Published:Updated:

``ஆக்ஸிடென்டை மறைச்சு என்னை டாக்டராக்கினார் கணவர்" - 18 பதக்கங்கள் வென்ற லாரி டிரைவர் மகள்

``கல்யாணத்துக்குப் பிறகு என்னை டாக்டராக்கி அழகு பார்த்திருக்கிற என் கணவருக்குத்தான், எனக்கு கிடைக்க வேண்டிய புகழ் எல்லாமே சேரும்''

doctor anandhi
doctor anandhi

நாமக்கல்லைச் சேர்ந்த ஆனந்தியின் அப்பா லாரி டிரைவர். திருமணத்துக்குப் பிறகு, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் கனவு நிறைவேறாமல் தவிக்கும் பெண்களுக்கு மத்தியில், ஆனந்தியைக் கால்நடை மருத்துவராக்கி அழகு பார்த்திருக்கிறார் கணவர் ரமேஷ். பல்கலைக்கழக அளவில் 18 தங்கப்பதக்கங்களை வென்று முதல் மாணவியாக இடம்பிடித்து சாதனைகளால் நெகிழ்கிறார் ஆனந்தி. வாழ்த்துகளைக் கூறி அவரிடம் பேசினோம். 

doctor anandhi
doctor anandhi

``நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள காளப்பநாயக்கன்பட்டி, என் பூர்வீகம். நடுத்தர குடும்பம். வீட்டில் ஒரே மகளான என்னைப் பெற்றோர் நல்லபடியா வளர்த்தாங்க. பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புல ஸ்கூல்ல முதல் மாணவியா தேர்ச்சிபெற்றேன். எதிர்காலத்தைப் பத்தி நிறைய கனவுகள் இருந்துச்சு. ஆனா, அப்போ நல்ல வரன் வந்ததால உடனே எனக்குக் கல்யாணம் செய்துவெச்சுட்டாங்க.

காலேஜ் படிக்கணும்ங்கிற என் ஆசைக்குப் பலரும் எதிர்ப்பு சொன்னாங்க. `என் மனைவி படிச்சு நல்ல நிலைக்கு வரணும்'னு கணவர் ரொம்பவே ஊக்கம் கொடுத்தார். என் ப்ளஸ் டூ மார்க்குக்கு மருத்துவப் படிப்புக்கான சீட் கிடைக்கலை. சின்ன வயசுல இருந்து வளர்ப்புப் பிராணிகள்மீது அதிக அன்பு செலுத்துவேன். எனவே, கால்நடை மருத்துப் படிப்பில் சேரலாம்னு முடிவுபண்ணினேன். என் முதல் குழந்தை பிறந்து 5 மாதமாகியிருந்த நிலையில, 2013-ம் ஆண்டு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில கவுன்சலிங் வழியில் சேர்ந்தேன். 

doctor anandhi
doctor anandhi

இன்ஜினீயரான என் கணவருக்கு அரசுப் பணி கிடைச்சு, கரூர்ல வேலை செய்துகிட்டிருந்தார். எனவே, பெற்றோர் என்னுடன் ஒரத்தநாட்டில் தங்கிட்டாங்க. அப்பா வழக்கம்போல லாரி மற்றும் கல்லூரி வேன் டிரைவராக வேலை செய்தார். அம்மா என் குழந்தையைப் பார்த்துக்க, நான் மகிழ்ச்சியா படிச்சேன். தினமும் காலேஜ் முடிச்சு வீட்டுக்கு வந்ததும், குழந்தைக்கான அன்பை முழுமையா கொடுத்தேன்.

ஒருமுறை எனக்கு செமஸ்டர் தேர்வு. அப்போ கணவருக்கு ஆக்ஸிடென்ட்டாகி அவர் கை மூட்டு விலகிடுச்சு. எனக்குத் தெரிஞ்சா நான் சரியா தேர்வெழுதாமப்போக வாய்ப்பிருக்குனு நினைச்சு, அந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டார்.

doctor anandhi
doctor anandhi

தேர்வு முடிஞ்சு அவரைப் பார்க்க கரூர் போனப்போ அந்த விஷயம் தெரிஞ்சு ரொம்பவே வருத்தப்பட்டேன். என் படிப்புப் பாதிக்காதவாறு குடும்பத்தினர் எல்லோருமே ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க" என்கிற ஆனந்தி, 18 தங்கப் பதக்கங்கள் வென்ற தருணம் குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

``எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நல்லா படிச்சேன். `பல்கலைக்கழக அளவில் சிறந்த மாணவியா வருவேன்'னு பேராசிரியர்கள் சொல்வாங்க. 5 வருஷ படிப்பை முடிச்சதுமே, சேலம் ஆவின் நிறுவனத்துல எனக்கு வேலை கிடைச்சுது. அந்த நிறுவனத்துல இணைந்து செயல்பட்ட நாமக்கல் ஆவின் நிறுவனம் தனியாகப் பிரிக்கப்பட்டுச்சு.

doctor anandhi
doctor anandhi

இப்போ நாமக்கல் ஆவின் நிறுவனத்துல கால்நடை மருத்துவரா வேலை செய்றேன். ஆவின் நிறுவனத்துக்கு விவசாயிகள் விற்பனை செய்ற பாலைத் தரப்பரிசோதனை செய்வது மற்றும் அவர்களுக்குத் தேவையான கால்நடை வளர்ப்புக் குறித்த ஆலோசனைகளைக் கொடுக்கிறது என்னுடைய பணி. தவிர, களப்பணியும் உண்டு.

இந்த நிலையில கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டில் பட்டப்படிப்பு முடிச்ச மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடந்துச்சு. அதில் ஒட்டுமொத்த மாணவர்களில் எனக்கு 18 தங்கப் பதக்கங்கள் கிடைச்சது. பாடப் படிப்புகள், நன்னடத்தை உட்பட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்தப் பதக்கங்கள் கிடைச்சது. இவ்வளவு பதக்கங்கள் கிடைக்கப்போறது, விழாவுக்குச் சில தினங்களுக்கு முன்புதான் எனக்குத் தெரியும். 

கல்யாணத்துக்குப் பிறகு என்னை டாக்டராக்கி அழகு பார்த்திருக்கிற என் கணவருக்குத்தான், எனக்குக் கிடைக்கிற புகழ் எல்லாமே சேரும்.
டாக்டர் ஆனந்தி

பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் எல்லோரையும் கூட்டிகிட்டுப் போயிருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் அளவில்லா சந்தோஷம். கூடுதல் சர்ப்ரைஸ், சமீபத்துலதான் எனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்துச்சு.

கல்யாணத்தால், கல்லூரிக் கனவு நிறைவேறாமல் இருக்கும் பெண்கள் ஒருபக்கம். கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக முடியாம தவிக்கும் பட்டதாரிப் பெண்கள் ஒருபக்கம்னு நிறைய பெண்கள் ஏக்கத்தில் தவிக்கிறாங்க.

doctor anandhi
doctor anandhi

ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு என்னை டாக்டராக்கி அழகு பார்த்திருக்கிற என் கணவருக்குத்தான், எனக்குக் கிடைக்கிற புகழ் எல்லாமே சேரும்" என்றார் மகிழ்ச்சியுடன்.

தொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்!