கடல் டிராகன் என்றழைக்கப்படும் 72 மீட்டர் நீளமுள்ள பாய்மரக்கப்பலில் 38,000 கடல் மைல் தூரம் (சாலை அளவாகக் கொண்டால் 70,000 கிலோமீட்டர்) பயணம் செய்யவிருக்கிறது ‘பெண்கள் மட்டும்’ குழு ஒன்று. கடலின் சீற்றம், புயலின் தாக்கம், எலும்பை உறையவைக்கும் குளிர் போன்ற பல சவால்களை உள்ளடக்கிய இந்த ஆபத்தான சாகசப் பயணத்தின் மிஷன்... பிளாஸ்டிக் அரக்கனிடமிருந்து கடலைக் காப்பது!

கடல் மாசு பிரச்னையில் கவனம் செலுத்திவரும் தன்னார்வத் தொண்டு அமைப்பான ‘எக்ஸ்பெடிஷன் (eXXpedition)’ ஒருங்கிணைக்கும் இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், கடல்சார் உயிரியல் மாணவர்கள், உயிரின திரைப்பட வல்லுநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என உலகின் பல பகுதிகளில் வாழும் 380 திறமையான பெண்கள், இதில் கலந்துகொள்ள முன்வந்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கவிருக்கிறது இந்தக் கடல் பயணம். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் உலகின் பல கடல்களைச் சுற்றிவரவிருக்கிறார்கள் இந்தப் பெண்கள்.

சரி, `மகளிர் மட்டும்’ பயணமாக இது அமையக் காரணம் என்ன? ``பிளாஸ்டிக் நச்சால் இருபாலரும் பாதிக்கப்பட்டாலும், பெண்கள் இந்த விஷத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசேர்க்கத் தள்ளப்படுகிறார்கள். ஆரம்பத்தில், கடலில் இருக்கும் மீன்கள், திமிங்கிலங்கள், ஆமைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கடல் உணவுகள் மூலம் பெண்களின் உடலுக்குள் கலக்கும் நச்சு, அவர்களின் கருவில் வளரும் சிசுவரை பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு பிளாஸ்டிக் நச்சு காரணமாக ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு, கருவின் வளர்ச்சியும் சிக்கலாகிறது. மேலும், பிளாஸ்டிக் நச்சு கருப்பை, மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வைக் கொண்டுசெல்லத்தான், இந்த ‘மகளிர் மட்டும்’ கடல் பயணம்’’ என்கிறார், இந்தப் பயணக் குழுவின் தலைவி எமிலி பென்.

10 ஆண்டுகளுக்கு முன் ஒரு கடல் பயணத்தின்போது, கரையிலிருந்து 1,000 கடல் மைல்களுக்கு அப்பால், அட்லான்டிக் கடலின் நடுவே மிதந்த ஒரு டூத் பிரஷ்தான், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் பரவும் வேகத்தை எமிலிக்கு சுட்டிக்காட்டியது. ஜப்பான் நாட்டு உணவுப்பைகள் கனடா நாட்டின் ஆள் நடமாட்டமில்லாத தீவுகளின் கரைகளில் ஒதுங்கியிருப்பதைக் கண்டபோது, அதன் தீவிரத்தை எமிலி உணர்ந்தார். ஹவாய் தீவின் அருகே நடுக்கடலில் மிதந்துகொண்டிருந்த ஒரு பிளாஸ்டிக் குப்பைமேடு அவரை அதிர்ச்சியில் உறையவைத்தது. `பிளாஸ்டிக் மாசு, வடக்கு பசிஃபிக் கடலின் பிரச்னை மட்டுமல்ல; உலகின் அனைத்துக் கடல்களுக்கும் பொதுவான பிரச்னை' என்பதை உணர்ந்த எமிலி, சில ஆண்டுகளுக்கு முன் 10 பேருடன் பாய்மரக்கப்பல் பயணம் ஒன்றை மேற்கொண்டார். இன்று அது, 380 பெண்களுடன் உலகம் சுற்றும் ஆராய்ச்சிப் பயணமாக மாறியுள்ளது.

‘பிளாஸ்டிக் கழிவுகளால் கடலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் கற்பனைக்கும் எட்டாதவை. வருடத்துக்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. கடல் அன்னையால் ஜீரணிக்கமுடியாத அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் மிதக்கின்றன. 2050-ல் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள்தாம் கடலில் அதிகமாக இருக்கும்.

எங்கள் பயணம், பிளாஸ்டிக்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆர்டிக், அட்லான்டிக், பசிஃபிக், இந்தியப் பெருங்கடல், கலாபாகோ, தென் பசிஃபிக் தீவுகள் எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இங்கெல்லாம் கடலும் கடலோரப்பகுதிகளும் அதிகளவில் மாசுபட்டுள்ளன. கடல் வாழ் உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. கடல் பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவு, மாசுபட்ட நீர், கடல் மணல், ஏன்... காற்றின் மாதிரிகளைக்கூட நாங்கள் இந்தக் கடல் பரப்புகளிலும், தீவுகளின் கரையோரங்களிலும் இருந்து சேகரித்து வருவோம். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்கள் எந்த அளவுக்கு நாசமாகியுள்ளன என்பதை இந்த ஆய்வுகள் வெளிச்சமிட்டுக் காட்டும்’ என்கின்றனர் குழுவில் பங்குபெற்றுள்ள கடல்சார் ஆராய்ச்சியாளர்கள்.

‘ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்கின் உபயோகத்தை நிலத்தில் கட்டுப்படுத்தினால் மட்டுமே கடலைக் காப்பாற்ற முடியும். அதற்குத் தேவை, மக்களின் மனமாற்றம். எங்கள் பயணமும், அதில் நாங்கள் பெற்றுவந்து உலகத்திடம் பகிர்ந்துகொள்ளவிருக்கும் அனுபவங்களும், எங்கள் ஆய்வுகளின் முடிவு களும் அந்த மனமாற்றத்தை மக்களிடம் உண்டாக்கும்’ என்கிறது இந்தப் பெண்கள் குழு.

கடலைக் காக்கப் புறப்படும் பெண்கள் படைக்கு வாழ்த்துகள்!