Published:Updated:

உளவுப்பிரிவுக்கு முதன்முறையாக பெண் போலீஸ் துணை கமிஷனர் நியமனம்!

உளவுப்பிரிவுக்கு முதன்முறையாக பெண் போலீஸ் துணை கமிஷனர் நியமனம்!
உளவுப்பிரிவுக்கு முதன்முறையாக பெண் போலீஸ் துணை கமிஷனர் நியமனம்!
உளவுப்பிரிவுக்கு முதன்முறையாக பெண் போலீஸ் துணை கமிஷனர் நியமனம்!

சென்னை: காவல்துறை வரலாற்றில் உளவுப் பிரிவுக்கு அஸிஸ்டெண்ட் கமிஷனரோ, டெபுடி கமிஷனரோ போஸ்டிங்கில் இருந்ததில்லை.. முதன் முறையாக விமலா நியமனம்.

சென்னை, மாதவரம் போலீஸ் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இதுவரை இருந்து வந்த விமலா, இதற்கு முன்னர் சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனர்,  போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் போன்ற பொறுப்புகளில் இருந்தவர். குரூப் ஒன் தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி.யாக காவல் பணியில் இருந்து வந்த விமலா, பதவி உயர்வு பெற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக தலைமையிடத்தில் வரதட்சணை தடுப்புப் பிரிவு கூடுதல் துணை கமிஷனர் பொறுப்பில் திறம்பட பணியாற்றியவர்.

உளவுப்பிரிவில் பணியாற்றுவதென்பதே பெரும் சவாலான ஒரு பணி என்பது காவல் துறை வட்டாரத்தின் கருத்து. அது உண்மையும் கூட.. மவுன சாமியார் என்று போலீஸ் பீட்டில் வர்ணிக்கப்பட்டவர் சடகோப ராமானுஜம். ஆனால். அரசியல் கட்சிகளின் சதுரங்க விளையாட்டையும், அரசுக்கு எதிரான சிறு சிறு கட்சிகளின் காய் நகர்த்தலையும் முன் கூட்டியே ஸ்மெல் செய்து அரசாங்கத்தை (ஆளும் கட்சியின்) ஆடாமல் அசையாமல் நகர்த்திக் கொண்டு போனதில் சமர்த்தர்.

இவருடைய காலகட்டம் தொண்ணூறுகளின்  மையத்தில் சென்னை போலீஸ் ஏரியாவில் கொடி கட்டிப் பறந்தது. இவருக்கு சீனியர் இருதயதாஸ். எண்பதுகளின் துவக்கம் முதல் இறுதிவரை ஆட்சிகளில் ஏற்பட்ட மாற்றம், ஏற்றத் தாழ்வுகள் எதுவுமே இவருடைய சீட்டுக்கு ஆபத்தாக இருந்ததில்லை. ஆட்சியில் யார் இருந்தால் என்ன, என் பணி நுண்ணறிவில் ஜொலிப்பதே என்று செயலாற்றியவர் இருதயதாஸ். இவரைத் தொடர்ந்து பலர் உளவுப் பிரிவுக்கு வந்து போனாலும் சடகோப ராமானுஜம் போல் ஜொலிக்கவில்லை.. சடகோபனுக்குப்பின் இந்த சீட்டுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் இளங்கோ. ஐ.எஸ்.இளங்கோ, இன்ட் இளங்கோ என்றே ஆகி விட்டவர்.

உதவி கமிஷனர், கூடுதல் துணை கமிஷனர் பின்னர் ஓய்வோடு துணை கமிஷனர் பதவி உயர்வு வரை ஒரே சீட்டில் இருந்து திறமையைக் காட்டியவர் இளங்கோ. இளங்கோவுக்குப் பின் உளவுப் பிரிவின் துணை கமிஷனர், இணை கமிஷனர், கூடுதல் கமிஷனர் என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக ஒரே சீட்டில் மேலே மேலே போய் நின்றிருப்பவர் வரதராஜூ. காவல்துறை வரலாற்றில் இந்த மனிதரின் பதவி உயர்வு என்பது  போல ஒரே பிரிவில் (உளவுப்பிரிவு) யாருமே இருந்து கொண்டு பதவி உயர்வை நோக்கிச் சென்றதேயில்லை. இந்த நிகழ்வானதும் போலீஸ் வரலாற்றில் முதன்முறை அமைந்து விட்ட ஒன்று.

உளவுப் பிரிவில், அதுவும் ஏ.சி.இன்ட், டி.சி. இன்ட், ஜே.சி.இன்ட், அடிசனல் கமிஷனர் இன்ட் என்ற பதவிகளானது எப்போதும் தலைக்கு மேல் ஒரு கத்தியை சுழன்று கொண்டே வைத்திருப்பதற்கு சமமானது எனலாம். கீழே பணியாற்றும் கான்ஸ்டபிள், ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், ஏ.சி., போன்றோரிடமிருந்து ஒட்டுமொத்த சிட்டியின் நிகழ்வுகள் இன்னபிற மூவ் மெண்ட்டுகளை 'கிராஸ் செக்' செய்து மேலிடத்துக்கு கொடுக்கும் பணியானது அத்தணை லேசான காரியமல்ல. அதில் நாம் குறிப்பிட்ட மூவருமே காவல் துறையின் உளவுப் பிரிவில் முத்திரை பதித்தவர்கள். இந்நிலையில், முதன் முறையாக பெண் அதிகாரி விமலா இந்த சீட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார். புதிய அடையாளத்தை, புதிய நம்பிக்கையை விமலா விதைப்பாரா? காலம்தான் தீர்மானிக்க முடியும்.

-ந.பா.சேதுராமன்