Election bannerElection banner
Published:Updated:

முதல்வரே...முன்னாள் முதல்வரே வெட்கமாக இல்லையா...?! தமிழகப் பெண்களின் கேள்வி!

முதல்வரே...முன்னாள் முதல்வரே வெட்கமாக இல்லையா...?! தமிழகப் பெண்களின் கேள்வி!
முதல்வரே...முன்னாள் முதல்வரே வெட்கமாக இல்லையா...?! தமிழகப் பெண்களின் கேள்வி!

முதல்வரே...முன்னாள் முதல்வரே வெட்கமாக இல்லையா...?! தமிழகப் பெண்களின் கேள்வி!

ர் அலுவலகத்தின் அதன் பணியாளர்கள் பரபரப்பாக இருந்தால், அங்கு வேலை வெகு சீக்கிரமே முடிந்துவிடும் என்று புரிந்துகொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் முதல்வர் தொடங்கி எம்.எல்.ஏ வரை எல்லோரும் பரபரப்பாக இருக்கிறீர்கள். அப்படியெனில் மக்களின் பிரச்னைகள் தீர்ந்திருக்க வேண்டுமே... ஆனால் கூடுதலாக ஏராளமான பிரச்னைகள் முளைத்திருக்கின்றனவே என்ன சொல்வது?, முதல்வரே...முன்னாள் முதல்வரே உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா...?! என்று கேட்கத் தோன்றுகிறது.

தமிழக அரசியல் களம் ஊழல் சேற்றில் புதைந்து கிடக்கிறது. மக்கள் தேர்ந்தெடுத்த ஆளும் அரசாங்கம் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறது. இங்கு ஓட்டுப் போட்டு ஆளும் அரசைத் தேர்வுசெய்யும் வலிமையில் பாதி பெண்களுக்கானது. பெண்களும் குழந்தைகளும் அடிப்படைத் தேவைக்காக நடுத்தெருவில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள் பதவியை பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.

நீங்கள் ஓட்டுக்கேட்டு வரும்போது உங்களை ஆரத்தி எடுத்து வரவேற்கிற எங்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள். காலையில் எழுந்ததிலிருந்து மாலை வரை பெண்கள் இந்த ஆட்சியில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி கொஞ்சமேனும் கவலைப்பட்டிருக்கிறீர்களா? 

முதலில் குடிநீரிலிருந்தே தொடங்குவோம். தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு போராட்டம் நடந்த வண்ணமே இருக்கின்றன. அந்தப் போராட்டக் காட்சிகளை நீங்கள் பார்த்தீர்களா முதல்வர் பழனிசாமி அவர்களே... நெற்றியில் வியர்வை வழிய, கண்களின் கோபமும் இயலாமையும் கைகளில் பிளாஸ்டிக் குடங்களை ஏந்தி, 'குடிநீர் வேண்டும்' எனக் குரல் எழுப்பும் பெண்களின் முகத்தை ஒருமுறை பாருங்கள். அவர்களின் குரலில் உள்ள உண்மையை உணருங்கள். இந்தப் போராட்டத்தில் உங்கள் காவல் துறை சமாதானம் பேசி அனுப்பலாம் அல்லது தடியடி நடத்தவும் செய்யலாம். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தப் போராட்டம் முடிந்து வீட்டுக்குச் சென்று அவர்கள் சமையல் செய்ய வேண்டும். அவர்கள் வீட்டில் உள்ள சின்னக் குழந்தை முதல் கணவன் வரை அனைவரின் பசியைத் தீர்க்க வேண்டும். அதற்கு தண்ணீர் வேண்டும். ஒரு குடும்பத்தின் பசியினைப் போக்க, அவர்கள் தண்ணீர் கேட்கிறார்கள். இப்படித்தான் பல குடும்பங்கள் காலிக் குடங்களோடு நிற்கின்றன. அவர்களின் பிரச்னையைத் தீர்ப்பது உங்கள் கடமைத்தானே முதல்வரே... ஆரத்தி நீருடன் உங்களை வரவேற்றவர்களை தண்ணீர் தாகத்தோடு அலைய விடுவதுதான் முறையா? நூறாண்டுக்குப் பிறகான வறட்சி நிலவுவதால் இந்த நிலை என்று எத்தனை நாட்களுக்குத்தான் சொல்லப்போகிறீர்கள்? இல்லை, தண்ணீர் பிரச்னை தானாக தீர்ந்தால்தான் உண்டு என்று மறைமுகமாக சொல்கிறீர்களா?

பல கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் சுமந்து, பார்த்துப் பார்த்து சமைத்துவிட்டு, கணவனுக்காக காத்திருந்தால்... தள்ளாடும் போதையில் இடுப்பு வேட்டி அவிழ்ந்து விடுவதுகூட தெரியாமல் வருகிறார். குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்கு காட்டாத அக்கறையும் டாஸ்மாக் தண்ணீர் சிரமம் இல்லாமல் கிடைப்பதற்கு காட்டுகிறீர்கள் முதல்வரே...  உங்களுக்கு ஓட்டுப் போட்ட அன்புத் தமிழச்சிகள் தங்கள் குடும்பத்தைக் குடியில் அழிந்து போகாமல் காப்பதற்காக ரோட்டில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குப் பக்கத்தில் மதுக்கடை திறக்காதே என்று அரசாங்கத்தை அதிர விட்டதற்காக போலீஸ் கன்னத்தில் அறைவதைக் கூட பொறுத்துக் கொண்டு போராட்டம் நடத்துகின்றனர். பள்ளி மாணவர்களும், மாணவிகளும் டாஸ்மாக்கில் பீர் வாங்கி பார்ட்டி கொடுக்கும் அவலத்தை தடுத்து நிறுத்தவே வீதி வரை போராட வந்துவிட்ட பெண்களின் வேதனைகளுக்கு விடுதலையே கிடையாதா முன்னாள், இந்நாள் முதல்வர்களே. டாஸ்மாக் வருமானத்தில் நீங்கள் கொழித்துத் திளைப்பது தான் அவசியமா? அடுத்த தலைமுறை போதையில் அழிவதைத் தடுக்க வேண்டியது உங்கள் கடமையில்லையா. 

இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் என்ற அடையாளங்களோடு தினமும் நீங்கள் தீவிரமாக செயல்படுவதெல்லாம் எதற்காக. நீங்கள் சேர்த்த பணமெல்லாம் சி.பி.ஐ. ரெய்டில் சிக்கிவிடக்கூடாதே என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறீர்கள். ரேஷன் கடையை மட்டும் நம்பியிருக்கும் ஏழைக் குடும்பங்கள் அரிசிக்கும், சர்க்கரைக்கும் எத்தனை முறை அலைகின்றன தெரியுமா. வேலையும் இல்லாமல், கூலியும் இல்லாமல் பசித்த வயிறுகள் பட்டியினில் கடக்கும் அவலத்தை நீங்கள் எப்போது தெரியும் என்பதாக காட்டிக் கொள்வீர்கள் அல்லது வழக்கம் போல் கண்டு கொள்ளாமலே கடந்து விடுவீர்களா... இலவசத் திட்டம் ஏதாவது ஒன்றை துவங்கி வைத்து உங்கள் மோசடிகளை மூடி மறைத்து விடுவீர்களா? தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவதாக பசப்பு வார்த்தை கூறுவீர்களா? 

சுதந்திர இந்தியாவில் இப்போதுதான் ஏழை எளியவர்கள் வீடுகளில் கல்வி முழுமையாக புகுந்திருக்கிறது. தங்கள் வீட்டிலிருந்து ஒரு மருத்துவரோ, பொறியாளரோ உருவாகி விட மாட்டார்களா என்ற எண்ணத்தை குழிதோண்டி புதைக்கிற வேலை தொடங்கிவிட்டது எனப் பேசிக்கொள்கிறார்கள். நீட் தேர்வின் மூலம் ஏழை மக்களுக்கும் சமூக நீதிக்கும் துரோகம் நிகழக்கூடும் எனும் பதற்றத்தில் உள்ளனர். நீட் தேர்வு தமிழகத்தில் உண்டா... இல்லையா என்ற உறுதியான முடிவைக்கூட பெற்றுக்கொடுக்காத முதல்வராக இருக்கிறீர்கள். ஒருவேளை நீட் தேர்வு நடந்துவிடுமோ என்ற பயத்தில் கேரளாவுக்குச் சென்று கோச்சிங்க் சென்டரில் அம்மாவை அழைத்துக்கொண்டுச் செல்லும் பெண் பிள்ளைகள் பற்றி உங்கள் உளவுத்துறை தகவல் சொல்லவில்லையா... வயது வந்த மகள்களை கேரளாவில் விட்டுவிட்டு வரமுடியாமல், கூடவே இருக்கவும் முடியாமல் தாய்மார்கள் படும் துயரம் உங்கள் பார்வைக்கு இன்னும் எட்டவில்லையா முதல்வரே...

தமிழகத்தில் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆசை இருந்தும் மருத்துவம் படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதைப் பற்றியெல்லாம் தமிழக அரசுக்கு யோசிக்கக் கூட நேரம் இல்லை. முதல்வர் நாற்காலி வேண்டும். அதற்கு இலை வேண்டும். இலையை  தேடி அலைவதற்கே உங்களுக்கு நேரம் போதவில்லை. ஒரு தலைமுறையே தமிழகத்தின் பின்தங்கிய பாடத்திட்டத்தால் பாதிக்கப்பட்டு நிற்கிறது. இவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியதில் தமிழக அரசுக்கு தார்மீகப் பங்கு உண்டு.

நாற்று நட, களை எடுக்க என ஊருக்கே சோறுபோடும் வேலைக்குச் சென்றோம் என நிம்மதியாக உறங்கிய விவசாயக்கூலிப் பெண்களை, இன்று அரை வயிறு பட்டினியோடு உறங்க வைப்பதும்தான் வளர்ச்சியா முதல்வரே...

தமிழக விவசாயி விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு டெல்லியில் கோவணத்தோடு போராடுகிறான். தமிழன் தண்ணீருக்காக மானத்தை விட்டு போராட வேண்டிய நிலைமை வந்தது யாரால் என்று யோசித்திருக்கிறீர்களா? நிலம் விளையாமல் போனால், விவசாயி வாழாமல் போனால் தமிழகம் என்ன ஆகும் என்று இதுவரை சிந்தித்ததுண்டா நீங்கள் இருவரும். தமிழன் தனக்கு கிடைக்கும் மழைவளத்தை விவசாயத்துக்கு பயன்படுத்தத்தான் குளங்களையும், ஏரிகளையும் வெட்டி வைத்திருந்தானே. அத்தனையும் உங்களைப் போன்ற ஆட்சியாளர்கள் வணிகத் தளங்களாக மாற்றி விட்ட வஞ்சகத்தால் இன்று தமிழன் கோவணத்தை இழந்து டெல்லியில் கதற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். ஓட்டுப் போட்டவன் வலி உங்களுக்கு ஒரு போதும் புரியாதா? நீங்கள் வாங்கிப் போட்ட சொத்துகளையும், பதுக்கிய பணத்தையும் பாதுகாப்பதற்காக மட்டுமே பதவியை பயன்படுத்துவது என்ன நியாயம்? உங்களுக்கு எல்லாம் எதற்கு அரசியலும் பதவியும்...

அமைச்சர்களாக வலம் வரும் உங்கள் நலனுக்கு எந்த பாதகமும் வந்து விடக் கூடாது என்பதில் தான் கவனமாக இருக்கிறீர்கள். மத்திய அரசோ, வெளிநாட்டு வணிகர்களோ தமிழக வளங்களை எந்தப் பெயரில் வேண்டுமானாலும் சுரண்டி அழிக்கலாம். அப்படியான சமரசங்களில் எல்லாம் நீங்கள் நீண்ட மவுனத்தில் மூழ்கி விடுகிறீர்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச்சொல்லி நெடுவாசலில் போராடும் பெண்களை போலீஸ் நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்தும். இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா... தமிழச்சிகளை அவமானப்படுத்தச் சொல்லி விட்டு அமைதியாக இருக்கிறீர்களா... இன்னும் எத்தனை நாள்களுக்கு நாங்கள் கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்போம்... நீங்கள் எதுவும் காதில் விழாதது போலவே நடித்துக் கொண்டிருப்பீர்கள். முதல்வரே...முன்னாள் முதல்வரே  வெட்கமாக இல்லையா...?!

பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பது அரசின் கடமையல்லவா. பெண்கள் நடுத்தெருவில் கொல்லப்பட்ட பின்பு தான் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்துவீர்களா... குழந்தைகள் பாலியல் கொடுமையில் கொல்லப்பட்ட பின் இழப்பீடு வழங்குவது மட்டுமே அரசின் கடமையென்று நினைக்கிறீர்களா. இதற்குத்தானா உங்களுக்கு ஓட்டுப் போட்டு அமைச்சர்களாக்கினோம், அதிகாரம் தந்து அழகு பார்த்தோம். உங்களை மட்டுமே பார்ப்பதை விட்டு விட்டு தமிழகத்தை தலை நிமிர்ந்து பாருங்கள். இங்கு அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் மக்களின் பிரச்னைகளுக்கு இனிமேலாவது தீர்வு காணுங்கள். இது தலையெழுத்தென இனியும் பொறுக்க முடியாது. உங்கள் தலையெழுத்து மாற்றி எழுதப்படலாம்!.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு