`சோ வாட்..? என் வாழ்க்கை என் உரிமை!' - 69 வயது நடிகையின் `வைரல் போட்டோஷூட்'

ரஜினியின் இந்தப் புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் மிகவும் பாராட்டியுள்ளன.
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த `தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் அடுக்களைக்குள் அடைபட்டுத் திணறும் பெண்களின் வாழ்க்கையை உரக்கப் பேசியிருப்பது மொழி, இன பேதமின்றி நாடு முழுக்கவும் விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அதே கேரள மண்ணிலிருந்து ரஜினி சாண்டி என்கிற 69 வயது நடிகை சமீபத்தில் வெளியிட்ட அவரது புகைப்படங்கள், மற்றுமொரு பேசுபொருளாகி இருக்கிறது.
குடும்பத் தலைவியாக இருந்து நடிகையாக மாறிய ரஜினி சாண்டி, பொதுவாக வண்ண வண்ணப் புடவைகளில் வலம் வருவார். அவர் இந்தமுறை நீளமான மேற்கத்திய ஆடை, ஜம்ப்சூட் (Jump suit), ஜீன்ஸ், குட்டையான டெனிம் டிரெஸ் (Short denim dress) போன்ற ஆடைகளை அணிந்து போட்டோஷூட்டில் கலந்துகொண்டு அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டார்.
இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஆதிரா ஜாய் என்கிற 29 வயதுப் பெண் புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. ஆதிரா ஜாய் வித்தியாசமான ஒரு புகைப்படக் கலைஞர். காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை உடைத்து புதுமையான புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டுபவர்.
``இந்தியப் பெண்களைப் பொறுத்தவரையில் குடும்பம் என்கிற கூண்டுக்குள் அடைந்து குழந்தைகளை வளர்த்தெடுக்கின்றனர். அவர்களுக்கு 60 வயது ஆகும்போது அவர்களுடைய வாழ்க்கையே கிட்டத்தட்ட முடிந்துபோய்விடுகிறது. அடுத்து தங்களுடைய பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டிகளாக வாழ ஆரம்பித்து விடுகின்றனர்.
என்னுடைய 65 வயது அம்மாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். வழக்கமாக அந்த வயதுகளில் இருக்கின்ற அம்மாக்களுக்கு என்னவெல்லாம் உடல் உபாதைகள் இருக்குமோ அவை அனைத்தும் என் அம்மாவுக்கும் இருக்கின்றன. ஆனால், ரஜினி சாண்டி அப்படியில்லை. அவர் தன்னை நன்கு கவனித்துக் கொள்கிறார். இந்த வயதிலும் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். மிகுந்த தைரியசாலியாகவும், ஃபேஷன் குறித்த ஆர்வம் மிகுந்தவராகவும் காணப்படுகிறார். அவருடைய வயது 69 என்றாலும் அவர் மனதளவில் 29 வயதில்தான் இருக்கிறார். அதனாலேயே அவரை வைத்து இந்த போட்டோ ஷூட்டை நான் மேற்கொண்டேன்” என்கிறார் ஆதிரா ஜாய்.
ரஜினியின் இந்தப் புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் மிகவும் பாராட்டியுள்ளன. `வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்’ என்றும், `போல்ட்’, `பியூட்டிஃபுல்’, `ஸ்டன்னிங்’, `இப்புகைப்படங்கள் பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்’ என்பதுபோன்ற பாசிட்டிவ் கமென்ட்களும் பலரிடமிருந்து வந்திருக்கின்றன. அதே நேரம், இந்தப் புகைப்படங்கள் குறித்து தரக்குறைவான விமர்சனங்களும் அதிக அளவில் வந்துள்ளன.

ஆனால், இவற்றை ரஜினி சாண்டி பொருட்படுத்தவில்லை. ``வயதாகிவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்கிற அர்த்தம் கிடையாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ முழு உரிமை உள்ளது. இதை என் சக பெண்களுக்கு உணர்த்தவே இந்தப் போட்டோ ஷூட்டை மேற்கொண்டேன்” என்கிறார் ரஜினி சாண்டி அழுத்தமாக.