Published:Updated:

ஆசாத்தி ஆகணும் என்பதே லட்சியம்!

 ஆனந்தி,  சிஜின் மேரி, கோமதி சங்கரி
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்தி, சிஜின் மேரி, கோமதி சங்கரி

அடிமுறை பயிற்சியில் ‘பட்டாஸ்’ இல்லத்தரசிகள்

ஆசாத்தி ஆகணும் என்பதே லட்சியம்!

அடிமுறை பயிற்சியில் ‘பட்டாஸ்’ இல்லத்தரசிகள்

Published:Updated:
 ஆனந்தி,  சிஜின் மேரி, கோமதி சங்கரி
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்தி, சிஜின் மேரி, கோமதி சங்கரி

நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளத்தில் ஒரு தென்னந்தோப்பில், காலை வேளையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை லெமூரியா அடிமுறை, சிலம்பம், சூரிய நமஸ்காரம், வர்மக்கலை எனப் பலவிதமான பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருந்தார், பெண் ஆசான் சிசிலி செல்வன். ஆச்சர்யக் காட்சியாக, மூன்று இல்லத்தரசிகளும் சிலம்பப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். ‘`அவங்க மூணு பேருக்கும் அடி முறையில ஆசாத்தி (பெண் ஆசான்) ஆகுறதுதான் இலக்கு’’ என்று அவர்களை நமக்கு அறிமுகப்படுத்தினார் சிசிலி செல்வன். அடிமுறை என்பது, கையாலும் காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்தும், தமிழரின் பாரம்பர்ய தற்காப்புக் கலை. தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படத்தின் மூலக்கருவே இந்த அடிமுறைக் கலைதான்.

``நாங்க மூணு பேரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவங்க’’ என்ற அறிமுகத்துடன் ஆரம்பித்தார், கோட்டாற்றைச் சேர்ந்த கோமதி சங்கரி...

``சில உடல்நலப் பிரச்னைகள் இருந்தது. அதனால ஒரு உடற்பயிற்சியாதான் இதுல சேர்ந்தேன். இப்போ நான் முழுநேரமா அடிமுறை, களரி, வர்மக்கலை, சிலம்பம் கத்துக்கிட்டு வர்றேன். என் உடம்பில உள்ள பிரச்னை களும் குறைய ஆரம்பிச்சிடுச்சு. முக்கியமா, உடல் எடை பெருமளவு குறைஞ்சிடுச்சு.

ஆசாத்தி ஆகணும் என்பதே லட்சியம்!

அப்போ, ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம்னு இருந்தேன். ஆனா இப்போ, கசடற அடிமுறை கத்துக்கிட்டு இதை மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்னு முடிவெடுத் துட்டேன். இதுல ஒரு பத்து வருஷம் டிராவல் பண்ணினா, நிச்சயம் எனக்குனு ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக்குவேன். இந்த வகுப்புகள் எடுக்குறது மூலமா குறைந்தபட்சம் மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பா திக்கலாம்; என் ஆரோக்கியத்தை யும் தக்கவெச்சுக்கலாம்.

என் கணவர் வீர மணிகண்டன் ரயில்வே ஸ்டேஷன்ல போர்ட்டரா வேலை பார்க்கிறார். என் ரெண்டு குழந்தைகளை அத்தையும் மாமா வும் பாத்துக்கிறாங்க. களத்துல காலையில 9 மணி முதல் 11 மணி வரை பயிற்சி எடுத்துப்போம். பிறகு, கலைகள் குறித்த மீட்டிங் நடக்கும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மீண்டும் பயிற்சி எடுப்போம். இன்னும் மூணு மாசத்துல நான் ஆசாத்தி ஆயிருவேன்” எனத் தெம்பாகப் பேசினார் கோமதி சங்கரி.

சிலம்பத்தை இடக்கையில் ஒரு சுழற்று சுழற்றிவிட்டு பேச ஆரம்பித்தார், பிள்ளைத் தோப்பைச் சேர்ந்த இல்லத்தரசி சிஜின் மேரி. “டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்த நான், கொரோனா வேலை யிழப்பால, வீட்டுல சும்மா இருக்குறதுக்கு சிலம்பம் கத்துக் கலாம்னு நினைச்சேன். ‘கல்யாணம் ஆகி கையில பாப்பா இருக்கு... இப்போ சிலம்பம் அவசியமா?’னு தயக்கம் இருந்துச்சுதான். ஆனாலும் அதையெல்லாம் தூக்கிப் போடுட்டு சிலம்பம் வகுப்புல சேர்ந்தேன். சிலம்பத்தை சுத்தும்போது எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

பயிற்சியில சேர்ந்ததுக்கு அப்புறம், வீட்டுலயும் போய் வேலை செய்யும்போது சோர்வா இருக்கும். என் அம்மாதான், ‘இந்த வீட்டு வேலையதான் உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களும் பார்க்குறோம், உன் மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை நீ பண்ணு'னு சொல்லி உறுதுணையா இருந்தாங்க. பயிற்சியின் ஆரம்பத்துல இருந்த உடம்பு வலி இப்போ இல்ல. ஆபரணம், அலங்காரம்லாம்தான் பொண்ணுக்கு அழகுனு நம்பவெச்சிட்டு இருக்காங்க. கண்ணுல தைரியமும், நெஞ்சுல மன உறுதியும்தான் அழகுனு இப்போ எனக்குப் புரிஞ்சிருக்கு” என பன்ச் வைத்து முடித்தார்.

கோட்டாற்றைச் சேர்ந்த இல்லத்தரசி ஆனந்தி, “என் பொண்ணு தர்ஷா இப்போ ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறா. என் மகளை நான் சிலம்பம் பயிற்சிக்கு அனுப்பும்போதே, ‘பொம்பளப் பிள்ளைய யாராவது சிலம்பம் வகுப்புக்கு அனுப்புவாங்களானு?’னு அக்கம்பக்கத்துல கேட்டாங்க. வெளிநாட்டுல வேலை செய்துகிட்டிருந்த என் கணவர்தான் தைரியம் கொடுத்தார்.

 ஆனந்தி,  சிஜின் மேரி, கோமதி சங்கரி
ஆனந்தி, சிஜின் மேரி, கோமதி சங்கரி

மகள் செய்யுற பயிற்சிகளைப் பார்த்து, `நானும் சிலம்பம் படிக்கப் போகட்டா?'னு மூணு வருஷத்துக்கு முன்னாடி என் கணவர்கிட்ட கேட்டேன். ‘மகள் படிக்கிறது போதும்’னு சொல்லிட்டார். இப்ப மூணு மாசம் முன்னாடி வெளிநாட்டில இருந்து வந்த கணவர், ‘நீயும் ஆசைப்பட்டபடி சிலம்பம் கத்துக்கப் போ...’னு சொல்லிட்டார். இப்போ தினமும் அவர் என்னையும் மகளையும் சிலம்பம் கிளாஸுக்குக் கொண்டுபோய் விடுறார்’’ என்று மகிழ்ந்தவர்,

``இந்தக் கலையில மொத்தம் 18 கட்ட பயிற்சிகள் உண்டு. என் மகள் ஆறாம்கட்ட பயிற்சிக்குப் போயிட்டா. நான் இப்பத்தான் ரெண்டாம்கட்ட பயிற்சிக்கு வந்திருக்கேன். கடைசிகட்ட பயிற்சி வரை முடிக்கணும் என்பதுல நானும் மகளும் உறுதியா இருக்கோம். பல பள்ளிகள்லயும், மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கொடுக்க பெண் சிலம்ப ஆசிரியர்கள் இருந்தா சொல்லுங்கனு கேட்குறாங்க. சீக்கிரமே எங்களை நீங்க ஆசாத்தியா பார்ப்பீங்க’’ என்கிறார் ஆனந்தி களிப்பு பொங்க.

பெண் ஆசான் சிசிலி செல்வன், “தற்காப்புக் கலை பயிற்சியாளரான என் கணவர்கிட்ட, கல்யாணத்துக் குப் பிறகு ஆர்வத்துல நானும் இதையெல்லாம் கத்துக்கிட்டேன். மூணு வருஷமா ஆசாத்தியா இருக்கேன். பெண் ஆசான்களுக்குத் தேவை அதிகமா இருக்கு'' என்றார்.

ஆசாத்தி ஆகணும் என்பதே லட்சியம்!

`` `நீ செய்யக் கூடாது’னு சமூகம் காலம் காலமா பொண்ணுங்ககிட்ட சொல்ற ஒரு விஷயத்தை நாம செய்யும்போது, அது தர்ற சுதந்திர உணர்வு பெருசு!”

- லயித்துச் சொல்கிறார்கள் இல்லத்தரசிகள் மூவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism