Published:Updated:

கணவருடன் சேர்த்து வைக்க கோரும் சிம்ரன்!

Vikatan Correspondent
கணவருடன் சேர்த்து வைக்க கோரும் சிம்ரன்!
கணவருடன் சேர்த்து வைக்க கோரும் சிம்ரன்!
கணவருடன் சேர்த்து வைக்க கோரும் சிம்ரன்!

ஈரோடு: தாலி கட்டிய கணவரை சேர்த்து வைக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை சிம்ரன் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஈரோடு பழைய ரயில்நிலையம் பகுதியை சேர்ந்தவர் சிம்ரன் (28). திருநங்கையான இவர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக்கொண்டு இருந்தார். அங்கு வந்த திருநங்கை சிம்ரன் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், நான் ஒரு திருநங்கை. எனக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது எங்களுக்குள் காதலாக மாறியது. நாங்கள் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்தோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோடு ஆலமரத்து வீதியில் உள்ள முனியப்பன் கோயிலில் வைத்து அவர் எனக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார்.

அவர் கேட்டுக்கொண்டதற்காக நான் எனது உடலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்தநிலையில் எனக்கு தாலி கட்டிய எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்.

என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார். அவரை என்னோடு சேர்ந்து வாழச்செய்ய வேண்டும். எனது கணவரால் நான் நிறைய இழந்து விட்டேன். எனவே எனக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.

நான் அவரது மனைவி என்ற முறையில் எனக்கு அவர் ஜீவனாம்சம் வழங்கவேண்டும். எனது கணவரின் வீட்டை சேர்ந்தவர்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு நல்ல தீர்வு கிடைக்கச்செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மனுவுடன், திருநங்கை சிம்ரனும், அவருக்கு தாலி கட்டியதாக கூறப்படும் இளைஞரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், திருமண மாலையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்டினார்.

இந்த சம்பவம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.