Published:Updated:

தமிழகத்தின் முதல் ‘மதிப்புறு முனைவர்’ திருநங்கை... நர்த்தகி! (நடன வீடியோ)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தின் முதல் ‘மதிப்புறு முனைவர்’ திருநங்கை... நர்த்தகி!  (நடன வீடியோ)
தமிழகத்தின் முதல் ‘மதிப்புறு முனைவர்’ திருநங்கை... நர்த்தகி! (நடன வீடியோ)

தமிழகத்தின் முதல் ‘மதிப்புறு முனைவர்’ திருநங்கை... நர்த்தகி! (நடன வீடியோ)

நாட்டியக் கலைஞர், திருநங்கை நர்த்தகி நடராஜ்க்கு, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கியுள்ளது. சங்க இலக்கியங்களையும் நவீன கவிதைகளையும், தமிழிசையையும் தம் நடனத்தில் பயன்படுத்தி பெருமை சேர்த்ததற்காகவும், பால்திரிபு நிலைக் குழப்பங்களைக் கடந்து வெற்றிகரமான முன்மாதிரியாக விளங்கியதைப் பாராட்டியும் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெறும் முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ்தான். ஏற்கெனவே, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் குடியரசுத்தலைவர் விருதுகளையும் நர்த்தகி பெற்றுள்ளார்.

நர்த்தகியின் சொந்த ஊர் மதுரை, அனுப்பானடி. அப்பா பெருமாள்பிள்ளை. அம்மா சந்திரா. 10 பிள்ளைகளில் ஐந்தாவதாகப் பிறந்தவர் நர்த்தகி. சிறு வயதிலேயே தன் பாலினக் குழப்பத்தை உணரத் தொடங்கிய நர்த்தகிக்கு, அவரின் வீட்டுக்கு அருகிலேயே இருந்த மற்றொரு திருநங்கையான சக்தி, உற்ற தோழியாக அமைந்தார். இருவருக்கும் இயல்பாகவே நடனத்திறன் அமைந்திருந்தது வரம். மீரா என்னும் மூத்த திருநங்கை இருவரையும் தத்தெடுத்து வழிகாட்டினார். வைஜெயந்தி மாலாவை ஆதர்சமாகக் கொண்டிருந்த இருவரும், அவரின் குருவான தஞ்சாவூர் கே.பி.கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் பயில்வதை இலக்காகக் கொண்டு தஞ்சாவூர் சென்றார்கள். கிட்டப்பா, அவர்களை அவ்வளவு எளிதில் மாணவிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஓராண்டு காலம் அவரின் வீட்டு முன்பாகவே நின்றார்கள். அவர்களின் உறுதியைக் கண்டு நெகிழ்ந்த கிட்டப்பா, இருவரையும் தன் மகள்களாக ஏற்று நடன நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார். சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் அரங்கேற்றமும் செய்து வைத்தார்.

இன்று உலகம் முழுவதும் பயணித்து, பல ஆயிரம் மேடைகளைக் கடந்திருக்கும் நர்த்தகி, வெள்ளியம்பலம் அறக்கட்டளை நடனக் கலைக்கூடம் என்ற பெயரில் ஒரு நடனப்பள்ளியைத் தொடங்கி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கி வருகிறார்.
தன் வெற்றி குறித்து, நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் நர்த்தகி நடராஜ்.

“குறிப்பிட்ட சமூகப் பெண்களுக்கு மட்டுமே உரியதா இருந்த நாட்டியக்கலையில், எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு திருநங்கை தனி அடையாளத்தோட ஜெயிக்க முடிந்தது என்றால் அதற்குப் பின்னால ரத்தமும், சதையுமான வலி, வேதனை, அவமானம்ன்னு ஆயிரம் கதை இருக்கு. இன்னைக்கு அதைத் திரும்பி பார்த்தா அந்த காயங்கள் எல்லாம் தழும்புகளா காய்ஞ்சு கிடக்கு. ஆனா, அதெல்லாம் தான் எனக்கு மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் விதைச்சுச்சு.

இன்றைக்கும் என்னால் நம்பமுடியாத வியப்பு, அந்த பால்யகால நடனம் தான். யாரும் ஊன்றாத விதை. நான் அறிந்து, எங்கிருந்தும் அது வரவில்லை. ஒரு விதமான தேவ நடனம் அது. நான் எனக்குள் இருந்த பெண்மையை உணர்வதற்கு முன்பாகவே நடனத்தை உணர்ந்து விட்டேன். வீட்டில் உள்ளவர்களால் எனது பாலின மாறுதலை ஜீரணிக்க முடியலே. ஆனாலும் என் போக்கைத் தடுக்கலை. என்னையும், சக்தியையும் மகளா ஏத்துக்கிட்ட மீரா அம்மா தான் எங்க பாதையை நேர்ப்படுத்தினாங்க. அவரை மட்டும் சந்திக்காமல் போயிருந்தால் எங்க வாழ்க்கை வேறுவிதமாக மாறியிருக்கும்.

வைஜெயந்திமாலாவின் நடனத்தின் மேல எனக்கு அளவில்லாத ஈடுபாடு. அவர்களின் ஒவ்வொரு அங்கமும் கீர்த்தனைக்கு தக்கமாதிரி இயல்பை மாற்றிக்கொள்ளும் நுணுக்கத்தை பார்த்து வியந்து போயிருக்கேன். அவர் நடனம் கற்ற குருவிடமே நானும் நடனம் கற்றுக்கொள்ளணும் என்பது என் அடிமனதில் ஊறிக்கிடந்த லட்சியம்.

மற்ற மாணவிகள் வைரமும், தங்கமும் தட்சணையாகத் தருவார்கள். நாங்கள் கோதுமை மாவைக் கொண்டுபோய் கொடுப்போம். எந்தவிதத்திலும் வேறுபாடு பார்க்க மாட்டார். தஞ்சை நால்வரின் சங்கதிகளை கற்றுக்கொள்ள குறைந்தது 6 வருடங்களாவது ஆகும். ஆனா எனக்கு ஒரே வருடத்தில கத்துக்கொடுத்தார். நடராஜாக இருந்த என்னை நர்த்தகியாவும் மாற்றினார்.

நாட்டியத்தில என் தேடலும், பாணியும் வேறு மாதிரியானது. தேவதாசிகள்ன்னு சொல்லப்படுற இறைமகளிர், ஆண்டவனுக்காக ஆடிய நடனத்தோட வேறு வடிவம் தான் பரதம். நான் அதோட பழமையைத் தேடித்தேடி காட்சிப்படுத்த முனைஞ்சேன். தேவாரம், திருவாசகம் மாதிரி தெய்வீக தமிழ்ப்பாடல்களுக்கு நடனமாடி அடித்தட்டு பாமர மனிதருக்கும் கொண்டுபோய் சேத்துக்கிட்டிருக்கேன். தேவதாசி நடன வகைகளை அதன் சுயம் சுருங்காம நவீனப்படுத்தியிருக்கேன். இப்போ பலஆயிரம் மேடைகளை கடந்தாச்சு. உலகம் முழுதும் பயணிச்சாச்சு. எல்லா நாடுகள்லயும் எனக்கு மாணவிகள் இருக்காங்க. நான் எட்டநின்னு அண்ணாந்துப் பாத்து ரசிச்ச பெரும் நாட்டியக் கலைஞர்கள், என்னை அரவணைச்சு வாரிசா அங்கீகரிக்கிறாங்க. ஓய்வுன்னு சொல்லிக்க ஒரு நாள் இல்லாம தொடர் பயணங்கள். அம்மாவால புறக்கணிக்கப்பட்ட என்னை என் மாணவிகள் எல்லோரும் அம்மான்னு கூப்பிடும்போது எனக்குள்ள தாய்மை பெருக்கெடுக்கிறது...!" என்று நெகிழ்ந்து சொல்கிறார் நர்த்தகி நடராஜ்.

இன்னொரு நெகிழ்ச்சியான விஷயமும் இவரது வாழ்வில் நிகழ்ந்தது. எவரை தனது ஆதர்சமாக எண்ணிக் கொண்டிருந்தாரோ.. அவரே இவரது நடன நிகழ்ச்சிக்கு வந்து மூன்று மணிநேரம் அமர்ந்து, நடனத்தை ரசித்து.. இவரை மனதார வாழ்த்தினார்!

ஆம்.. அண்மையில், சென்னை நாரத கானா சபாவில் பழமையான நாட்டிய மரபுப்படி நர்த்தகி நடராஜ் ஆடிய மூன்று மணி நேர நாட்டியத்தை ரசித்துப் பார்த்தார், அவரின் ஆதர்சமான வைஜெயந்திமாலா பாலி. நிகழ்வின் இறுதியில், "நான் நர்த்தகியின் வடிவில் என்னைப் பார்க்கிறேன்" என்று பெருமிதமாகச் சொன்னார். “அந்த தருணமே வாழ்வின் உன்னத தருணம்" என்கிறார் `முனைவர்' நர்த்தகி நடராஜ்.

(வைஜயந்தி மாலா அவர்கள் வாழ்த்தியபோது...)

திருநங்கைகளின் மீதான சமூகப்பார்வையை மாற்றியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. திருநங்கை என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் இவர். அதன்பிறகுதான் பலராலும் அந்த வார்த்தை மிகுந்த மரியாதையோடு உச்சரிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன்,  மிஷ்கினைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘இயக்குநர் மிஷ்கின் திருநங்கையாகப் பிறக்க ஆசைப்பட்டவர்’ என்று மேடையிலேயே பெருமையாகச் சொன்னார். திருநங்கைகளில் முதன்முதலில் பாஸ்போர்ட் பெற்றவர், முதன்முதலில் தேசியவிருது பெற்றவர், முதன்முதலில் கலைமாமணி விருது பெற்றவர் என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் நர்த்தகி நடராஜ். 

இன்னும் பல உயரங்களை அவர் தொட வாழ்த்துவோம்! 

- வெ.நீலகண்டன் 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு