிரம் மற்றும் கோவா மாநிலங்களில் தலைமைப் பொது மேலாளராகப் பணியாற்றியவர், சிங்கப்பூரில் உள்ள தேசிய வங்கிக் குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார். 2018-ம் ஆண்டு, பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநராகப் பதவியேற்றவர், வங்கியின் போர்டு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

அன்ஷுலா காந்த்
அன்ஷுலா காந்த்

வாரணாசியைச் சேர்ந்த சஞ்சய் காந்த் என்ற பட்டயக் கணக்காளரைத் திருமணம் செய்துள்ள அன்ஷுலாவுக்கு, ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2019 ஜூலை 12 அன்று தலைமை நிதி அதிகாரியாகவும், போர்டு உறுப்பினராகவும் அன்ஷுலாவைத் தேர்ந்தெடுத்தது உலக வங்கி. பாரத ஸ்டேட் வங்கியின் நிதி நிலையை மேம்படுத்த அவர் எடுத்த பல நடவடிக்கைகள் வெற்றி பெற்றதையடுத்தே அன்ஷுலாவுக்கு இந்தப் பதவி கிடைத்துள்ளது. இந்தப் பதவியை வகிக்கும் முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையைப் பெறுகிறார் அன்ஷுலா!

ஆயிஷா ரென்னா

ஆயிஷா ரென்னா
ஆயிஷா ரென்னா

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் பெரிதாகத் தொடங்கிய நேரத்தில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தின் மாணவியான ஆயிஷா ரென்னா பிற மாணவிகளுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றார். திடீரென வன்முறை தொடங்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் இடையே ஒளிந்து கொண்டார்கள் ஆயிஷாவும் அவருடைய தோழிகளும். கூடவே அவர்களின் வகுப்பு மாணவன் ஷஹீனும். திடீரென அங்கு நுழைந்த காவலர்கள் ஷஹீனை வெளியே இழுத்து, கீழே தள்ளி லத்திகளால் அடிக்கத் தொடங்க, மாணவிகள் நண்பன் அடிபடாமல் காப்பாற்ற முயன்றார்கள். ஆயிஷாவை நோக்கியும் காவலர் லத்தியை ஓங்க, ஒருகட்டத்தில் நின்று நிதானமாகத் திரும்பிய ஆயிஷா, ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தார். காவல் துறையினர் அங்கிருந்து அகன்றனர். ஆயிஷா இந்தப் போராட்டத்தின் முகமான பின், பெண்கள் அதிகளவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்.

இளவேனில் வாலறிவன்

ந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட விளையாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன். கடலூரில் பிறந்த இளவேனில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசித்து வருகிறார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம்கொண்டவரின் திறமைக்கு தீனி போட முயன்றது குடும்பம். 2018-ம் ஆண்டு, தன் 19-வது வயதில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில் தங்கம் வென்றார் இளவேனில்.

இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்

இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றவர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தாய்பேய் நகரில் நடைபெற்ற ஆசிய சீனியர் போட்டிகளில் தன் முதல் சர்வதேச தங்கப்பதக்கத்தை வென்றார் இளவேனில். தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சர்வதேசப் போட்டிகளில் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை.

பிரேமலதா

மீபத்தில் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா சபையின் மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் கலந்துகொண்டு பேசிய மதுரை மாவட்டம் இளமனூரை அடுத்த கார்சேரி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரேமலதா பலரின் கவனத்தைக் கவர்ந்தார். இளமனூர் ஆதி திராவிடர் நலப் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்து, இப்போது கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்துவரும் பிரேமலதா, பள்ளியிலேயே மனித உரிமைக் கல்வி கற்றவர். மனித உரிமை பற்றிய குறும்படம் ஒன்றில் பேசியுள்ள அனுபவத்தால் பிரேமலதாவைத் தேடி வந்தது ஐ.நா சபையில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு.

பிரேமலதா
பிரேமலதா

`கண்ணியத்துக்கு ஒரு பாதை: மனித உரிமைகள் கல்வியின் சக்தி' என்ற தலைப்பில் உரையாற்றிய பிரேமலதா, “இந்தியாவில் நிலவும் சாதிய முறையால் பாதிக்கப்பட்ட பெண் நான். நான் பிறந்த நேரம் முதலே என் மேலான சாதிய அடக்குமுறை ஆரம்பித்துவிட்டது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பிரித்துப்பார்த்து சாதி அடிப்படையில் குழந்தைகள் மனத்தில் பிரிவினையை உண்டாக்குவதை மனித உரிமைப் பாடங்கள் பயின்றபோது தெரிந்துகொண்டேன். இந்தியாவில் இப்போதைய கல்வி முறை இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவதாக இல்லை. நீட் தேர்வு முறை ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வேறுபாட்டை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

பி.வி.சிந்து

24 வயதான பி.வி.சிந்து இந்த ஆண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஹைதராபாத் நகரில் பிறந்து வளர்ந்த சிந்து, கோபிசந்த்திடம் இறகுப்பந்து பயிற்சி எடுத்துக்கொண்டார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றார். ஒலிம்பிக் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 2019-ம் ஆண்டு, உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் வென்று உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் பி.வி.சிந்து. இந்த வெற்றியின் மூலம், நாட்டின் முதல் பாட்மின்டன் உலக பெண் சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பி.வி.சிந்து
பி.வி.சிந்து

பெங்களூரு நகரில் நடைபெற்ற ‘ஏரோ இந்தியா’ விமானக் காட்சியில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட தேஜஸ் ரக விமானத்தை, துணை பைலட்டாக அமர்ந்து ஓட்டினார் இந்த வீராங்கனை. லைட் காம்பாட் விமானமான இலகு ரக தேஜஸ் விமானத்தில் துணை பைலட்டாகப் பயணித்த முதல் பெண் என்ற சாதனையையும் இதன்மூலம் நிகழ்த்தியிருக்கிறார் சிந்து.

பிரியா கிருஷ்ணசாமி

2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருதை வென்றது பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய ‘பாரம்’ என்ற திரைப்படம். பதினெட்டே நாள்களில் எடுக்கப்பட்ட `பாரம்', பிரியா கிருஷ்ணசாமி என்ற மும்பைவாழ் தமிழரால் இயக்கப்பட்டது. இயக்குநரும் எடிட்டருமான பிரியா, 2013-ம் ஆண்டு கங்குபாய் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். விலையுயர்ந்த காரா சேலை ஒன்றை வாங்க ஆசைப்படும் வேலைக்காரப் பெண்ணின் கனவுகளையும் ஆசைகளையும் நம் கண்முன்கொண்டு நிறுத்தியது கங்குபாய்.

பிரியா கிருஷ்ணசாமி
பிரியா கிருஷ்ணசாமி

தென் தமிழ்நாட்டின் கிராமங்களில் `தலைக்கு ஊத்தல்' என்ற பெயரில் குடும்பத்தினரே உடல்நலம் குன்றிய முதியோரைக் கருணைக்கொலை செய்யும் கொடுமையை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது ‘பாரம்’. இது கருப்புசாமி என்ற காவலாளியின் வாழ்க்கையைச் சொல்வதாக அமைகிறது.