Published:Updated:

70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பெண் சுதந்திரம் எப்படி இருக்கிறது? #IndependenceDay

70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பெண் சுதந்திரம் எப்படி இருக்கிறது? #IndependenceDay
70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பெண் சுதந்திரம் எப்படி இருக்கிறது? #IndependenceDay

70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பெண் சுதந்திரம் எப்படி இருக்கிறது? #IndependenceDay

“இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்” என்றார் மகாத்மா காந்தி. இதோ, இந்திய சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்துவிட்டன.

கல்பனா சாவ்லா, சிந்து, தீபா, சாக்ஷி மாலிக் என்று இந்திய சாதனைப் பெண்கள் கூடிக்கொண்டே உள்ளனர். ஆண்கள் கோலோச்சும் கிரிக்கெட்டில் கூட, நடப்பாண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை நுழைந்து சாதனை நிகழ்த்தினர் பெண்கள். எதிர்த்து முளைக்கும் விதையாக தங்கள் போராட்டப் பயணங்களின் மூலம் வெற்றிகளை ஒருபுறம் அடைந்தாலும், மறுபுறம் நிர்பயா, நந்தினி, சுவாதி, மன்னார்குடி திவ்யா என்று பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும், படுகொலைகளும் நிகழ்ந்தபடியே இருப்பது, தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட ரணம்.  

உண்மையில் இந்த 70 ஆண்டு சுதந்திரம், பெண்கள் நிலையில் எந்தவகை மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது?

அகில இந்திய கிசான் கவுன்சில் இணைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.சந்திராவிடம் பேசினோம்.

“இந்திய விடுதலைப் போரில் எண்ணற்ற பெண்கள் அளப்பரிய தியாங்களைச் செய்தனர். நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று, பெண்களின் போராட்ட

பங்களிப்பினாலும் அறுவடையான அற்புதம். அதேநேரம், 70 ஆண்டு சுதந்திரப் பயணத்தில் முழுமையான முன்னேற்றத்தைப் பெண்கள் இன்னும் அடையவில்லை என்பதே எமது கருத்து. கடந்த ஐந்து ஆண்டுகளில், குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளில் சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகள் பெருகி காணப்படுகின்றன என ‘ஆக்ஸ்போம்’ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலகத் தொழிலாளர் ‘நிரோணம்’ சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 20 விழுக்காட்டுக்கு குறைவான பெண்கள் மட்டுமே மாத வருமானம் பெரும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என தெரிகிறது.

50 விழுக்காடு பெண்கள் சுய தொழில் செய்பவர்களாகவும், கிட்டத்தட்ட 30 விழுக்காடு பெண்கள் ஐ.எல்.ஒ அளிக்கும் விளக்கத்தின்படி, “குடும்பப் பணிகளில் உழைப்பை செலுத்துவோர்” என்ற பிரிவின் கீழ் வருபவர்களாகவும் இருக்கின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், வட அமெரிக்க நாடுகளில் மாத வருமானம் ஈட்டுவோர் 89.4 விழுக்காடாகவும், ஐரோப்பிய நாடுகளில்  88.4 விழுக்காடாகவும், அரபு நாடுகளில் 75 விழுக்காடாகவும், லத்தின் அமெரிக்க நாடுகளில் 66.6 விழுக்காடாகவும்,  மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் 63.2 விழுக்காடாகவும், கிழக்கு ஆசிய நாடுகளில் 55.3 விழுக்காடும், சசஹரன் ஆப்ரிக்க நாடுகளில் 21.4 விழுக்காடாகவும், அதுவே இந்தியாவில் 20 விழுக்காடாகவும் உள்ளது என்பதிலிருந்து, நமது பெண்கள் உழைப்பு சந்தையில் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியும். (ஆதாரம் ஐ.எல்.ஒ அறிக்கை)

அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழில்களில் பெண்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதால், நம் நாட்டின் மொத்த வருமானத்தில் பெண்கள் பங்கும் 17 விழுக்காடு மட்டுமே. அதேநேரம் உலக சராசரி அளவு 37 விழுக்காடாக உள்ளதாக மெக்கின்சி ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 20 விழுக்காடு பின்தங்கி உள்ளோம். மக்கள் சீனத்தில் அந்நாட்டு மொத்த உற்பத்தியில் பெண்கள் பங்கு 41 விழுக்காடாக உள்ளது. ஆகவே, நாம் எப்போதும் கூறி வரும் ‘பெண்கள் உழைப்பு கணக்கில், வராத உழைப்பாக ‘ இருப்பது நீடிக்கிறது. இதை மாற்றுவதற்கு அரசு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் அதைத் தொடர்ந்து பி.ஜே.பி-யும் நவீன தாராளமய கொள்கைகள் அமுலாக்கத்தை தீவிரமாகப் பின்பற்றுகிறது. இதனால் உழைப்புச் சந்தையில் உள்ள பெண்கள் அமைப்பு சாரா துறைகளுக்கு தள்ளப்பட்டு, சமூக பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறி விட்டனர். வருவாய் ஈட்டாத பணிகளில் செலவிடும் நேரமும் அதிகமாகியுள்ளது. ஐ.எல்.ஒ மற்றும் மெக்கின்சி ஆய்வு முடிவுகளையே தேசிய மாதிரி ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்துகிறது.  பி.ஜெ.பி ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ( 2015) பத்தாம் வகுப்பு சமூகவியல் பாடத்தில், ‘working women are one of the causes for unemployment’  என்ற கருத்து சொல்லப்படுகின்றது. இது, நம் நாட்டை ஆளும் அரசு, பெண்களை எப்படி பார்க்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

பெண்கள் பாதுகாப்பிலும் தேசம் பின்தங்கியே உள்ளது. இவையெல்லாம் கணக்கில் எடுத்து, முழுமையான பெண் விடுதலையை சாத்தியப்படுத்தும் பணிகளை அர்ப்பணிப்போடு இணைந்து செயல்படுத்த வேண்டும்” என்றார் அழுத்தமாக.

அவரைத் தொடர்ந்து பி.ஜே.பி மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினோம்.

“பெண் சுதந்திரம் ஒவ்வொரு தளத்திலும் முன்னேற்றம் கண்டே வருகிறது. கல்வியில் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். வேலைக்குச் செல்லும்

பெண்கள் பெருகியுள்ளனர். தொழில் முனைவோர் மற்றும் தன்னம்பிக்கையோடு வாழ்கையை எதிர்கொள்பவர்கள் பெருகியுள்ளனர். இத்தனையாண்டு பயணத்தில் போதுமான வளர்ச்சியை பெற்றுள்ளோம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம் தேவையான வளர்ச்சியைப் பெற்றுள்ளோமா என்றால் இல்லை என்பதே வருந்தத்தக்க உண்மை. சமுதாய அளவில் பெண்களுக்கான எக்ஸ்போசர்ஸ் அதிகம். ஆனால், அதே சமூகம் பெண்களைப் பார்க்கிற பார்வை இன்னும் மாறவில்லை. வளரும் விஞ்ஞான வளர்ச்சியைக் கூட, பெண் ஒடுக்குமுறைக்கு பயன்படுத்தும் போக்கும் பெருகியே காணப்படுகின்றன. இன்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் முகம் தெரியாத ஆட்கள் பெண்களை அபியூஸ் பண்ணும் நிலையில்தான் உள்ளது சமூகம். பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறைகள், பாலின ஒடுக்குமுறைகள் குறையவில்லை. மறுபக்கம் பெண்களுக்கான பொறுப்புகள் கூடியளவு அவர்களுக்கான சவால்களும் கூடியுள்ளன.

தொழில்நுட்ப வசதியில்லாத சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட அரசியல்தளத்தில், கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கான போராட்டங்களில்,  காந்தி அவர்கள் ஈர்த்தார். திரண்டு வந்து பெண்கள் போராட்டக் களத்தில் ஈடுபட்டனர். ஆனால், இன்றோ உரிமை போராட்டங்களில் கூட பெண்கள் பங்களிப்பு குறைந்து காணப்படுகின்றன. இன்றளவும் நாம் பெண்களின் இடஒதுக்கீடுக்காகத்தான் போராடி வருகிறோம். சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு பெருக வேண்டும். அரசியல் அதிகாரங்கள் பெண்களின் கையில் வர வேண்டும். அரசும், வங்கிக் கணக்கு உள்ள பெண்களின் பெயரில் கடன் உதவி, மானியங்கள் கொடுக்க வேண்டும். பெண் கல்வி மற்றும் சுய தொழிலுக்கு ஊக்கம் தர வேண்டும். புதிய திட்டங்களுக்கு பெண்கள் பெயரிட்டு, மக்களிடம் பரப்ப வேண்டும்.

நம் பாரதப் பிரதமர் மோடி, பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். அதேநேரம் நம் வீட்டு பெண்களும், ‘இதெல்லாம் நம்ம வேலையில்லை. எல்லாமே ஆம்பளைங்க பார்துக்கொள்வாங்க. நம்ம வேலை சமையல் செய்வது மட்டும் தான்’ என ஒதுங்கிகொள்கின்றனர். இந்த மனநிலையும் மாறவேண்டும். குடும்பத்துக்கு தலைமை தாங்கும் ஆர்வமும் அவர்களிடம் பெருக வேண்டும். அதற்கான விழிப்பு உணர்வு மற்றும் வாய்ப்பை, பெண்களை மதிக்கும் ஆண்கள் வழங்கவேண்டும். பெண் குழந்தைகளுக்கு வரியில்லாத வைப்புத் தொகையை அரசு செலுத்தவேண்டும். அந்த நிதியை பெருக்க வேண்டும். இது பிற்காலத்தில் பெண்களுக்கு உதவும். கல்வி, அரசியல், பொருளாதாரம், தனிமனித மனமாற்றம் என அனைத்தும் சேர்ந்தே பெண்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.” என்றார் உற்சாகமான குரலில்.

தங்கள் மீது கட்டப்பட்டுள்ள அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறியும் போராட்டங்களை பெண்களும், அதன் நியாயங்களை உணர்ந்து ஆண்களும் கைகோத்து இணைந்து பங்காற்றுவதே அசலான சுதந்திரத்தை பெற்றுத்தரும். அந்த அற்புதப் பயணத்துக்கு, இந்த சுதந்திர நாள் கொண்டாட்டம், தொடக்கமாக அமையட்டும்.

அடுத்த கட்டுரைக்கு