Published:Updated:

A blessing in disguise... லாக் டௌன் பாடங்கள்!

லாக் டௌன்
பிரீமியம் ஸ்டோரி
News
லாக் டௌன்

கற்க கசடற

வெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள் முடங்கிப்போன வாழ்க்கை, வொர்க் ஃப்ரம் ஹோம் தந்திருக்கும் மன அழுத்தம், வேலையாட்கள் இல்லாமல் சேர்ந்துபோன வேலைச்சுமை, கூச்சலும் கூட்டமுமாகிப்போன வீட்டுச்சூழல்... ஒட்டுமொத்த உலகையும் வீட்டுக்குள் முடக்கிப்போட்டிருக்கும் கொரோனாவை சபிக்க இன்னும் இப்படி நிறைய காரணங்களை அடுக்கலாம்.

ஆங்கிலத்தில் A blessing in disguise என்றொரு வாசகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். `கெட்டதில் ஒரு நல்லது' என்று அதை மொழிபெயர்க்கலாம். கொத்துக் கொத்தாக மரணங்கள், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் நகரும் வாழ்க்கை என திகில் சூழ்ந்திருக்கும் இந்த நிலையிலும் நினைத்துப் பார்த்து நிம்மதியடையவும் திரும்பிப் பார்த்துத் திருத்திக்கொள்ளவும் நிறைய விஷயங்களை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது கொரோனா. லாக் டௌன் நாள்கள் நமக்கு உணர்த்தியிருக்கும் வாழ்க்கைப் பாடங்கள் சிலவற்றை யோசிப்போமா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பேசிப்பேசி ஓய்ந்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே...

ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன் கடைசியாக நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணையுடனும் பிள்ளைகளுடனும் அதிக நேரத்தைச் செலவிட்டது எப்போது? எவ்வளவு யோசித்தாலும் ஞாபகமே வரவில்லைதானே? வேலை வேலை என இருவரும் ஓடிக் கொண்டே இருந்திருக்கலாம். தேவைப்பட்டால் போனில் பேசியிருக்கலாம். எப்போதாவது குடும்பத்துடன் டின்னருக்குச் சென்றிருக்கலாம். அங்கேயும் உணவை, உறவை மறந்து மொபைலில் மூழ்கித் திரும்பி இருக்கலாம். சரி... போனது போகட்டும். இப்போது உங்களுக்காக, உங்களவருக்காக நாளும் பொழுதும் காத்திருக்கின்றன.

A blessing in disguise... லாக் டௌன் பாடங்கள்!

உலகத்தின் கடைசி நாள் இன்றுதானோ என்பதுபோல், பேசிப்பேசி ஓய்ந்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே என்ற பாடலுக்கேற்ப பார்ட்னருடன் நிறைய பேசுங்கள். சலிக்கச் சலிக்கப் பேசுங்கள். இத்தனை நாள்களாக, வருடங்களாகப் புரிந்துகொள்ளத் தவறிய அவரின் உணர்வுகளை, தேவைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சேர்ந்து சாப்பிடுங்கள். வீட்டுப் பெரியவர்களின் முகம் பார்த்து நலம் விசாரியுங்கள். குழந்தைகளைக் கொஞ்சுங்கள். சேர்ந்து டி.வி பாருங்கள். அன்பும் அந்நியோன்யமும் புதிதாக மலர்வதை நிச்சயம் உணர்வீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உறவுகள் தொடர்கதை...

கொரோனாவுக்காக இன்று வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ளப் பழகிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இது ஒன்றும் நமக்குப் புதிய விஷயமல்ல. பல குடும்பங்களில் பெற்றோர் ஓர் அறையிலும், பிள்ளைகள் வேறோர் அறையிலும், தாத்தா பாட்டிகள் இருக்குமிடமே தெரியாத நிலையிலும் தனிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிக்கொள்வோரும் உண்டு. முகம் பார்த்துப் பேசக்கூட நேரமில்லாதவர்களுக்கும் போதும் போதும் என்கிற அளவுக்கு நேரத்தைக் கொடுத்திருக்கிறது கொரோனா. எத்தனை நாள்களுக்கு ஒரே அறைக்குள் முடங்கியிருப்பது... அறையைவிட்டு வெளியே வந்துதானே ஆக வேண்டும்... அறைக்கு வெளியிலுள்ள முகங்களை அந்நியத்தன்மையுடன் பார்த்து தானே ஆக வேண்டும்... பொழுதைப் போக்க அவர்களுடன் பேசித்தானே ஆக வேண்டும்... பல குடும்பங்களில் வீட்டுக்குள் இருக்கும் உறவுகளையே இப்போதுதான் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் நிலை. கூடவே, வெளியிலுள்ள உறவினர்களையும் அறிமுகப்படுத்தலாம். வாரம் ஒருமுறையாவது அவர்களுடன் தொலைபேசியில் பேச வைக்கலாம். வீடியோ காலில் முகங்களைக் காட்டலாம். பல குடும்பங்களில் தாத்தா பாட்டி பெயர்கூடத் தெரியாமல் பேரக்குழந்தைகள் வளர்கிறார்கள். அந்த அவலத்தையெல்லாம் சரிசெய்ய இதுவே அற்புதமான தருணம்.

A blessing in disguise... லாக் டௌன் பாடங்கள்!

என்ன சமையலோ...

வீட்டில் எல்லாம் இருந்தும் வெளியில் சாப்பிடும் வழக்கம் பலருக்கும் உண்டு. ஹோட்டல் இல்லாத நாளை அவர்கள் யாரும் கற்பனைகூடச் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கெல்லாம் லாக் டௌன் நாள்கள் பாடம் புகட்டியிருக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாகவும் வித விதமாகவும் சமைத்துச் சாப்பிட முடியும் என்ற உண்மையை உணர்ந்திருப்பார்கள். ஒருவேளை ஹோட்டலுக்கு ஆகும் செலவில் மூன்றுவேளைகள், வீட்டிலுள்ள அனைவரும் ஆரோக்கியமாக, திருப்தியாகச் சாப்பிட முடியும் என்பதையும் அறிந்திருப்பார்கள். முடியாத நாள்களில் வெளியில் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தினமும் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது முடியாததுமில்லை. அடிக்கடி வெளியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது உணர்ந்த பல உபாதைகள், இந்த லாக் டௌன் நாள்களில் காணாமல் போயிருப்பதை உணர்ந்தீர்களென்றால், நீங்கள் ஆரோக்கியத் தின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தம்!

A blessing in disguise... லாக் டௌன் பாடங்கள்!

பாட்டி சொல்லைத் தட்டாதே...

`வாய், கண், மூக்கில் கைவைக்க வேண்டாம், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்' என்பதையெல்லாம் கொரோனா இன்று நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

`வெளியே போய்விட்டு வந்தால் கை கால்களைக் கழுவ வேண்டும், இருவேளை குளிக்க வேண்டும், அம்மை வந்த வீட்டு வாசல்களில் வேப்பிலை கட்டி மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும்' என அன்று பெரியவர்கள் சொன்ன அனைத்தையும் இப்போது கொரோனாவும் வலியுறுத்துகிறது. பெரியவர்கள் அறிவுறுத்திய அனைத்தும் அஞ்ஞானமில்லை, அவற்றில் விஞ்ஞானமும் உண்டு என்பதை இனியாவது உணர்வோமா?

நீ பாதி... நான் பாதி...

பாத்திரம் தேய்ப்பதும், பாத்ரூம் கழுவுவதும் சூரிக்களுக்கும் ஷிகர் தவான்களுக்கும் வேண்டுமானால் அந்நியமான வேலைகளாக இருக்கலாம். நம் வீட்டு ஆண்களுக்கு அல்ல. லாக் டௌன் நாள்களில் பொழுதுபோகாமல் கிச்சன் பக்கம் எட்டிப்பார்த்த ஒவ்வோர் ஆணுக்கும் அம்மா, மனைவி, மகள் மீது நிச்சயம் மரியாதை கூடியிருக்கும். கழுவாமல் போடப்படும் எச்சில் தட்டுகள், பாத்திரங்களால் நிரம்பி வழியும் சிங்க், பாலும் குழம்பும் பொங்கி வழிந்து கிடக்கும் அடுப்பு, சுத்தம் செய்யப்படாத சமையலறை மேடை... இவற்றைச் சுத்தப்படுத்துவதென்பது சமையலைவிடவும் பெரிய வேலை என்பதை உணர்ந்திருப்பார்கள். நிறைய வீடுகளில் மனைவி வொர்க் ஃப்ரம் ஹோமில் பிசியாக இருக்க, சமையல் பொறுப்பை முழுக்கவே கணவர்கள் கைப்பற்றிய நிகழ்ச்சிகளைக் கேள்விப்படும்போது ஆறுதலாக இருக்கிறது.

A blessing in disguise... லாக் டௌன் பாடங்கள்!

‘சாம்பார்ல உப்பு அதிகம்... ரசமா இது... வெந்நித்தண்ணியே தேவலை...’ என்றெல்லாம் போகிற போக்கில் மனைவியின், அம்மாவின் சமையலை விமர்சனம் செய்த ஆண்களுக்கும் தவறு புரிந்திருக்கும். பார்த்துப் பார்த்துச் செய்கிற விருந்து பல நேரங்களில் சுமார் எனப் பெயர் வாங்கும். அவசரமாக வைக்கிற ரசம் ஆஹா என அப்ளாஸ் வாங்கும். சமையல் என்பது அப்படித்தான். ஆண்கள் சமைத்தாலும் அப்படித்தான்!

பொழுதுபோக்காகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்த வீட்டுவேலைகளை லாக் டௌன் நாள்களோடு நிறுத்திவிடாமல், எப்போதும் தொடர்ந்தால், மனைவியின் வேலைப்பளு பாதியாகக் குறையும். அதற்கு ஈடாக அவரது அன்பும் காதலும் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

நான்பேச நினைப்பதெல்லாம்...

இல்லத்தரசிகளுக்கு வேலைக்குச் செல்வோரைப் பார்த்து ஏக்கம். வேலைக்குச் செல்வோருக்கோ வீட்டிலிருப்போரை நினைத்து ஆதங்கம். மொத்தத்தில் இக்கரைக்கு அக்கரை பச்சை.

இரண்டுமே சாதாரண அவதாரங்களல்ல என்பதை இரு தரப்பினருமே இத்தனை நேரம் உணர்ந்திருப்பார்கள். வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களுக்கு இரட்டைச்சுமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு நன்றாக உடையணிந்து, மேக்கப் செய்து கொண்டு வெளியே கிளம்புவதும், மனிதர்களின் முகங்களைப் பார்க்க முடிவதும் எவ்வளவு ஆறுதல் என்பதை வேலைக்குச்செல்வோர் நான்கு சுவர்களுக்குள் இருக்கும்போது உணர்ந்திருப்பார்கள்.

24 மணி நேரமும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துகொண்டு, ஜுமிலும் ஹேங் அவுட்டிலும் மீட்டிங்கில் பிசியாக இருக்கும் கணவன், மகன், மகள்களைப் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு வேலைக்குச் செல்லாமலிருப்பது எவ்வளவு சுகம் என்பது புரிந்திருக்கும். ஆங்கிலத்தில் Empathy என்றொரு வார்த்தை இருக்கிறது. அடுத்தவரின் நிலையிலிருந்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது என அர்த்தம். இந்த லாக் டௌன் நாள்கள் அதை பிராக்டிகலாக உணர்த்தியிருக்கும்.

அனுபவம் புதுமை

உங்கள் அபிமான சீரியல் இல்லை. வாரம் தவறாமல் நீங்கள் தேடிச் செல்கிற தியேட்டர் இல்லை. ஷாப்பிங் மால் இல்லை. ஆனாலும் என்ன... பார்க்கத் தவறிய பிளாக் அண்டு வொயிட் படங்களை, பாடல்களைத் தேடிப்பிடித்து ரசிக்கலாம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டு பாரம்பர்ய சமையல் முதல் உங்கள் குடும்பத்துக்கான கலாசாரம்வரை தெரிந்துகொள்ளலாம். உங்கள் வீட்டுப் பெரியவர்களில் சிலர் இதுபோன்ற அவசரநிலைகளைக் கடந்து வந்தவர்களாக இருக்கலாம். அவர்களிடம் அனுபவங்களைக் கேட்கலாம். குடும்பங்களில் பெரியவர்கள் இருக்கப்பெற்றவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அந்தப் பொக்கிஷங்களைப் போற்றுங்கள். அது வேறு லெவல் அனுபவமாக இருக்கும்.

A blessing in disguise... லாக் டௌன் பாடங்கள்!

வேல வேல வேல மேல மேல வேல...

அலுவலகம் சென்று வேலை பார்க்கிற நமக்கெல்லாம் வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள் விடுப்பு தேவைப்படுகிறது. ஆனால், நம் வீடுகளில் வேலை பார்க்கிறவர்களுக்கு மாதம் ஒருநாள் விடுப்பு கொடுக்கவே யோசிப்போம். அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் வீட்டில் பிரச்னைகள், வேலைகள், பீரியட்ஸ், மெனோபாஸ் அவதி என எல்லாம் இருக்கும், அவர்களின் உடல்களும் ஓய்வைத் தேடும் என்றெல்லாம் யோசித்திருக்க மாட்டோம்.

வீட்டைப் பெருக்குவது முதல் டாய்லெட்டை சுத்தம் செய்வதுவரை அனைத்தையும் நீங்களே செய்ய வேண்டிய இந்தத் தருணத்தில் நிச்சயம் உங்கள் வீட்டில் வேலை பார்த்தவர்களை நினைத்துப் பார்த்திருப்பீர்கள். அவர்களது வேலைச்சுமையை உணர்ந்திருப்பீர்கள். ஊரடங்கு தளர்ந்து மீண்டும் அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் அடியெடுத்துவைக்கும்போது இத்தனை காலமாகக் காட்டத் தவறிய அந்த அன்பையும் கரிசனத்தையும் காட்டுங்கள். அவர்கள் கேட்காவிட்டாலும் அவசியமான அந்த ஓய்வை அனுமதியுங்கள்.

கல்யாணம் கச்சேரி...

`குடும்பத்தோடு வரணும்' என வற்புறுத்தி அழைப்பு விடுக்கப்பட்டதெல்லாம் கொரோனாவுக்கு முந்தைய காலம். இன்று மணமகன் - மணமகள் குடும்பத்தாருக்கே திருமணத்தில் கலந்துகொள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. அதிகபட்சம் 30 பேர் மட்டுமே அனுமதி. கூட்டுக்குடும்பங்களின் நிலை பரிதாபம்தான்.

மூன்று நாள்கள் சடங்கு, சங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன், கட்டுசாதக்கூடை என எதற்கும் இந்தச் சூழலில் அனுமதியில்லை. முகூர்த்த நேரம் முடிவதற்குள் திருமணத்தை முடித்துவிட்டு மண்டபத்தையோ, கோயிலையோ காலி செய்ய வேண்டியதுதான்.

பல திருமணங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்து முடிந்திருக்கின்றன.

ஆறு மாதங்களுக்கு முன்பே மண்டபம் புக் செய்வது, விதவிதமான மெனுவுடன் கேட்டரிங் சர்வீஸுக்கு அட்வான்ஸ் கொடுப்பது, திருமணத்துக்கு வருபவர்கள் அன்பளிப்புகளைக் கொடுக்க பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருப்பது, விருந்து நடக்குமிடத்தில், அடுத்த பந்திக்கு ஆட்கள் பின்னால் காத்திருப்பது... இவை எல்லாவற்றையும்விட உணவை வீணாக்குவது... இப்படி எல்லாவற்றையும் தவிர்க்க வழிகாட்டியிருக்கின்றன இந்த எளிமைத் திருமணங்கள். ஆடம்பரங்களின் அடையாளமான திருமணங்களையே இப்படி எளிமையாக நடத்த முடியும்போது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இது சாத்தியம்தானே? எதிர்காலத்தை எளிமையாகக் கடக்க முடியும் என்பதையும் யோசிப்போமா?