சவாலான சான் ஃபிரான்சிஸ்கோ டு பெங்களூரு பயணம்... வரலாறு படைத்த ஏர் இந்தியா பெண் விமானிகள்!

விமானத்தை இயக்கும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே இதைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் பெங்களூருவுக்கு இடையிலான ஏர் இந்தியா விமானத்தை நான்கு பேர் அடங்கிய இந்திய பெண் விமானிகள் குழு வெற்றிகரமாக இயக்கி, சாதனை புரிந்துள்ளது.
இதில் என்ன சாதனை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஏர் இந்தியாவின் நீளமான நேரடிப் பாதை விமானத்தை (DIRECT ROUTE FLIGHT) பெண் விமானிகள் குழு இயக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து வட துருவம் வழியாக விமானத்தைச் செலுத்தி பதினாறாயிரம் கிலோமீட்டர் நான்-ஸ்டாப்பாக பயணம் மேற்கொண்டு பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.45 மணிக்கு விமானத்தை வெற்றிகரமாக தரை இறக்கியிருக்கிறார்கள் பெண் விமானிகள்.

வட துருவம் வழியாக விமானத்தை இயக்குவது எளிதான காரியமல்ல. விமானத்தை இயக்கும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே இதைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
“பெண் விமானிகள் குழுவாக இணைந்து இன்று புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறோம் என்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படி நேரடிப் பாதை வழியில் விமானத்தை இயக்கியதன் மூலம் பத்து டன்கள் எரிபொருள் மிச்சமாகியிருக்கிறது” என்று இந்த விமானத்தின் விமானிகளுள் ஒருவரான கேப்டன் ஸோயா அகர்வால் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்.
“இதுபோன்ற ஒரு சந்தோஷத்தை முன்னெப்போதும் உணர்ந்ததில்லை. கிட்டத்தட்ட பதினேழு மணிநேரம் தொடர்ந்து பயணித்து இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறோம்” என்று குதூகலிக்கிறார் இதே குழுவில் இருக்கும் மற்றொரு விமானியான ஷிவானி மனஸ்.

பெண் விமானிகளின் இந்த சாதனையை ஏர் இந்தியா உச்சி முகர்ந்து பாராட்டியிருக்கிறது. “கேப்டன் ஸோயா அகர்வால், கேப்டன் பப்பாகிரி தன்மே, கேப்டன் அகான்க்ஷா மற்றும் கேப்டன் ஷிவானி மனஸ் ஆகியோரை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வரவேற்கிறோம். இந்தியாவை பெருமைப்படுத்திய உங்களுக்கு எங்களின் பாராட்டுகள். வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தருணத்தில் AI176 விமானத்தில் பயணித்த பயணிகளுக்கும் எங்களின் வாழ்த்துகள்” என்று ஏர் இந்தியா ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பெண் விமானிகளின் இந்தச் சாதனையை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் பாராட்டி செய்தி வெளியிட்டிருக்கிறார்.
வாழ்த்துகள் விமானிகளே!