22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

22 வயது ‘உங்களுக்கு’ என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 ஜாக்லின் ஜான்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜாக்லின் ஜான்சன்

திரும்பிப் பார்க்கிறோம்!

ரு வேளை நம் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் வாய்ப்பை இயற்கை வழங்கினால்… நம்மை நாமே திரும்பிப் பார்த்து என்ன சொல்லிக்கொள்வோம்?

22 வயதில் கரைந்து போன ‘பப்பி லவ்’, தேவையின்றி செய்துகொண்ட அழகு சிகிச்சைகள், ஃபேஷன் என்று நினைத்து அணிந்துகொண்ட கிச்சுகிச்சு மூட்டும் உடைகள், உளறிக்கொட்டிய சொற்கள் என்று அசை போட்டுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ‘ஒருவேளை அந்த 22 வயது `உங்களை' நீங்கள் இப்போது சந்தித்தால் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’- இந்தக் கேள்வியை முன்வைத்து சில சாதனைப் பெண்களைக் கேட்டபோது அவர்கள் பகிர்ந்த கருத்துகளின் தொகுப்பு இது!

மீண்டு எழுந்துவர வேண்டும்!

ஜாக்லின் ஜான்சன், நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரியேட் அண்டு கல்டிவேட், இப்போது வயது 33

2007-ம் ஆண்டு ஜாக்லின் ‘சம் நோட்ஸ் ஆன் நாப்கின்ஸ்’ என்கிற தன் வலைப்பக்கத்தில் எழுதத்தொடங்கினார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து முடித்து, மார்க்கெட்டிங் அனுபவமும் சேகரித்துக்கொண்டார்.

தன் வலைப்பூ மற்றும் அனுபவங்களைக் கொண்டு பெண்களின் பணி மற்றும் மேம்பாடு பற்றி அறிந்திருந்தார் ஜாக்லின். அவர் செய்துகொண்டிருந்த வேலை பறிபோக, `நோ சப்ஜெக்ட்' என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். கன்டென்ட் (உள்ளடக்கம்) எழுதுதல், சந்தைப்படுத்தல், அதில் என் பலம் என்ன போன்றவற்றை கற்றுக்கொண்டார். ஆனால், அந்த நிறுவனம் திவாலானது.

22 வயது ‘உங்களுக்கு’ என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மனம் தளராத ஜாக்லின், தொழில் செய்ய முனையும் பெண்கள், பணியாற்றும் பெண்கள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் பற்றிய தகவல்கள் தருவது, தன்னம்பிக்கை வகுப்புகள் எடுப்பது, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள ஆன்லைன் ஊடகம் அமைத்துத் தருவது என்று பெண்களை மையப்படுத்திப் பணியாற்ற `கிரியேட் அண்டு கல்டிவேட்' நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு 28 வயதுதான். இன்று அமெரிக்காவின் மிக முக்கிய ‘கரியர் டெவலப்மென்ட்’ நிறுவனமாக நிமிர்ந்து நிற்கிறது இவரது நிறுவனம்.

“என்னால் தனித்து இயங்க முடியும், ஜெயித்துக் காட்ட முடியும் என்கிற தன்னம்பிக்கையை பெறவே நான் மிகவும் போராட வேண்டி இருந்தது” என்கிறார் 25 வயதில் தொழில் முனைவோரான ஜாக்லின். “தினமும் காலை ஆறு மணிக்குக் கையில் காபியுடன் அலுவலகம் வந்துவிடுவேன். மாலை 6 மணிவரை 30 நிமிட சந்திப்புகள் தொடர்ச்சியாக இருக்கும். மனிதவளத்துறையில் பிசினஸ் செய்துகொண்டு மனிதர்களைச் சந்திக்காமல் எப்படி?” என்று சிரிக்கிறார்.

22 வயது ‘உங்களுக்கு’ என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

“வேலைதான் என் வாழ்க்கை. கண்முன்னே நிறுவனம் சிறிது சிறிதாக வளர்ந்து வருவது பெரும் மகிழ்வைத் தருகிறது. வாழ்க்கைக்கும் வேலைக்கும் சரியான ‘பேலன்ஸ்’ ஏற்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது” என்று சொல்லும் ஜாக்லின், 22 வயதுப் பெண்ணாக என்னை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், `` `மீண்டு எழுந்துவர வேண்டும்' என்கிற ஒரே அறிவுரையைத்தான் சொல்வேன்” என்கிறார்!

நன்றாகவே இருக்கிறாய், செய்வதை அப்படியே தொடர்ந்து செய்!

கிறிஸ்டின் எஸ், உரிமையாளர் கிறிஸ்டின் எஸ் ஹேர், இப்போது வயது 37

16 வயதாகும்போதே சலூன் ஒன்றில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார் கிறிஸ்டின். அழகுக்கலை கல்லூரியில் படிக்காமல் சலூன் உரிமம் பெற இந்த உதவியாளர் பணி தேவையானதாக இருந்தது. ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆவது என்கிற ஒரே குறிக்கோள் மட்டுமே கிறிஸ்டினுக்கு இருந்தது. “வீட்டு வாடகை தர பணமில்லாத நிலையிலும் தோழிகள் யாருடனாவது சேர்ந்து நானே ஹேர்ஸ்டைல் செய்து லைட்டுகள், கேமராக்கள் கொண்டு போட்டோஷூட் செய்துவிடுவேன். ஃபேஷன் வீக் வரும்போது செய்துகொண்டிருக்கும் பணியை அப்படியே விட்டுவிட்டு அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற் காக ஹேர் ஸ்டைலிங் ஜாம்பவான்களிடம் குறைந்த ஊதியத்தில் பணியாற்றச் சென்றுவிடுவேன்.

`இதைச் செய், இதைச் செய்யாதே' என்று எடுத்துச் சொல்ல எனக்கு யாருமில்லை. நானே ஏதேதோ செய்து கற்றுக்கொண்டேன். ஆனால், புதிதாகப் பணியைத் தொடங்குபவர்களுக்கு ‘மென்டர்’ என்று ஒருவர் இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். அதனால்தான் ‘தி பியூட்டி டிபார்ட்மென்ட்’ வலைதளத்தை 2011-ம் ஆண்டு தொடங்கினேன். அடுத்து பின்ட்ரெஸ்ட்டில் ‘தி பியூட்டி டிபார்ட்மென்ட் டியூட்டோரியல்’ என்ற பெயரில் சிறு காணொலிகளை இடம்பெறச் செய்தேன். அவ்வளவுதான்... அத்தனையும் ஹிட்!

22 வயது ‘உங்களுக்கு’ என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சரியான நபர்களுடன் கைகோத்தல் அவசியம் என்று நினைக்கிறேன், அன்றாடம் நாம் இடும் பணியை செவ்வனே செய்ய ‘டீம்’ ஒன்று முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினால்தான் நாம் முக்கிய விஷயங்களில் வெற்றிபெற முடியும்” என்கிறவர், 22 வயதான கிறிஸ்டினை ஒருவேளை சந்திக்க நேர்ந்தால் சொல்ல விரும்பும் செய்தி: `நன்றாகவே இருக்கிறாய்... செய்வதை அப்படியே தொடர்ந்து செய். உன் பயணம் அருமையானது. எதையும் நீ மாற்றிக்கொள்ள வேண்டாம்!'

நீ யார் என்பதை நீ தேடத் தொடங்கும்போதுதான் உன் வாழ்க்கை தொடங்கும்!

கேட்டி ஸ்டுரினோ, நிறுவனர், 12இஷ் ஸ்டைல் மற்றும் மெகாபேப் நிறுவனங்கள், இப்போது வயது 35

விஸ்கன்சின் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே ‘ஷனேல்’ ஃபேஷன் பிராண்டின் மக்கள் தொடர்புப் பிரிவில் இருமுறை இன்டர்னிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றார் கேட்டி. ஃபேஷன் குறித்து எந்த முன் அனுபவமும் இல்லாத அவரை அந்தத் தொழில் நோக்கி நகர்த்தியது இந்தப் பயிற்சிதான். கல்லூரிப் படிப்பை முடித்ததும், பயிற்சி அனுபவம் காரணமாக மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்ற வாய்ப்பு அளித்தது டால்ஷே அண்டு கபனா ஃபேஷன் நிறுவனம்.

தனியாக நிறுவனம் தொடங்கி நடத்தக்கூடிய முதிர்ச்சி வருவதற்கு முன்பே ‘டிண்டர் பி ஆர்’ என்ற மக்கள் தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார் கேட்டி. பெண்களுடன் பணியாற்றுவது கேட்டிக்கு மிகவும் பிடித்துப்போனது.

22 வயது ‘உங்களுக்கு’ என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

“2012-ம் ஆண்டு ஒரு பேட்டியில் என் உடல் குறித்து சொல்லியிருந்தேன். நான் அதிக குண்டும் இல்லை; ஒல்லியும் இல்லை. ஆனால், என் உடல்வாகுக்கு ஏற்ற சைஸ் உடையைத் தேர்ந்தெடுப்பது பெரிய தலைவலியாக இருந்தது என்று விளக்கியிருந்தேன். என்னைப் போல நடுத்தர உடலமைப்பு கொண்ட பெண்களிடம் இந்தப் பேட்டிக்கு அமோக வரவேற்பு. ஏன், என் போன்ற உடலமைப்புகொண்ட பெண்களுக்கு உடைகள் வடிவமைக்கக் கூடாது என்று நினைத்தேன். `12இஷ்' என்ற வலைப்பூவைத் தொடங்கினேன்” என்று சொல்கிறார் கேட்டி. செலிபிரிட்டிகள் அணியும் உடைகளைப் போலவே நடுத்தர உடலமைப்புக்கேற்ற உடைகளை வடிவமைத்து அணிந்து புகைப்படங்களும் எடுத்துப் பதிவேற்றினார். எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்!

``பெண்களாக நம்மை நாமே ஏன் வருத்திக் கொள்ள வேண்டும்; என் பக்கத்துக்கு வந்து பார்வையிடும் பெண்களுக்குச் சிறிது பாசிட்டிவிடி, நகைச்சுவை, ஸ்டைல் டிப்ஸ் போன்றவற்றை வழங்கத் தொடங்கினேன்” என்கிறார் கேட்டி.

“கடைகளில் எந்த உடையும் சேராமல் போய் வெட்கப்பட்டு நிற்கும் பெண்களுக்காகவே `மேக் மை சைஸ்' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினேன். தன் உடலமைப்புக்கு ஏற்ற உடையை போராடிப் பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று உணர்த்தினேன்.

70 சதவிகிதப் பெண்களுக்கு சரியான அளவில் உடைகள் இல்லையென்றால், யாருக்காக இங்கே உடைகள் தயாரிக்கப்படுகின்றன? பெண்கள் தங்களை ஏன் குறிப்பிட்ட சிறிய அளவுக்குள் அடக்கிக்கொள்ள வேண்டும்?” என்று கேள்வியும் எழுப்புகிறார் கேட்டி.

22 வயது ‘உங்களுக்கு’ என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அடுத்து அழகு சாதனப்பொருள்கள் நிறுவனம் ஒன்றை `மெகாபேப்' என்ற பெயரில் தொடங்கினார். பயன்படுத்தப் பாதுகாப்பான அழகுசாதனப் பொருள்களை பெண்களுக்கு வழங்க வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மெகாபேப் தொடங்கப்பட்டது.

“என் அம்மா மார்பகப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டார். எனவே, டாக்சின்கள் எந்த விதத்திலும் உடலைப் பாதிக்கக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் கொள்வேன். கேன்சர் எளிதில் தாக்கக்கூடிய அக்குள்

பகுதியில் பயன்படுத்தக்கூடிய சில டியோடரண்டுகள் ஆபத்தானவை என்று உணர்ந்தேன். எனவே, மெகாபேப் டியோவை அறிமுகம் செய்தேன். வழக்கம்போல அதுவும் ஹிட்” என்கிறார் கேட்டி.

22 வயதான கேட்டியை இப்போது சந்தித்தால் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு, `மெல்லிய உடல் மகிழ்வைத் தராது; பாய் ஃப்ரெண்டால் மகிழ்வைத் தர முடியாது. நீ யார் என்பதை நீ தேடத் தொடங்கும்போதுதான் உன் வாழ்க்கை தொடங்கும்' என்கிறார் கேட்டி!

உங்களுக்காக ஒரு கேள்வி?

ந்தப் பெண்கள் இளவயது முதலே தனித்துப் போராடி வாழ்க்கையில் வென்றவர்கள். அவர்களது 22-வது வயதை திரும்பிப் பார்த்தால் அந்த இளம்பெண்ணுக்கு அவர்களே தரும் அறிவுரை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கான விடைகளை இங்கே தந்திருக்கிறோம்.

உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இதுவொரு வாய்ப்பு. 22 வயது ‘உங்களுக்கு’ உங்கள் அறிவுரை என்ன? அவளுக்கு எழுதுங்களேன்!

22 வயது, அவள் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை - 600 002

மின் அஞ்சல்: avalbrand@vikatan.com