Published:Updated:

போராட்டம் எதற்கானதாக இருக்க வேண்டும்?

போராட்டம் எதற்கானதாக இருக்க வேண்டும்?
போராட்டம் எதற்கானதாக இருக்க வேண்டும்?
போராட்டம் எதற்கானதாக இருக்க வேண்டும்?

நிர்பயாவை (ஜோதி சிங் ) தெரியாதவர்கள் இந்தியாவில் மிகக் குறைவு. நமக்கு எத்தனை பேருக்கு  சூசெட் ஜார்டனை தெரியும். இப்படி சொன்னால் ஞாபகத்திற்கு வரலாம் பார்க் ஸ்ட்ரீட் சர்வைவர்.

சூசெட் ஜார்டன், சமீபத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போன பின், அவருக்கு பாலியல் கொடுமைகள் இழைத்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.

தன் பெயரை மறைக்க முயன்ற ஊடகங்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஆணித்தரமாக ஒரு கருத்தை பதிவு செய்தார். தன் பெயர் சூசெட் என்றும், பாதிக்கப்பட்ட தான் எப்போதும் தன்னை மறைத்து வாழ விரும்பவில்லை என்றும் கூறினார். பாலியல் கொடுமை செய்பவர்கள் தான் வெட்கித் தலை குனிந்து மறைவாக வாழ வேண்டும்.

இன்றும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் நபரை மறைத்து அவரை அமைதிப்படுத்தவே முயல்கிறது சுற்றமும் நட்பும். இது ஆண்பாலாக இருந்தாலும் சரி பெண்பாலாக இருந்தாலும் சரி. பொய்யான வரதட்சணை வழக்குகளில் சிக்கி உயிரை மாய்க்கும் ஆண்களை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அவர்களை ஒரு புள்ளி விவரமாக கடந்து செல்வதே நம் இயல்பு.  பெயர்களை மறைப்பது பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் அது தவறு செய்பவர்களுக்கு கொடுக்கும் தைரியம் அதிகம்.

நிர்பயாவிற்கோ சூசெட்டுக்கோ கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சம் வாய்க்கபெறாத எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கின்றனர். அவர்களது வழக்குகள் பாதி வீட்டிலேயும், காவல் நிலையத்திலேயுமே 'முடிக்கப்பட்டு' விடுகின்றன. நீதிமன்றம் வரை செல்லும் வழக்குகள் கூட,  எந்த மாதர் சங்கத்தின் போர்க் கொடியுமில்லாமல் அமைதியாக வாய்தா வாங்கி கொண்டே இருக்கின்றன.

இவர்களை மறைத்து ஒதுக்குவது சட்டமோ அரசாங்கமோ இல்லை, சமூகம்தான். சூசெட் ஜார்டன்  ஒரு முறை உணவகத்திற்கு  சென்றபோது,  அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரே காரணத்தால் அனுமதி மறுத்தனர். சூசெட் இதனால் துவண்டு விடவில்லை. அதுதான் அவரை பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குரல் கொடுக்க களத்திற்கு அழைத்துவந்தது.

“ நான் இரண்டு குழந்தைகளும் தாய், எனக்கு நிகழ்ந்த  வன்முறையால் நான்  அழுது கொண்டு இருந்தால் என் மகள்களை யார் பார்த்து கொள்வார்கள்?” என்றார். 'நிஜமாகவே பாதிக்கப்பட்ட பெண் எப்படி இப்படி பேச முடியும்' என அப்போதும் சமூகம் குறை கண்டுபிடிக்கதான் முனைந்தது.

போராட்டம் எதற்கானதாக இருக்க வேண்டும்?

சூசெட்டை போன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அனைவருக்கும் வந்துவிடுவது இல்லையே. அது அல்லாமல் அந்த துயரமான நிகழ்வுகளிலேயே வாழும் பலரும் உண்டு நம் சமூகத்தில். சூசெட் போராடியது தன் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுக்காகதான். தான் பொறுப்பேற்க முடியாத ஒரு தவறுக்கு சமூகமும், அதிகாரிகளும் தன்னை குற்றவாளிபோல நடத்தப்படும் நிலைதான் பலருக்கும்.

சட்டங்களால் தாமதமான நியாயத்தை மட்டுமே பெற்றுத் தர முடியும். அந்த 10-15 வருடங்களுக்கு பின்,  அந்த நபரால் இழந்த வாழ்க்கையையும் சந்தோஷத்தையும் பெறுவது கடினம். இங்கேதான் சுற்றம் நட்பின் பங்கு அதிகம். அவர்களை ஒதுக்காமல் வேறுபடுத்தி பார்க்காமல் இருந்தால்தான் அவர்களால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

போராட்டம் எதற்கானதாக இருக்க வேண்டும்?

சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பில், 'பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்வீர்களா?' என்று கேட்ட போது, முக்கால்வாசி பேரின் பதில் இல்லை என்பது வருத்தம்தான். சமூக வலைத்தளங்களில் காரசாரமான ஸ்டேட்டஸ்களை தட்டி விட்டு அடுத்த வேலையை பார்க்க செல்வது மட்டும் போதாது என்பதை உணரும்போதுதான்,  அவர்களின் மறுவாழ்வுக்கு வழி வகுக்க முடியும்.

பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்கும் நியாயம் கிடைக்க போராடும் நாம்,  உண்மையில் எவற்றுக்காக போராட வேண்டும்..? சமூக மாற்றத்திற்கும்,  பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கும்தானே...?!

- ஐ.மா.கிருத்திகா

(மாணவப்பத்திரிக்கையாளர்)