Published:Updated:

14 ஆண் குழந்தைகள்... 15-வதாகப் பிறந்த பெண் குழந்தை... கொண்டாடும் மிச்சிகன் குடும்பம்!

Photo provided by Jay Schwandt shows Maggie Schwandt
Photo provided by Jay Schwandt shows Maggie Schwandt ( AP )

தங்களுக்குப் பெண் குழந்தை வேண்டுமென்று இருவரும் மிகவும் ஆசைப்பட்டிருக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள் அனைத்தும் ஆண் குழந்தைகளாகவே பிறந்தன.

எவ்வளவுதான் காலமாற்றம் வந்தாலும் பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கும் கயமை புத்தி இன்னும் சில மனிதர்களை விட்டுப் போகவில்லை. சமீப காலமாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதே உலகத்தில்தான், தங்களுக்குப் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்ட அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த கத்தேரி - ஜே ஸ்ச்வான்ட் தம்பதி, 14 ஆண் குழந்தைகளுக்குப் பிறகு, தங்களது 45வது வயதில்15வது பெண் குழந்தையைப் பெற்றிருக்கிறார்கள். புதிதாகப் பிறந்த அந்தக் குட்டி இளவரசி பெற்றோர் மற்றும் 14 அண்ணன்மாரின் அன்பில் ஆனந்தமாக வாழத்தொடங்கியிருக்கிறாள்.

The Schwandt family
The Schwandt family
AP

``வார்த்தையில் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் நான் இருக்கிறேன். இந்த ஆண்டு கடவுள் எங்களுக்குக் கொடுத்த ஆகச்சிறந்த பரிசு எங்கள் பெண்குழந்தைதாம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் குழந்தையின் தந்தையான ஜே.

ஜே - கத்தேரி தம்பதி 28 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக முதலில் ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. ஆனாலும் தங்களுக்குப் பெண் குழந்தை வேண்டுமென்று இருவரும் மிகவும் ஆசைப்பட்டிருக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள் அனைத்தும் ஆண் குழந்தைகளாகவே பிறந்தன. ஆனாலும், பெண் குழந்தை நிச்சயமாக வேண்டும் என்ற உறுதியுடன் அந்தத் தம்பதி வரிசையாகக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆரம்பிக்க, ஊர் மக்களின் கவனம் இவர்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆறு, ஏழு, எட்டு... என்று குழந்தைகள் வரிசையாகப் பிறக்கப் பிறக்க தம்பதி இருவரும் தேசியச் செய்திகளிலும் இடம்பிடிக்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் ஜே - கத்தேரி தம்பதியின் வளர்ந்த ஆண் குழந்தைகள் அனைவரும் ஒன்றிணைந்து '14 Outdoorsmen' என்கிற இணையப்பக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றி, தங்கள் வீட்டில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையைப் பற்றிய தகவல்கள் மற்றும் வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகின்றனர். அந்த இணையதளத்தில் பெண் குழந்தை பிறந்த செய்தி எதுவும் வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தவர்களும் உண்டு.

குழந்தை / Representational image
குழந்தை / Representational image

``எங்கள் அம்மாவைத் தவிர, நாங்கள் 14 சகோதரர்கள், எங்கள் அப்பா, எங்கள் வீட்டில் வளரும் செல்லப்பிராணியான நாய் என்று அனைவருமே ஆண்கள்தாம். அதனால் எங்கள் வீட்டில் பிங்க் நிறத்தின் பயன்பாடு இல்லாமலேயே இருந்தது. ஆனால், இந்த தேவதையின் வருகையால் இனி பிங்க் நிறத்துக்கு வேலை வந்துவிட்டது. ஏழு பவுண்டு எடையுடன் பிறந்திருக்கும் இந்தக் குட்டி தேவதைக்கு மேகி ஜேனி என்ற பெயர் சூட்டியிருக்கிறோம் “ என்று நெகிழ்கிறார் 28 வயதாகும் மூத்த மகன் டைலர்.

வாழ்வாங்கு வாழ் மகளே!

அடுத்த கட்டுரைக்கு