Published:Updated:

`தோற்கடிக்க நடந்த முயற்சிகளுக்கு என் பதில்..!’ - ஊராட்சி மன்றத் தலைவரான 22 வயது பெண் மருத்துவர்

டாக்டர் அஸ்வினி
டாக்டர் அஸ்வினி

`என் முதல் நோக்கம், ஊர் மக்களுக்குத் தரமான இலவச மருத்துவச் சேவையை வழங்குவதுதான். எங்க ஊரிலுள்ள துணை சுகாதார நிலையம் சரியா செயல்படாம இருக்கு.’

22 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராகி சாதித்திருக்கிறார், மருத்துவரான அஸ்வினி சுகுமாரன். தமிழகத்திலுள்ள 27 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில், திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியின் தலைவராகப் போட்டியிட்டார் அஸ்வினி. மக்கள் நேரடியாக வாக்களித்து 2,547 வாக்குகள் வித்தியாசத்தில் இவரை வெற்றி பெறச் செய்துள்ளனர். 

டாக்டர் அஸ்வினி
டாக்டர் அஸ்வினி

மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். சமீபத்தில் முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இளம் பெண்கள் பலரும் அரசியல் களத்தில் நுழைந்து, புதிய மாற்றத்தை உருவாக்க ஆயத்தமாகியிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்த மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்றிருக்கும் மருத்துவர் அஸ்வினிக்கு வாழ்த்துகள் கூறி, அவரிடம் பேசினோம்.

''சின்ன வயசுல இருந்தே அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பேன். அதன் மூலம் மக்கள் பிரச்னைகளை ஓரளவுக்குத் தெரிஞ்சுக்கிட்டேன். ஏழை எளிய மக்களுக்கும் எங்க ஊர் மக்களுக்கும் இலவச மருத்துவப் பணி செய்ய டாக்டராக ஆசைப்பட்டேன். என் வீட்டிலும் ஆதரவு கொடுத்தாங்க. ஹைதராபாத்துல எம்.பி.பி.எஸ் படிச்சேன். கடந்த ஆண்டுதான் என் படிப்பை முடிச்சேன். சில மாதங்களுக்கு முன்புதான் இன்டர்ன்ஷிப் முடிச்சேன். 

டாக்டர் அஸ்வினி
டாக்டர் அஸ்வினி

இதற்கிடையே, அரசியலில் இருக்கும் என் அப்பாகிட்ட முக்கியமான அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிப்பேன். கல்லூரி விடுமுறை தினங்கள்ல எங்க ஊருக்கு வருவேன். அப்போ ஊர் மக்களைச் சந்திச்சுப் பேசுவேன். 'தொடர்ந்து 15 வருஷமா ஊராட்சி மன்றத் தலைவரா இருந்தவர் சரியா செயல்படலை.

மக்களுக்கும் பெரிசா நல்லது செய்யலை'னு ஆதங்கத்துடன் மக்கள் சொன்னாங்க. அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல், தரமான குடிநீர் வசதிகூட  இல்லாம தவிப்பதாகவும் சொன்னாங்க. அதனால, மக்களுக்கு ஏதாவதொரு வகையில் நேரடியாகப் பணி செய்யணும்னு என் மனசுல பெரிய தாக்கம் உண்டாச்சு. 

டாக்டர் அஸ்வினி
டாக்டர் அஸ்வினி

எங்க ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டேன். ரொம்பவே யோசிச்சு, தேர்தலில் போட்டியிடலாம்னு முடிவெடுத்தேன். அதை வீட்டிலும் நண்பர்களிடமும் சொன்னப்போ, யாருமே எதிர்ப்பு சொல்லலை. மாறாக, 'உன்னை மாதிரி இளைஞர்கள்தான் அரசியலுக்கு வரணும்'னு எல்லோரும் பாராட்டுனாங்க. உடனே வேட்பாளராகக் களமிறங்கினேன்.

தொடர்ந்து சில வாரம் காலை முதல் இரவு வரை பிரசாரத்துக்குப் போனேன். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க, என் திட்டங்கள் குறித்துப் பேசினேன். இளம் பெண்ணாக, என் படிப்பு அனுபவங்களைக் கொண்டு நிச்சயம் ஊருக்கு நல்லது செய்வேன்னு மக்கள் உறுதியா நம்பினாங்க. அதை என்னிடமும் சொன்னாங்க. என்னை எதிர்த்து நாலு பேர் தேர்தலில் போட்டியிட்டாங்க. என் வெற்றியைத் தடுக்க நினைச்சாங்க. நிறைய பிரச்னைகளை சந்திச்சேன். அவையெல்லாம் என் அனுபவத்துக்கு ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் இருந்தன. ஆனாலும், நம்பிக்கையை இழக்காமல் தேர்தலை எதிர்கொண்டேன்" என்பவர், தேர்தலுக்குப் பிந்தைய வெற்றிச் சூழல் குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

டாக்டர் அஸ்வினி
டாக்டர் அஸ்வினி

''நான் எதிர்பார்த்ததுபோல மிகப் பெரிய வெற்றி கிடைச்சுது. எங்க ஊரில் பத்தாயிரம் வாக்காளர்கள் இருக்காங்க. அதில், நான் 4,185 ஓட்டுகள் வாங்கினேன். எனக்கு அடுத்த இடம் பிடிச்ச வாக்காளர் ஆயிரம் சொச்சம் வாக்குகள் வாங்கினார். மாவட்டத்துலயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையும் எனக்குக் கிடைச்சிருக்கு.

மேற்படிப்பு படிச்சுகிட்டே, ஊராட்சி மன்றத் தலைவராகவும் என்னால சரியா பணியாற்ற முடியும். அந்த நம்பிக்கையில்தான் தேர்தலில் களமிறங்கினேன். மக்கள் பணி, மருத்துவப் பணி, மருத்துவ மேற்படிப்பு உட்பட எல்லா வேலைகளையும் சிறப்பா செய்வேன்.
டாக்டர் அஸ்வினி

எங்க புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவராகக் கடந்த வாரம் பதவி ஏற்றுக்கொண்டேன். என் சீட்டில் உட்காரும்போது, மக்கள் என்மேல் கொண்ட நம்பிக்கையைப் பூர்த்தி செய்யணும்னு மனசுக்குள்ள பெரிய பொறுப்புணர்வு இருந்துச்சு. அது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிச்சயம் எனக்குள் இருக்கும்.

ஊரிலுள்ள பள்ளிகள், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், அரசு அலுவலகங்கள் பலவற்றுக்கும் நேரில் சென்று பார்வையிட்டேன். என் பணிகள் குறித்து தெளிவா புரிஞ்சுகிட்டேன். அடுத்தடுத்து களப்பணியைச் சரியா செய்யணும். அதற்கு, அப்பா உட்படப் பலரும் எனக்குப் பக்கபலமா இருப்பாங்க. ஆனாலும், என் படிப்பறிவை முழுமையா பயன்படுத்தி எல்லா முடிவுகளையும் நானே சுயமா யோசிச்சு எடுக்கப்போறேன். 

டாக்டர் அஸ்வினி
டாக்டர் அஸ்வினி

என் முதல் நோக்கம், ஊர் மக்களுக்குத் தரமான இலவச மருத்துவச் சேவையை வழங்குவதுதான். எங்க ஊரிலுள்ள துணை சுகாதார நிலையம் சரியா செயல்படாம இருக்கு. அதில் ஷிஃப்ட் அடிப்படையில் 24 மணிநேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இருக்க வழிவகை செய்யப்போறேன். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் அங்கு சென்று பணியாற்றுவேன். மேலும், அடிக்கடி ஊரிலேயே மருத்துவ முகாம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறேன். இதன் மூலம் மக்கள் பணியுடன், என் படிப்பையும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்க முடியும்.

மருத்துவ மேற்படிப்புக்காக, அடுத்த வருஷம் நீட் தேர்வு எழுத இருக்கேன். அதுக்காக வீட்டில் இருந்தபடியே  படிச்சுகிட்டிருக்கேன். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துட்டா, சென்னை அல்லது திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மருத்துவக் கல்லூரியிலேயே படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

டாக்டர் அஸ்வினி
டாக்டர் அஸ்வினி

மேற்படிப்பு படிச்சுகிட்டே, ஊராட்சி மன்றத் தலைவராகவும் என்னால சரியா பணியாற்ற முடியும். அந்த நம்பிக்கையில்தான் தேர்தலில் களமிறங்கினேன். பெண்களுக்கு மல்டி டாஸ்க் எளிதான விஷயம்தான். அதன்படி நானும் மக்கள் பணி, மருத்துவப் பணி, மருத்துவ மேற்படிப்பு உட்பட எல்லா வேலைகளையும் சிறப்பா செய்வேன்" என்றார் உற்சாகமாக...

வாழ்த்துகள் அஷ்வினி!

அடுத்த கட்டுரைக்கு