Published:Updated:

``மழை ஓய்வெடுக்குது... வீட்டைவிட்டு வெளியே போக முடியலை!"- நடிகை ரூபிணி

கு.ஆனந்தராஜ்

சென்னையைப் போல, மும்பையிலும் மழைநீரைச் சேமிக்கிற முறையான ஏற்பாடுகள் இல்லை. அதனால வெள்ளநீர் பெரும்பாலும் வீணாகிடுது.

மும்பை வெள்ளம் மற்றும் நடிகை ரூபிணி
மும்பை வெள்ளம் மற்றும் நடிகை ரூபிணி

கனமழை காரணமாக மும்பை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கின்றனர். ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் வசிக்கும் நடிகை ரூபிணியிடம், மழை வெள்ளச் சூழல் குறித்துப் பேசினோம்.

மும்பை வெள்ளம்
மும்பை வெள்ளம்

``மும்பையில் கடந்த ஒருவாரமா கனமழை பெய்துட்டிருக்கு. இரவில்தான் அதிகமா மழை பெய்து. நேற்று முன்தினம் இரவில் அதிகளவில் மழை பெய்ததால, பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துடுச்சு. மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்காங்க. நோய்த் தொற்றும் அதிகமாகிடுச்சு.

இப்போ மழை ஓய்வெடுக்குது. ஆனா, வானம் மேக மூட்டமாகவே இருக்குது. இரவில் நிச்சயம் மழை வரும்னு நினைக்கிறேன். மழைக்காக சந்தோஷப்படுறதா, பாதிப்புகளால் வருத்தப்படுறதானு தெரியலை
நடிகை ரூபிணி

வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால, டிராஃபிக் பிரச்னையும் அதிகமா இருக்கு. சராசரியா ஒவ்வொரு வருஷமும் இப்படி வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்கிறோம்.

மும்பையில் மக்கள் தொகை ரொம்பவே அதிகம். அதனால தண்ணீர்த் தட்டுப்பாடும் உண்டு. இப்போ மழையால் வெள்ளம் ஏற்பட்டாலும், இந்த மழைதான் தண்ணீர்த் தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிக்க உதவும். சென்னையைப் போல, மும்பையிலும் மழைநீரைச் சேமிக்கிற முறையான ஏற்பாடுகள் இல்லை. அதனால வெள்ளநீர் பெரும்பாலும் வீணாகிடுது.

மும்பை வெள்ளம்
மும்பை வெள்ளம்

மும்பையில் முக்கிய பகுதியான பாந்த்ராவில் வசிக்கிறேன். இங்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகமா வசிக்கிறதால, பாதாளச் சாக்கடை பராமரிப்பு நல்லா இருக்கும். ஆனா, எங்க பகுதியிலேயும் மழை நீர் தேங்கியிருக்கு. அதில் நிறைய கழிவுகளும் கலந்திருக்கு. அதனால கடந்த ஒரு வாரமா வீட்டைவிட்டு வெளியே போக முடியலை.

நடிகை ரூபிணி
நடிகை ரூபிணி

மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில், எங்க பகுதியில் பாதிப்பு குறைவுதான். வேறு பகுதிகளில் வசிக்கிற என் உறவினர்கள் பலரும் உணவு செய்ய முடியாம, சாப்பிட முடியாம தவிக்கிறாங்க. அவங்களுக்கு உணவு, கசாயம் தயார் செஞ்சு அனுப்புறேன்.

ஒவ்வொரு வருஷமும் மழை வெள்ளத்துக்கு ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுறாங்க. மழையால் கட்டடங்கள் இடிந்து விழுவது மற்றும் மின் விபத்துகள் ஏற்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுது. இதுதான் வருத்தமான செய்தி. சில தினங்களுக்கு முன்பு எங்க பகுதியிலும் சிலர் உயிரிழந்துட்டாங்க.

மும்பை வெள்ளம்
மும்பை வெள்ளம்

இப்போ மழை ஓய்வெடுக்குது. ஆனா, வானம் மேக மூட்டமாகவே இருக்குது. இரவில் நிச்சயம் மழை வரும்னு நினைக்கிறேன். மழைக்காக சந்தோஷப்படுறதா, பாதிப்புகளால் வருத்தப்படுறதானு தெரியலை" என ஆதங்கத்துடன் முடித்தார் ரூபிணி.