Published:Updated:

'நாங்களும் மனிதர்கள் தான்..!' இடஒதுக்கீடு கோரும் திருநங்கை, நம்பியர்கள்

'நாங்களும் மனிதர்கள் தான்..!' இடஒதுக்கீடு கோரும்  திருநங்கை, நம்பியர்கள்
'நாங்களும் மனிதர்கள் தான்..!' இடஒதுக்கீடு கோரும் திருநங்கை, நம்பியர்கள்

ருகாலத்தில் மிகக் கேவலமான வார்த்தைகளால் அழைத்து அசிங்கப்படுத்தப்பட்டவர்கள், வேதனைகள் நிறைந்த போராட்ட காலங்களுக்குப் பின்னர் திருநங்கையர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கால மாற்றத்தில் அவர்களின் பெயர் மட்டும்தான் மாறியிருக்கிறதே தவிர, அவர்களுக்கு இந்தச் சமுதாயத்தால் கொடுக்கப்பட்ட உடல் வலியும், மனவலியும் சற்றும் குறைந்தபாடில்லை. அவர்களை மூன்றாம் பாலினமாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை.

குடும்பத்தால் புறக்கணிப்பு

குடும்பத்தில் ஒரு குழந்தை, திருநங்கை எனத் தெரிந்துவிட்டால்,  குடும்ப உறுப்பினர்கள் அக்குழந்தைகயைப் புரிந்து கொள்வதில்லை, புரிந்துக் கொள்வதற்கான எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை, இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நம் குடும்பத்துக்குப் பெரிய அவமானம் என வெளியே துரத்திவிடுகிறார்கள். வேறு வழியே இல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறும் அவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அக்கம்பக்கத்தினரின் இழிவு பேச்சு, பொது இடங்களில் வித்தியாசமான பார்வை,  சமூகத்தால் ஒதுக்கப்படும் அவர்களின் பாதுகாப்பற்ற நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பலர் பாலியல் தொல்லைகள் கொடுக்கின்றனர். வாழ்வில் முதன் முதலாக இது போன்ற பிரச்னைகளைச் சந்திக்கும் பிஞ்சு நெஞ்சுகள் செய்வதறியாது திகைத்து தங்களின் வாழ்க்கையையே முடித்துக்கொள்கிறார்கள்.

ஒருவேளை அத்தகைய எதிர்ப்புகளைக் கடந்து உயிர் வாழ்ந்தாலும், தனக்கு எதிராக மாறிவிட்ட சமூகத்தில் வாழ்வதற்கு தினம் தினம் போராடிக் கொண்டிருக்கின்றனர், நேர்மையாக வாழ்வதற்கு வேலை தேடுகின்றனர், ஆனால், அவர்களுக்கு வேலைத் தர யாரும் முன்வருவதில்லை, அவர்களை சக நண்பனாக, சகோதரியாக, நல்ல தோழியாக ஏற்றுக்கொள்ளவும் யாருடைய இதயமும் தயாராக இல்லை. முடிவில் அவர்கள் தங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்துவிடுகின்றனர். திருநங்கைகள் அனைவருமே குடும்பத்தால், இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களே.

எதிர் நீச்சல் போடுகிறார்கள்

தற்போதுள்ள காலக்கட்டத்தில், சமூகத்தை எதிர்த்து நீச்சலடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பல பிரச்னைகளுக்கு நடுவே அவர்களும் சாதிக்கத் தொடங்கிவிட்டனர். கல்லூரியில் சேர்ந்து படிப்பது, வேலைவாய்ப்புகளைப் பெறுவது, பொதுப்பணிகள் செய்வது, சுய தொழிகள் செய்வது, என முன்னேறி உள்ளனர்.

திருநங்கைகள் வாழ்வுக்காகப் போராடி வரும் பத்மஷாலிக்கு கர்நாடக அரசு 'ராஜ்யோட்சவா' விருது கொடுத்துக் கவுரவித்தது, ப்ரித்திகா யாஷினி உதவி காவல் ஆய்வாளராகத் தேர்வானார். திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயா சத்துணவு ஆய்வாளர் பணியை பெற்றார். இவர்கள் சில உதரணங்கள்தான். இதேபோல் எவ்வளவோ திருநங்கைகள் சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கூட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமனா பட்ட மேற்படிப்புக்காக கல்லூரியில் விண்ணபித்து உள்ளார், ஆனால், திருநங்கைகளுக்கென எந்த இட ஒதுக்கீடும் கிடையாது என சுமனாவை புறக்கணித்து உள்ளனர், தனது கடும் முயச்சியினால் கல்யாணி பல்கலைக் கழகத்தில் சேர்ந்து இப்போது மேற்படிப்புப் படித்து வருகிறார்.

வாழும் ஒவ்வொரு நாட்களையும் பல போராட்டங்களோடு எதிர்கொள்ளும் இவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் மக்களவையின் முன் வைக்கப்பட்ட திருநங்கையர் உரிமைப் பாதுகாப்பு மசோதா நம்பிக்கைத் தரும் என்று கருதப்பட்டது. ஆனால், திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பற்றி இந்த மசோதாவில் ஏதும் சொல்லப்படவில்லை.

கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை

இந்த மசோதாவை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 21ம் தேதி திருநங்கைகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது, இதுகுறித்து திருநங்கைகள் தலைவியான கிரேஸ் பானுவிடம் கேட்டோம்.

"மசோதாவனாது எங்களுக்கு எதிராக பல பிரிவுகளையும், பல கூறுகளையும் உள்ளடக்கி உள்ளது. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புக்கான எங்களின் வாழ்வாதார கோரிக்கையை புறக்கணித்துள்ளது. எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாகச் சொல்கின்றனர், திருநங்கைகளுக்கு லோன் கொடுக்கப் படவேண்டும், சுயதொழில் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றே சொல்கிறார்கள், உண்மையில் நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால் வங்கிக் கடன் மற்றும் சுயதொழில் செய்துகொடுத்தால் மட்டும் போதுமா? எங்களுக்கென்று கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடுகளைப் பற்றி யாருமே நினைத்துக்கூட பார்ப்பதில்லை. இதனால் நாங்கள் எல்லாக் காலங்களிலுமே பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க வேண்டுமா. பாலியல் தொழில் மட்டும்தான் செய்யவேண்டுமா? எங்களுக்கும் படிக்கவேண்டும், அரசு வேலைக்குப் போகவேண்டும் என்ற லட்சியம் இருக்காதா? நாங்களும் மனுஷங்கதான்

திருநங்கையர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தோம். அதில் இன்னும் ஆறு மாதங்களில் தமிழக அரசு இதற்கு பதிலளிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்." என்றார்

-ஜெ.அன்பரசன் ,படங்கள்: முத்துக்குமார்