Published:Updated:

டெல்லி போராட்டக் களத்துக்கு வந்த லிசிபிரியா... 9 வயது இளம் சூழலியல் செயல்பாட்டாளர்!

சிங்கு எல்லையில் இரவு உணவு சாப்பிடும் லிசிபிரியா
சிங்கு எல்லையில் இரவு உணவு சாப்பிடும் லிசிபிரியா ( Twitter )

உலகில் மிகவும் வயது குறைந்த சூழலியல் செயல்பாட்டாளராகக் கருதப்படும் லிசிபிரியா கடந்த 2019-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நடத்திய வானிலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் 9 வயது சூழலியல் செயல்பாட்டாளர் லிசிபிரியா கங்குஜன் கலந்துகொண்டார். இது போராட்டக்காரர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகரித்தது.

உலகில் மிகவும் வயது குறைந்த சூழலியல் செயல்பாட்டாளராகக் கருதப்படும் லிசிபிரியா கடந்த 2019-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நடத்திய வானிலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் போராட்டம் நடைபெறும், சங்கு பார்டர் பகுதிக்கு வந்த லிசிபிரியா போராடும் விவசாயிகளுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார்.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``என் குரல் உலகம் முழுக்க ஒலிக்கும் என்று நம்புகிறேன். விவசாயிகள் இல்லையேல் உணவும் இல்லை” என்று குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில் அவர் விவசாயிகள் சூழ நின்று `விவசாயிகள் இல்லையேல் உணவும் இல்லை’ என்று முழக்கமிடுகிறார்.
14 நாள்களாக அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குழந்தைகளைச் சந்தித்துப் பேசினார். அதேபோன்று விவசாயக் கழிவுகளை எரிப்பதன் மூலம் காற்று மாசடைவதால் விவசாயிகள் அதைத் தவிர்க்கவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

``நம் விவசாயிகள்தான் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். அடிக்கடி நிகழும் வெள்ளம், பஞ்சம், புயல், சூறாவளி, வெட்டுக்கிளி என்று தங்கள் விளைச்சலைப் பாதுகாக்க எண்ணிலடங்காத பிரச்னைகளோடு போராடுபவர்கள். ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒவ்வோர் ஆண்டும் வறுமையால் இறக்கிறார்கள். நம் தலைவர்கள் விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்க வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளுக்குரிய நிரந்தரத் தீர்வை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

9 வயதே ஆன சிறுமியின் இந்தப் பேச்சும் செயல்பாடும் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

- காயத்ரி கணேஷ்

அடுத்த கட்டுரைக்கு