லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: பொம்பளப் புள்ளைன்னா குறைச்சலா?! - ஆட்டோ ஓட்டும் அமுதயாழினி

அமுதயாழினி
பிரீமியம் ஸ்டோரி
News
அமுதயாழினி

- மு.ஆனந்த்

திசையெங்கும், துறையெங்கும் பெண்கள் வெற்றிப் பாய்ச்சல் நடத்திக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும், பெண் குழந்தை என்றால் விரும்பாத குடும்பங்கள்தான் இங்கு பெரும்பான்மை. அதற்கு இன்னுமொரு துயர்மிகு சாட்சி, அமுதயாழினியின் வீடு.

ஆனால், ‘பெண்ணாகப் பிறந்தால் என்ன, மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றால் என்ன, யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் நிற்கலாம்’ என்று தன் மூன்று மகள்களையும் தனி மனுஷியாக வளர்த்து ஆளாக்கிக்கொண்டே, அவர்களுக்குள் நம்பிக்கையையும் விதைத்தபடி இருக்கும் வைராக்கிய மனுஷி அமுதயாழினி. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஆட்டோ ஓட்டிவருபவரின் கதை, அவர் சூழலில் இருக்கும் பிற பெண்களுக்கும் நிறைய தருகிறது தன்னம்பிக்கை.

அம்மா, அப்பா நிலையை உணர்ந்து படிச்சேன்!

``திருச்செங்கோடுதான் சொந்த ஊரு. செங்கல் சூளையில வேலைபார்த்த அம்மாவும் அப்பாவும், அந்த நிலைமை எனக்கும் வந்துடக் கூடாதுனு என்னை படிக்க வெச்சாங்க. அவங்க பட்ட பாடுகளை உணர்ந்து படிச்சு, ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுத்தேன். சென்னையில ஒரு காலேஜ்ல சேர்ந்தேன்.

காதல் கல்யாணம் செய்துகிட்டேன்!

காலேஜ்ல என்கூட படிச்ச வெங்கடேசனும் நானும் காதலிச்சோம். ரெண்டு பேரும் படிப்பை முடிச்சதும், எங்க வீட்டுல என் விருப்பத்தைச் சொன்னேன். முதல்ல மறுத்தாங்க, அப்புறம் ஒருவழியா சம்மதிச்சு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. அவருக்கு சென்னையிலேயே தனியார் கம்பெனியில வேலை கிடைச்சது. ஒரு வருஷத்துல, எங்களுக்கு ரெட்டை பொம்பளப் புள்ளங்க பொறந்தாங்க. எனக்கும் வீட்டுக்காரருக்கும் ரொம்ப சந்தோஷம்.

ஆண் குழந்தை ஏக்கத்தால ஆரம்பிச்சது கஷ்டம்!

வாழ்க்கையில குறைனு எதுவும் இல்லைன்னாலும், ஒரு ஆம்பளப் புள்ள இல்லையேனு எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் ஒரு வருத்தம் இருந்துச்சு. அடுத்து கர்ப்பமானேன். ஆனா, அதுவும் பொண்ணா பொறந்ததாலே, அந்த எண்ணமெல்லாம் விலகிப்போயிடுச்சு. இனி இதுகதான் நம்ம புள்ளைகள், இதுகள எல்லாருக்கும் முன்னால ஆளாக்கிக் காட்டணும்ங்கிறது மட்டும்தான் மனசுல வந்துச்சு. ஆனா, என் வீட்டுக்காரரு, மூணும் பொண்ணா போச்சேனு புலம்பிட்டே இருந்தாரு. குடிக்கவும் ஆரம்பிச்சுட்டாரு.

2K kids: பொம்பளப் புள்ளைன்னா குறைச்சலா?! - ஆட்டோ ஓட்டும் அமுதயாழினி

தலைகீழானது நிலைமை!

என் வீட்டுக்காரர்கிட்ட எவ்வளவு மன்றாடியும் அவர் குடியை நிறுத்தல. ‘ஆம்பளப் புள்ள, பொம்பளப் புள்ள வித்தியாசமெல்லாம் இனி இல்ல, நம்ம புள்ளைகள நாம நல்லா படிக்க வெப்போம், அவங்க நம்ம பேர் சொல்ற மாதிரி வாழ்வாங்க’னு எல்லாம் அவர்கிட்ட நான் எவ்ளோ சொல்லியும் பலனில்ல. ஒரு கட்டத்துல ஆபீஸுக்கும் குடிச்சுட்டுப் போக, அவரை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. வருமானம் இல்லாம வீடு இருண்டு போச்சு.

ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்!

என் கணவர்கிட்ட மன்றாடுறதைவிட, குடும்பத்தைக் காப்பாத்த நான் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறதுதான் தீர்வுனு புரிஞ்சது. படிச்ச படிப்புக்கு வேலை எதுவும் கிடைக்கல. அது கிடைக்கிற வரை தேடுற நிலையில என் வீடும் இல்ல. டிரைவிங் கத்துக்கிட்டு, ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன். தினமும் 8 மணிநேரம் ஆட்டோ ஓட்டினாதான் குடும்பத்தை ஓட்ட முடியும். கடினமான வேலதான். ஆனா, என் பொண்ணுங்களை நினைச்சா எனக்கு முன்னால எந்தக் கஷ்டமும் பெருசா நிக்காது. என் வீட்டுக்காரர், நான் சம்பாதிக்கிற காசையும் வாங்கிட்டுப் போய் குடிச் சுட்டு வந்து என்னையே அடிப்பார். இப்ப பிரிஞ்சுட் டோம்.

என் பொண்ணுங்க நாளைக்கு பதில் சொல்வாங்க!

எங்க அப்பா, அம்மா என்னை பொம்பளப் புள்ளைனு சொல்லி வேணாம்னு சொல்லல. நான் இன்னிக்கு சொந்தக் கால்ல நின்னு அவங்க வளர்த்த வளர்ப்புக்கு நியாயம் செஞ்சுட்டேன். அதே மாதிரி, என் மூணு பொண்ணுங்களும் நாளைக்கு நல்ல நிலைமைக்கு வந்து எல்லாத்துக்கும் பதில் சொல்லுவாங்க. அதுவரை நான் அவங்களுக்கு அப்பாவா வும் அம்மாவாவும் ஓடிட்டே இருப்பேன்!”

- அமுதயாழினியின் ஆட்டோ பறக்கிறது வைராக்கிய வேகமெடுத்து!