தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

தமிழ்நாடு அரசுப் பணியில் இருந்தபோது குடும்பம், அலுவலகம் என்று ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருந்த நிலையில், நான் ஓய்வுபெற்ற ஆண்டு பிறந்தாள் அவள்

அவள் விகடன் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் `அவள் விகடன்' இதழில் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை அளித்து வரும் 25 வாசகிகள், அவள் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் ஆலோசகர்

உருவான நாள் முதல் வாசக நெஞ்சங்களின் அன்புக்கு பாத்திரமாகி கைகோத்து உடன் வருவதோடு, அவ்வப்போது தகுந்த ஆலோசனைகள் சொல்லும் குடும்ப ஆலோசகர் அவள். அன்று, வாசகியரின் பிரச்னைகளை இதழில் பதிவிட்டு `என் டைரி’ மூலமாகச் சொன்ன சிறந்த ஆலோசனைகள் ஏராளம். இன்று, `பெண் டைரி’ மூலமாக ஆன்லைனில் தொடரும் பதிவுகளால் பயனடைந்தோர் பலர். என்னைப் பொறுத்தவரை வாசகர்களுக்கு பலவிதங்களில் வழிகாட்டும் அவள் விகடன், வாசகிகளின் அமைதியான வாழ்வுக்கு உறுதுணையான ஆலோ`சகி’ என்றும் சொல்லலாம்.

- என்.கோமதி, திருநெல்வேலி-7

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் பெண்

அவள் விகடன் எனக்கு அறிமுகமான நாள் முதல் அவளுடன் ஆரம்பித்த பந்தம் இன்று வரை தொடர்கிறது. நான் பார்த்து வளர்ந்த குழந்தை, இன்று குமரியாக உயர்ந்து சிறந்து நிற்கிறாள். அவளின் வளர்ச்சியைப் பார்த்துப் பூரித்து நிற்கும் அன்னையாகிறேன். நேரடியாக `அவளை’ சந்திக்க வைத்த `ஜாலி டே’ இரண்டு நாள்கள் நிகழ்வு மட்டுமல்ல; அவளைக் கையிலேந்தும் நாளெல்லாம் எனக்குக் கொண்டாட்டம்தான். என் மகளாக எனக்கு மட்டுமல்ல; என் குடும்பத்தில் எல்லோருக்கும் தாயாக, தோழியாக, அட்வைஸராக, குருவாக நான் உணர்ந்த தருணங்கள் ஏராளம்.

- விஜயலக்ஷ்மி, மதுரை-9

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் கவுன்சலர்

`கற்றல் குறைபாடு’ உள்ள மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் சிறப்பு ஆசிரியை நான். மாணவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதில் தொடங்கி அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை வளர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை என் பணியில் தினம் தினம் ஆயிரம் சவால்கள். இதற்கு டன் கணக்கில் பொறுமை வேண்டும். அத்தகைய நிலையில் வீட்டுக்கு வந்ததும் என்னை நானே அமைதிப்படுத்திக்கொள்ள துணையாக, தூணாக நிற்பாள் அவள். என்னைப் பொறுத்தவரை பலருக்கு கவுன்சலிங் தரும் எனக்கு, அவள் என் கவுன்சலர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

- ப்ரீதா ரெங்கசுவாமி, சென்னை-4

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் வழிகாட்டி

தமிழ்நாடு அரசுப் பணியில் இருந்தபோது குடும்பம், அலுவலகம் என்று ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருந்த நிலையில், நான் ஓய்வுபெற்ற ஆண்டு பிறந்தாள் அவள். பொழுதைப்போக்க படிக்கலாம் என்றுதான் அவள் விகடனைக் கையிலெடுத்தேன். ஆனால், என் பேனாவைக் கையிலெடுக்க வைத்து விட்டாள் அவள். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட என் படைப்புகள் அவள் விகடனில் பிரசுரமாகியுள்ளன, ஆகிக்கொண்டிருக்கின்றன. நான் ஓர் எழுத்தாளராகவும் உருவாக வழிகாட்டியாக இருந்தது அவள் விகடன்தான் என்பதை என் 82-வது வயதில் சொல்லிக்கொள்வதில் பூரித்து நிற்கிறேன்.

- எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் நிதி ஆலோசகர்

குடும்ப வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க கற்றுத் தந்தவள் அவள் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்வேன். சிறு துளி பெரு வெள்ளம் என்ற பொன் மொழிக்கு இணங்க, எந்தெந்த வயதில், எப்படியெல்லாம், எதில் பாதுகாப்பாக பணத்தை முதலீடு செய்யலாம் என சிறந்த ஆலோசனையைத் தந்தவள். சில நேரத்தில் என் மனதில் எழும் சந்தேகங்களுக்கு அவள் விகடனின் பழைய இதழைப் புரட்டினால் போதும். சிறந்த நிதி ஆலோசகர்கள் அளித்த தக்க பதிலைத் தந்து உதவுவாள். இன்று என் வாரிசுகளுக்கும் சேமிப்பின் அருமையை உணர வைத்துக்கொண்டு இருக்கும் அவள், என் நிதி ஆலோசகர்.

- பானுமதி பெரியதம்பி, சேலம்-30

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் செஃப்

அவள் விகடனைப் படிக்கத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவளுடன் கைகோத்து வருகிறேன். விடுமுறை தினத்தில் புதிதாகச் சமைக்க வேண்டும் என்றால் சேர்த்து வைத்துள்ள 30 வகை சமையல் இணைப்பைப் புரட்டுவேன். சமைக்க வேண்டிய ஆர்வத் தைக் கொடுத்துவிடுவாள். அந்த உணவு வகை சிறப்பாக இருக்கிறது என்று குடும்பத்தினர் பாராட்டும்போது அவள் விகடனுக்கு என் நன்றியை மானசீகமாகச் சொல்லிவிடுவேன். அந்த வகையில் நானும் உற்சாகமாகி, 30 வகை ரெசிப்பியை அனுப்பி வைக்க, அவற்றை வெளியிட்டு என்னை திக்குமுக்காடச் செய்த அவள் என்னுடைய செஃப் என்றால் அது மிகையில்லை; உண்மை.

- ஆர்.பிருந்தா ரமணி, மதுரை-9

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்
Picasa

அவள் என் அகராதி

புதுப்புது வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட அகராதி இருப்பதுபோல், புதுப்புது தகவல் களைத் தெளிவாக அறிய அவள் விகடன் என் அகராதியாக இருக்கிறாள். இன்றைய சூழ்நிலையில் சமூக வலைதள சுவாரஸ்யங்களுக்கு `லைக், கமென்ட், ஷேர்', பொது அறிவை வளர்க்கும் ‘புதிர்ப் போட்டி’, சிரிக்க வைக்கும் `ஜோக்ஸ்’, சீனியர் சிட்டிசன்களைப் போற்றும் ‘முதுமைக்கு மரியாதை’, உலகத்தில் நடக்கும் அரிய தகவல்களைத் தரும் ‘வினு வித்யா விமல்’, சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் ‘தனியொருத்தி’ சவால்கள், சமையல் சந்தேகங்கள், எக்காலத்துக்கும் உதவும் இணைப்புப் புத்தகம்... மொத்தத்தில் எல்லா வயதினரும் ரசித்துப் படிக்கவைக்கும் அவள் ஓர் அகராதியே!

- பானுமதி வாசுதேவன், மேட்டூர் அணை-3

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் ரோல் மாடல்

நான் துவண்டிருக்கும் நேரத்தில் எல்லாம் அவள் விகடனில் வரும் தன்னம்பிக்கை ஸ்டோரிகளைப் படிப்பேன். எனக்குள் ஓர் உற்சாகம் ஊற்றெடுக்கும். நான் மட்டுமல்ல... அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்னிடம் வந்து தன் குறைகளைச் சொல்லும்போது அவள் விகடனில் படித்த சக்சஸ் ஸ்டோரிகளைச் சொல்லி அவர்களுக்கும் நம்பிக்கை யூட்டுவேன். வெளிநாட்டில் இருக்கும் என் மகன் - மருமகளும் என்னுடன் பேசும்போது என்னையும் அறியாமல் அந்த வாரத்தில் வந்த அவள் விகடன் பற்றிய செய்தியைச் சொல்வது வாடிக்கையாகி விட்டது. நான் மட்டுமல்ல... என் கணவரும் அவள் வாசகர்தான். மொத்தத்தில் அவள் என் ரோல் மாடல்.

- எஸ்.சரஸ்வதி, திருச்சி-2

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் வீராங்கனை

அவள் விகடனைப் படிக்கத் தொடங்கிய நாள் முதல் அவளுடனேயே பயணம் செய்யும் நான், அவளை ஒரு வீராங்கனையாகவே பார்க்கிறேன். பலப்பல பகுதிகள் வாயிலாக வாசகிகளுக்கு தைரியத்தை அளிப்பதில் அவளுக்கு நிகர் அவளே. திக்குத்தெரியாமல் தவித்த பெண்களுக்கு `என் டைரி’ மூலம் சக வாசகிகளிடமிருந்து சிறப்பான ஆலோசனைகள் வழங்கியவளின் சமீபத்திய சாதனை `தனியொருத்தி'. சமூகத்தின் அவலங்களை எதிர்த்து நிற்கும்போது `அடங்க மறு’ என்று கூவி... இன்றுவரை தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களுக்கு தைரியத்தை விதைத்துவரும் அவள் வீராங்கனைதானே!

- லக்ஷ்மி வாசன், சென்னை-33

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் ஆச்சர்யம்

அவள் விகடனில் முதன்முதலில் 2010-ம் ஆண்டு `அனுபவங்கள் பேசுகின்றன’ என்ற பகுதிக்கு எழுதினேன். அதற்கு முன்பு வரை நான் எந்தப் பத்திரிகைக்கும் எழுதியதில்லை. ஆனால், என்ன ஆச்சர்யம்... நான் எழுதியது அவள் விகடனில் வெளியாகி அயர்ன் பாக்ஸ் பரிசாக என்னைத் தேடி வந்தது. நமக்குள்ளும் ஓர் எழுத்தாளரா... அந்த எழுத்துகளுக்கு ஓர் அங்கீகாரமா... அடுத்து, `துர்கா' தொடரின் கதை சொல்லும் போட்டியில் கதை சொல்லி குக்கரைப் பரிசாக வென்றேன். தற்போதும் நான் எழுதுவது அவ்வப்போது அவள் விகடனில் இடம்பெறும் நிலையில் பணி ஓய்வுக்குப் பிறகு அவளின் வாசகியாக, என்னை எழுதத் தூண்டும் எழுத்தாளராக்கிவிட்ட அவள் என் ஆச்சர்யம்தான்.

- அன்புக்கரசி பாலசுப்ரமணியன், சென்னை-73

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் ஊக்க சக்தி

வாசகியரின் எதிர்பார்ப்பை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்து வரும் மாதர் இதழான அவளுக்கு நிகர் அவளே. அவள் விகடனின் வாசகிகளில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை. விடாமுயற்சியால் தொடமுடியாத உயரங்களையும் தொட்டுவருபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் வாழ்க்கைக் கதையை விவரித்து துவண்டு நிற்பவர் களைத் தூக்கிவிடும் அவள் ஓர் ஊக்க சக்தியே. ஆக்கபூர்வமான விஷயங்களை எழுதி அனுப்புவேன். அதை அலசி ஆராய்ந்து வெளியிடும் விதத்தில் அவள் எனக்கும் ஊக்க சக்தியே!

- பி.திலகவதி, தஞ்சாவூர்

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் மீட்பர்!

என் கணவர் அவள் விகடனை வாங்கி வந்தவுடனே ஒருமுறை புரட்டிப் பார்த்துவிட்டு, நேரமிருக்கும்போது படிக்கலாம் என்றுதான் நினைப்பேன். என்றாலும் முதல் பக்கத்தில் வெளியாகும் `நமக்குள்ளே' பகுதியை மட்டும் படித்துவிடுவோம் என்று படிப்பேன். ஆனால், அதைப் படித்த பிறகு நிறுத்த முடியாமல், அடுத்தப் பக்கத்தைப் புரட்டுவேன். அதுவும் படிக்கத் தூண்டும் பக்கமாக இருக்கும். அதேபோல் ஒருமுறை படித்த கட்டுரையை மறுமுறை படிக்கும்போது வேறு ஒரு சிந்தனை தோன்றும். இந்த விஷயத்தை நாம் ஏன் யோசிக்கவில்லை என்று நினைக்க வைக்கும். அது வேறு வாசகியின் அனுபவமாக இருந்தாலும், அது எனக்கும் பயன்படும் விதத்தில் இருப்பதால் அவளை என் மீட்பர் என்றே சொல்வேன்.

- வ.வெற்றிச்செல்வி, வேதாரண்யம்

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் தன்னம்பிக்கை

எங்கள் வீட்டுக்கு பால் ஊற்றும் பெண் வரும்போதெல்லாம் ஓன்றிரண்டு வார்த்தைகளில் தன் வேதனையை வெளிப்படுத்துவாள். காலை நேர அவசரத்தில் நானும் பெரிதாகப் பதில் சொல்லாமல் பாலை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்று விடுவேன். சமீபத்தில் அந்தப் பெண் வந்த நேரத்தில் அவள் விகடனும் என் கைக்கு வந்தது. அதை அந்தப் பெண்ணிடம் காட்டி, `நீ மட்டுமல்ல... உலகத்துலே எத்தனையோ பெண்கள் கஷ்டப்பட்டுத்தான் முன்னேறியிருக்காங்க. அந்தக் கதையெல்லாம் இதில் வருது. முதல்ல உன் மேலே நம்பிக்கை வை. முன்னேற்றம் தன்னாலே வரும்’ என்று சொல்லி அனுப்பினேன். அப்படிப்பட்ட தன்னம் பிக்கையான வார்த்தைகளை எனக்கு அளித்த அவள் விகடனுக்கு நன்றி.

- ஜானகி பரந்தாமன், கோவை-36

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் அட்சய பாத்திரம்

நான் பிஹெச்.டி படித்த பெண். ஐந்து வருடங்களுக்கு முன் படித்ததுக்கேற்ற வேலை கிடைக்காமலும், மண வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வாலும் வாழவே வெறுப் புற்றிருந்த காலம் அது. தற்செயலாக உறவினர் வீட்டில் இருந்த அவள் விகடன் இதழைப் பார்க்க நேர்ந்தது. அதில் படித்த தன்னம்பிக்கை கட்டுரைதான் என் வாழ்க்கையின் திருப்புமுனை. அதன்பின் என் வெறிகொண்ட முயற்சியால் இன்று ஒரு பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்ததுக்கேற்ற வேலையுடன் கை நிறைய சம்பாதிக்கிறேன். அன்று முதல் இன்று வரை ரெகுலர் வாசகியாகிவிட்ட எனக்கு, அவள் விகடன் ஓர் அட்சய பாத்திரமாகவே தெரிகிறாள்.

- சத்யா சோமசுந்தரம், சென்னை-129

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் நந்தவனம்

அவளால் நான் கற்றதும் பெற்றதும் நிறைய... படித்ததும் பண்பட்டதும் அதிகம். உதாரணத்துக்கு, சிறு இடத்தில்கூட பயனுள்ள செடிகளை வளர்க்கலாம்; அதன் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்களை, பழங்களை நாமே விளைவித்துக் கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொண்டு பயன் பெறுபவர்களில் நானும் ஒருத்தி. அந்தப் பெருமை அவளுக்கே சேரும். வாழ்க்கைப் பாதையில் திசை அறியாது தவித்த நிறைய பேருக்கு பல கலைகளைக் கற்றுக்கொடுத்த அவள் தோட்டம் மட்டுமல்ல... பல கலைகளைக் கற்றுக்கொடுக்கும் நந்தவனம்.

- தி.வள்ளி, திருநெல்வேலி-11

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் ஃப்ரீ டைம் பார்ட்னர்

அவள் விகடனுக்கான வெள்ளி விழா ஆரம்பத்தை பெண்களுக்கான திருவிழாவின் தொடக்கமாகவே நினைக்கிறேன். பெண்களின் தனித்திறமைகளை உலகுக்கு உணர்த்தி, உலக நிகழ்வுகளை பெண்களின் கவனத்துக்குக் கொண்டுவரும் அவள் விகடனின் மகத்தான பணிகளில் பயனடைந்தவர்களில் நானும் ஒருத்தி. மாணவியான நான், ஹாஸ் டலில் தங்கியிருக்கும் நிலையில் அவள் விகடன் மூலம் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்கிறேன். அந்த விதத்தில் அவள் எனக்கு ஃப்ரீ டைம் பார்ட்னர். சாதனைப் பெண்களையும், சாதிக்கத் துடிக்கும் பெண்களையும் அவள் மூலமாகப் படிக்கும்போது எனக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்ற வெறியை ஏற்றி வருகிறாள்.

- ஜி.வளர்மதி, கோயம்புத்தூர்-46

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் நல்வித்து

என் அத்தை பால்யத்திலேயே கணவரை இழந்தவர். என் நாத்தனார் கணவனால் கைவிடப்பட்டவர். அவர்கள் வாழ்க்கையெல்லாம் கிழிந்த புத்தகமாய், அச்சத்தோடு அவலமாய் கழிந்ததை இயலாமையோடு பார்த்திருக்கிறேன். அன்று என் அத்தையையும் நாத்தனாரையும் கைப்பிடித்து அழைத்துச் செல்ல ஓர் `அவள்’ இருந்திருந்தால், பாவாத்மாவாகவே அவர்கள் வாழ்க்கை பறி போயிருக்காது. என் அத்தை போல இப்போதும் பலர் இருக்கத்தான் செய் கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நல் விதையை விதைத்து மீட்டெடுக்க ‘அவள்’ இருக் கிறாள், நமக்காக ஆக்கபூர்வமாய் யோசிக்க, வழிகாட்ட, ‘அவள்’ இருக்கிறாள் என்ற தாக்கத்தை ஏற்படுத்தும் அவளின் வாசகி என்பதில் ஈடில்லா பெருமை.

-  மல்லிகா குரு, சென்னை-33

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் வைத்தியர்

ஜெர்மானியப் பழமொழி ஒன்று உண்டு. நல்ல மருத்துவர் மூன்று விஷயங்களைப் பெற்றிருக்க வேண்டும். அவை சிங்கத்தின் இதயம்; கன்னிப் பெண்ணின் கை; கழுகின் கண். அவள் விகடனை ஒரு வைத்தியராக நான் கருதுவதால், இந்தப் பழமொழி பொருந்திப் போவதைப் பார்க்க முடிகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் நானே கடைக்குச் சென்று காத்திருந்து அவள் விகடனை வீட்டுக்கு அழைத்து வந்த நாள்கள் மறக்க முடியாதவை. இப்போது நான் வீட்டுக்குள்ளே முடக்கு வாதத்தால் சிறைப் பறவையாக உள்ளேன். இந்த நேரத்தில் என் எழுத்துகளை அச்சேற்றியும், வாசகியாக என்னை புரவியில் ஏற்றியும் உலகைச் சுற்றிக் காட்டுவதும் அவள் விகடன் மட்டுமே!

- ஷாந்தி, திருச்சி

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் விமர்சகர்

எனக்கு சிறுவயதில் பக்கத்து வீட்டுத் தோழிகள், பள்ளிக்கூடத்துத் தோழிகள், கல்லூரித் தோழிகள் இருந்ததுண்டு. இப்போது, முகநூல், வாட்ஸ்அப் என இணையதள தோழிகள் இருந்தாலும், காலங்காலமாக அஞ்சல் வழித் தோழியாக இருப்பவள் `அவள்’தான். அன்று தோழிக்காகக் காத்திருந்த அதே உணர்வுதான் இன்றும். என் உணர்வுகளை கவிதையாகவோ, கதையாகவோ, ஜோக்காகவோ எழுதி அனுப்பும்போது, சரியாக இருந்தால் அதை அச்சேற்றும் என் விமர்சகர். அவள் எனக்களித்த ஊக்கமும் விமர்சனங்களும் என்னை மேலும் மேலும் மெருகேற்றிக் கொள்ள உதவுகின்றன இன்றுவரை. இது என்றும் தொடரும்.

- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என்னும் தனியொருத்தி

மகளிர் தின விழாக்களில் மேடைகளில் பேசும்போது மேற்கோள் காட்டுவதற்காக, சாதனைப் பெண்கள் குறித்து குறிப்பெடுக்க முதன்முதலாக அவள் விகடனைப் படிக்க ஆரம்பித்தேன். இப்போது அது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சாதிக்க வேண்டும் என நினைக்கிற பெண்களுக்கு `அது ஒன்றும் தடை அல்ல’ என்பதை உணர்த்தக்கூடிய அவள் விகடனை `தனியொருத்தி’யாகவே பார்க்கிறேன். தான் வெற்றி பெறவில்லை என நினைக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும், ஏதோ ஒரு சாதனைப் பெண் இது போன்ற சிக்கலைக் கடந்து வந்திருப்பார் என புரியவைக்கக்கூடிய அவள் விகடனின் கட்டுரைகள் அனைத்தும் தன்னம்பிக்கை தரக்கூடியவை.

- இல.தமிழ்க்குயில், சங்கராபுரம்

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் எனர்ஜி பூஸ்டர்

கால் நூற்றாண்டாக என்னுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் என் செல்லத் தோழி அவள். என் கல்லூரிக் காலத்தில் அறிமுகமான ‘அவள்’, எனக்கு மணமான பின் சமையலறையில் தாயாக (இன்னும் 32 பக்க சமையல் செய்முறை இணைப்புகளை பத்திரமாக வைத்திருக்கிறேன்), குழந்தை வளர்ப்பில் கைகொடுக்கும் பாட்டியாக (டிப்ஸ், வீட்டு வைத்தியம்), மனநலம் பேணும் மருத்துவராக (மருத்துவக் கட்டுரைகள்), சோர்வுறும் தருணங்களில் எனர்ஜி பூஸ்டராக (தன்னம்பிக்கை கட்டுரைகள்) பன்முகம் காட்டி நிற் கிறாள். மனிதர்களுக்கு வயதானால் முதுமை ஒட்டிக்கொள்ளும். ஆனால் ‘அவள் விகடனு’க்கு வயது கூடக் கூட பல புதுமைப் பகுதிகளுடன் இளமை மிளிரத் திகழ்கிறாள்.

- விஜி ரவி, ஈரோடு

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் எஜமான்

பெண்கள் என்றாலே விவாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள் என்பது என் எண்ணம். அதேபோல் என்னுடைய கருத்துதான் சிறந்தது என்று நினைப்பேன். ஆனால், அவள் விகடனில் பிரசுரமாகும் விரிவான, தெளிவான செய்திகளை, தன்னம்பிக்கை கட்டுரைகளைப் படிக்கும்போது பல விஷயங்கள் என் சிந்தனைக்கும் கருத்துக்கும் மாற்றாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். என் கருத்திலும் தவறு இருக்கலாம் என்பதை தற்போது உணர வைத்துக்கொண்டு இருக்கும் அவள் என் எஜமான். இப்போதெல்லாம் என் கருத்தை வெளி யிடுவதற்கு முன்பு அது சரியாக இருக்குமா என்று யோசிக்க வைத்திருக்கும் அவளுக்கு நன்றி.

- நெ.அகிலா, சங்கராபுரம்

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் ஆசிரியர்

அவள் பொழுதுபோக்கு பத்திரிகையல்ல; பெண்களின் பிரச்னைகளைப் பழுதுபார்க்கும் பத்திரிகை என்பதே சரி. பெண்களை மனிதர்களாக, ஆணுக்கு சமமானவர்களாக, பிரச்னைகளைக் கண்டு அஞ்சி ஓடாதவர்களாக, சுய சிந்தனை உள்ளவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறாள் அவள். என்னைப் பொறுத்தவரை ஸ்பெஷலிஸ்டுகளின் ஆலோச னைகள் வாழ்க்கைப் பாடமாக என்னுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றன. ‘அவள்’ கொடுத்த க்ளூக்கள் அலுவலகத்திலும் புக்ககத்திலும், என்னை ‘கண்டக்ட்’ செய்துகொள்ள பெரிதும் உதவுகின்றன.

- வித்யா வாசன், சென்னை-78

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் என் போராளி

பெண்கள் ஒடுக்கப்படும்போதெல்லாம் தடுக்கப்பட வேண்டும் என்று வீறுகொண்ட வார்த்தை களால், சீறிக்கொண்டு எழும் `நமக்குள்ளே' பகுதியின் மூலம் ஒரு போராளியாகவே தெரி கிறாள் அவள். `மைனஸ்’களை ப்ளஸ்’களாக மாற்றிக்காட்டிய மகளிர்கள், திகைப்பூட்டும் வெற்றிகளைத் திடமாக சாதித்துக்காட்டிய மாற்றுத்திறனாளிகள், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட வர்களின் வெற்றிப் பயணங்கள், தனியொருத்தியாக சாதித்துக்காட்டும் மாதர்கள் என்று வாழ்க்கையில் போராடி வெற்றி கண்டவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து எனக் குள் ஒரு போராட்ட குணத்தை விதைத்துக்கொண்டே இருக்கும் அவள் போராளிதானே!

- கே.பி.ஜெயந்தி, மதுரை-1

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

அவள் ஓர் எதிர்காலம்

நாடறிந்த பெண்களைத் தாண்டி, சாமானிய பன்முகப் பெண்களின் திறன்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் அவள், எனக்கான எதிர்காலத்தைக் காட்டியவள். வெளியாகும் ஒவ்வோர் இதழைப் படிக்கும்போதும் அந்த நாள் எழுச்சிமிகு வசந்த நாளாக அமையும். சுய தொழில் செய்யும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களிடம் பேட்டி கண்டு பிரசுரித்து, அவர்களை அடையாளம் காட்டி வரும் அவள், என் வருங்காலத்தை வசந்தமாக்கிக்கொள்ள உதவியவள். இன்று நான் அவள் இதழின் வாசகி என்பதையும் தாண்டி அவளால் பயனடைந்த பல்லாயிரக்கணக்கான வாசகிகளில் நானும் ஒருத்தி என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்.

- மீனா முருகேசன், தஞ்சாவூர்-1

அவள் என் பார்வையில்...

வாசகிகளே.... நீங்களும் அவள் விகடன் இதழ் குறித்த இதுபோன்ற உங்கள் கருத்தை 60 வார்த்தைகளுக்குள் உங்கள் புகைப்படத்துடன் எழுதி அனுப்பலாம்.