
"அசிங்கப்படுத்துபவர்களைக் கண்டுக்கொள்ளாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், இது குறித்துப் பேசியே ஆக வேண்டும் எனும் முடிவோடுதான் நான் இப்போது பேசுகிறேன்."
பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப், தான் உள்ளாடையில் இருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். அதற்குப் பலரும் மிகக் கடுமையான விமர்சனங்களை முகத்தில் அடித்ததுபோல கூறியிருக்கிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலீட் செய்யும் அளவுக்கே போய்விட்டதாகக் கூறியிருக்கிறார்.
"நான் உள்ளாடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டதிலிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறேன். என்னை மோசமான பெண் என்றும் ரேட் என்ன என்றும் கமென்ட்டுகளில் மோசமாக விமர்சித்து வருவது வேதனையளிக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கிவிடலாமா என்றுகூட யோசித்தேன். இதுவரை இந்த அளவுக்கு நான் பயந்ததே இல்லை!

அசிங்கப்படுத்துபவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், இது குறித்துப் பேசியே ஆக வேண்டும் எனும் முடிவோடுதான் நான் இப்போது பேசுகிறேன்" என்றவர் தன் குமுறல்களை இன்ஸ்டாகிராமில் இறக்கி வைத்திருக்கிறார்.
முன்னதாகத் தன் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த ஆலியா, "நான் ரொம்ப சென்சிட்டிவ்! என்னை யாராவது ஏதாவது சொன்னால் அது பெரிய அளவில் பாதிக்கும். இப்படிச் சொல்லிவிட்டார்களே என அழுவேன். இந்தியப் பெண்ணாக இருந்துகொண்டு இப்படிப்பட்ட புகைப்படத்தை வெளியிட நீ வெட்கப்பட வேண்டும் என்கிறார்கள்.
என்னை 'மோசமான பெண்' என்றும் 'ரேட் என்ன' என்றும் கேட்டு அவமானப்படுத்துகிறார்கள். என் குடும்பத்தைத் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். எனக்கு பாலியல் மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வந்துகொண்டே இருக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.
"இது போன்ற மோசமான கமென்டுகள்தான் பாலியல் வன்கொடுமை கலாசாரத்துக்கு கருவியாக இருக்கிறது. இது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு பெண்ணையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும். பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்களுக்காக மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம் செல்லும் மக்கள்தான் உயிருடன் இருக்கும்போது அவர்களைப் பாதுகாக்கத் தவறியவர்கள்.

இப்படியாகப் பாலியல் வன்கொடுமைக் கலாசாரத்தை மறைமுகமாக ஊக்கப்படுத்துபவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்" என்றவரின் நியாயமான கருத்தைப் பல பிரபலங்களும் அவரின் ஃபாலோவர்களும் ஏற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குற்றம் என்றே தெரியாத அளவுக்கு சைபர் குற்றங்கள் மலிந்து கிடக்க பாதிக்கப்படுபவர்கள் ஒரு சிலரே குரல் கொடுக்க தைரியம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டியது அவசியம்!