Published:Updated:

ஆப்ரிக்காவின் பெண்களை வேட்டையாடும் "ஹைனா"க்கள் - பயமுறுத்தும் கலாசாரம்!

ஆப்ரிக்காவின் பெண்களை வேட்டையாடும் "ஹைனா"க்கள் - பயமுறுத்தும் கலாசாரம்!
ஆப்ரிக்காவின் பெண்களை வேட்டையாடும் "ஹைனா"க்கள் - பயமுறுத்தும் கலாசாரம்!

தென் கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கிறது மலாவி (Malawi) என்ற நாடு. இங்கு ச்சீவா (Chewa) என்ற இனத்தில் பூப்பெய்தும் பெண்களை, மலாவியின் தெற்கில் இருக்கும் சில கிராமங்களுக்கு அனுப்புவார்கள். அங்கு அவர்களுக்கு இரண்டு நாட்கள் இனக் கலாச்சாரம், பாரம்பரியம், பாலியல் கல்வி ஆகியவை சொல்லிக் கொடுக்கப்படும். மூன்றாவது நாள்...

அந்தப் பெண்ணிடம் ஒரு துணி கொடுக்கப்படுகிறது. அறைக்குள் தனியே அனுப்பப்படுகிறாள். ஒரு வயதான பாட்டி அந்த பெண்ணின் கண்ணை கட்டிவிடுகிறாள்.அவள்  காதில், " பயப்படாதே... இன்னும் கொஞ்ச நேரத்தில் ஹைனா (Hyena) வரும்" என்கிறாள். அந்தக் குழந்தை பயப்படுகிறாள்... ஹைனா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கழுதைப்புலி தான் வரப் போகிறது என்று நடுங்குகிறாள். அந்த பாட்டி சிரித்துக் கொண்டே... "அது மிருகம் அல்ல... ஒரு ஆண்" என்று சொல்லி சிரித்தபடியே கிளம்புகிறாள். 

ஹைனா வருகிறது.

அங்கிருக்கும் அந்தப் பெண் குழந்தையை கீழே படுக்கச் சொல்கிறது. அதன் பின், அந்தப் பெண்ணை புனிதப்படுத்துகிறது. இதற்கு ஆப்ரிக்க மொழியில்  " குசாசா ஃபூம்பி " (Kusasa Fumbi) என்று சொல்கிறார்கள் . பெண் குழந்தைகளிடமிருக்கும் அழுக்குகளைத் துடைத்து, அவர்களை முழுமை அடையச் செய்யும் நிகழ்வு. பெண் குழந்தைகளைப் புனிதப்படுத்தும் ஹைனாக்களுக்கு சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளை மட்டுமல்ல, விதவைகளைப் புனிதப்படுத்தும் " குலோவா குஃபா" (Kulowa Kufa) நிகழ்விலும் ஹைனாக்கள் ஈடுபடுகிறார்கள். இந்த புனிதப்படுத்துதல் நிகழ்வில் ஆணுறை போன்ற ஏதொரு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


சில ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தப் பழக்கத்தை தடை செய்து உத்தரவிட்டது மலாவி அரசாங்கம். ஆனால், அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், கடந்த ஜூலையில் இந்த இன மக்கள் குறித்தும், இவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்தும் பிபிசி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. அதில், எரிக் அனிவா (Eric Aniva) என்கிற ஹைனா, தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும், ஆனால் அதை சொல்லாமல், தான் இதுவரை 104 பெண்களிடம் உடலுறவு கொண்டதாகவும் கூறியிருந்தார். இதைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். மலாவியின் ஜனாதிபதி பீட்டர் முத்தாரிகா, அனிவாவை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

 எரிக் அனிவா, ஜூலை மாதமே கைது செய்யப்பட்டாலும், அவருக்கு எதிராக சாட்சி சொல்ல எந்தப் பெண்ணும் முன்வரவில்லை. இரண்டு விதவைகள் மட்டுமே முன்வந்தனர். அவர்களில் ஒருவர், அனிவா தன்னோடு உடலுறவு கொண்டதை உறுதிபடுத்தினாலும், அது தடை சட்டத்திற்கு முன்பு நடந்தது என்பதையும் சொல்லிவிட்டார் . மற்றொருவரோ, அனிவா தன்னை புனிதப்படுத்த முயற்சித்தார், ஆனால், நான் தப்பிவிட்டேன் என்று கூறினார். இதனால், அனிவாவிற்கு எதிராக வழக்கை நடத்த முடியவில்லை. இருந்தும், வன்முறையான கலாச்சார முறையை பின்பற்றினார் என்ற பிரிவில் வழக்கு பதிந்து தற்போது, அவரை சிறையில் அடைத்துள்ளது மலாவி நீதிமன்றம். இந்த செய்தி உலகம் முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மலாவியின் தேசிய கணக்குப்படி, 15யில் இருந்து 49 வயது வரை இருக்கும் பெண்களில் 10% பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறது.உலகளவில் குழந்தைகள் திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது மலாவி. பதின்  தாய்மார்களும் இங்கு அதிகம். 

" நான் என்ன தவறு செய்துவிட்டேன்?... இது எங்கள் கலாச்சாரம். நானாக போய் யாரையும், எதையும் செய்யவில்லை. என்னைக் காசு கொடுத்து அழைத்ததாலேயே நான் போனேன். குற்றவாளி நானல்ல... அவர்கள் தான்..." என்று சொல்கிறார் குற்றம்சாட்டப்பட்ட எரிக் அனிவா. 

ஆப்ரிக்காவில், கடந்த 15 ஆண்டுகளாக எய்ட்ஸ் நோய்க்கு எதிராக மேற்கொண்ட எந்தப் பிரச்சாரங்களும் கை கொடுக்கவில்லை என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. மலாவியில் எய்ட்ஸ் நோய் இன்னும் எந்தளவிற்குப் பரவியிருக்கிறதோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள், ஆப்ரிக்க சமூக செயற்பாட்டாளர்கள். தங்களுக்கு நேரும் பிரச்ச்சினைகளின் பாதிப்புகள் குறித்து அறியாமல், சிரித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர், ஆப்ரிக்க இளம் பெண்கள். 

                                                                                                                                    - இரா. கலைச் செல்வன்.