Published:Updated:

சேவை: ஆனந்தம் விளையாடும் வீடு!

17 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வரும் ‘ஆனந்தம்' (முதியோருக்கான இலவச இல்லம்), முழுக்க முழுக்க பாகீரதியின் கனவு இல்லம்!

பிரீமியம் ஸ்டோரி

வீட்டில் இருக்கும் பாட்டி, பெரியம்மா, அம்மா போன்ற சீனியர் உறவுகளை எல்லாம் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் காலம் இது. ஆனால், தன் வீட்டில் மூன்று பாட்டிகளோடு வாழ்ந்ததால், அவர்களுக்குப் பணிவிடை செய்து கவனித்துக்கொண்ட தாக்கத்தில், ஒரு முதியோர் இல்லமே தொடங்கியவர் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பாகீரதி ராமமூர்த்தி.17 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வரும் ‘ஆனந்தம்' (முதியோருக்கான இலவச இல்லம்), முழுக்க முழுக்க பாகீரதியின் கனவு இல்லம்!

 பாகீரதி ராமமூர்த்தி
பாகீரதி ராமமூர்த்தி

‘‘எங்க வீட்டில் அம்மாவின் அம்மா, அப்பாவின் அம்மான்னு ரெண்டு பாட்டிகளும் அம்மாவின் சித்தியும் இருந்தாங்க. அம்மா தனக்கு எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், முகம் சுளிக்காம இந்த மூணு பாட்டிகளையும் இன்முகத்தோடு கவனிச்சுக்குவாங்க. அவங்களைப் பார்த்துத்தான் எனக்கும் அதே குணம் வந்தது. நான் படிப்பு, திருமணம் முடிச்சு வங்கிப் பணியில் இருந்தப்போ, மாத ஓய்வூதியம் வழங்கும் பிரிவில் 10 வருஷங்கள் வேலைசெய்தேன். அப்போ 500 ரூபாய் ஈ.பி.எஃப் பென்ஷன் வாங்க, காலையில 6 மணிக்கே பேங்க் வாசல்ல வந்து பெரியவங்க காத்துக்கிடப்பாங்க. ‘மளிகைக்கடை, மருந்துக்கடைன்னு எல்லா இடங்களிலும் பாக்கி இருக்கும்மா... இந்தக் காசை வாங்கிட்டுப் போய்த்தான் கொடுக்கணும்’னு அவங்க சொல்லும்போது பாவமா இருக்கும். இன்னொருபக்கம், இந்த வருமானமும் இல்லாம ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோர்களை நினைச்சு மனசு பாரமாகும். அவங்களுக்கெல்லாம் ஏதாவது உதவணும்னு வீட்டில் அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன்.

முதியோர் இல்லம்
முதியோர் இல்லம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போ, எப்படி இந்த ‘ஆனந்தம்’ உருவாச்சு?

ஆரம்பத்தில், என்னைப்போலவே மனநிலைகொண்ட நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து 1995-ல் ‘ஆனந்தம்’ என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையைப் பதிவு செய்தோம். முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அதன் மூலமா உதவினோம். 2003-ல் நாங்க ஐந்து பேரும் ஆளுக்கு 2,000 ரூபாய் போட்டு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். முதன்முதலில் மூணு முதியவர்களை அங்கே தங்கவைத்தோம். எங்க வீட்டிலிருந்து சமைச்சு நான் வங்கிக்குப் போறப்போ கொடுத்துட்டுப் போவேன். அப்புறம் என் தோழி ஜெயந்தி, தன்னோட வீட்டை இலவசமா கொடுத்தாங்க. இன்னும் சில முதியோர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நன்கொடைகள் வர ஆரம்பித்தன. பிறந்தநாள், திருமணநாள், அப்பா, அம்மா திதி மாதிரி நாள்களில் பலர் சாப்பாடு ஸ்பான்சர் பண்ணினாங்க. எண்ணிக்கை அதிகமானதும், பக்கத்துல இன்னும் ரெண்டு வீடு எடுத்தோம். அவங்களே சமையல் செய்துகிட்டாங்க” - அவர்கள் நிதானமாக எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் அழுத்தமானது என்று புரிந்தது.

முதியோருக்கான இலவச இல்லம்

‘`கள்ளிக்குப்பத்தில், கொஞ்சம் நன்கொடை, கொஞ்சம் பேங்க் லோன் போட்டு 15 கிரவுண்டு இடம் வாங்கினோம். முதலில் பூமாதேவிக்கு ஏதாவது செய்துட்டு, அப்புறம் பூமி பூஜை போடலாம்னு, 60 பெண்கள் சேர்ந்து 9,320 சதுரஅடியில் மிகப் பெரிய ரங்கோலி போட்டோம். அது கின்னஸ் சாதனை ஆச்சு. நன்கொடைகள் வரவர, பகுதி பகுதியாகக் கட்டடம் கட்டினோம். வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டே ஓய்ந்துபோனவங்களுக்கு, முதுமைக்காலத்துல அனுபவிக்காத வசதிகள் எல்லாம் கிடைக்கணும்னு அறைகளைப் பார்த்துப் பார்த்துக் கட்டினோம். வருஷத்துக்கு ஆறு செட் புது உடைகள், சத்தான உணவு, மருத்துவ வசதின்னு கொடுத்துப் பார்த்துக்கிறோம். ஆண்கள், பெண்கள், தம்பதிகள்னு 110 பேர் இப்போ இருக்காங்க’’ என்கிறவர், நம்மை அழைத்துச்சென்று இல்லத்தைச் சுற்றிக்காட்டுகிறார்.

வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்ட விசாலமான அறைகள், வெஸ்டர்ன் டாய்லட், சுவரோரமாகப் பிடித்துக்கொண்டு நடக்க கம்பி வசதி, வழுக்காத டைல்ஸ், கட்டில், மெத்தை என வசதிகள் நிரம்பியிருந்தன. பெரிய டைனிங் ஹால், சமையற்கூடம், பஜன் ஹால், டி.வி ஹால், நூலகம், பிசியோதெரபி அறை, படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ அறை, சுற்றிலும் தோட்டம் என அவசியமான அத்தனையும் அங்கே இருந்தன.

சமையலறையில் இரு பெண்கள் பால் காய்ச்சிக்கொண்டிருக்க, இன்னும் சில ஆண்களும் பெண்களும் டைனிங் ஹாலில் பரிமாறிக்கொண்டிருந்தனர். சிலர் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தனர்.

சமூக சேவை
சமூக சேவை

‘‘நல்ல உடல்நிலையோடு இருக்கிற வங்க, அவங்கவங்களால் முடிஞ்ச வேலையைப் பார்க்கிறாங்க. இசையில் ஆர்வமிருக்கிறவங்களுக்கு வாரம் ரெண்டு நாள் இசைப் பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம். அக்கம்பக்கத்துக் கோயில்கள், போட்டிகள்னு அவங்க பாடுறாங்க. 2009-ல் நான் விருப்ப ஓய்வு வாங்கின பிறகு, முழு நேரமாக இல்லத்தைப் பார்த்துக்கிறேன்’’ என்று கூறும் பாகீரதியின் பணிகளுக்குப் பல தனியார் நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்ட, வருமானம் இல்லாத, பிள்ளைகள் இல்லாத முதியவர்கள் இங்கே சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

‘சிறந்த சேவை நிறுவனத்’துக்கான
விருது

‘‘எங்ககிட்ட அடைக்கலம் ஆகி, இங்கேயே இறக்க நேரிடுகிற, உறவினர்கள் இல்லாத வங்களுக்கு நாங்களே ஈமச்சடங்குகள் செய்து, அஸ்தியைக் கடலில் கரைச்சுட்டு, காரியமும் செய்துடுறோம். வருஷா வருஷம் அவங்க நினைவுநாள், இங்கே இருக்கிறவங்களின் பிறந்த நாள், திருமணநாள்களை நினைவுகூர்வோம். அன்னிக்கு வடை, பாயசத்துடன் சாப்பாடு. இவங்களோட 60, 70, 80-ம் பிறந்தநாள்களையும் விமரிசையாகக் கொண்டாடுறோம்’’ என்கிறார் ஆனந்தத்தின் மற்றுமொரு டிரஸ்ட்டியான நாராயணன்.

2010 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் தமிழக அரசின் ‘சிறந்த சேவை நிறுவனத்’துக்கான விருதை ஆனந்தம் இல்லம் பெற்றுள்ளது. 2012-ம் ஆண்டில் சிறந்த சமூக சேவைக்கான அரசு விருது பாகீரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘‘செத்துப் போனதுக்கு அப்புறம் நாங்க சொர்க்கத்தைப் பார்ப்போமான்னு தெரியாது. ஆனா, இங்கேயே பார்த்துட்டோம்’’ என்று குரல் தழுதழுக்கச் சொல்லி, நடுங்கும் கைகளைக் கூப்பும் வயோதிகர்களை வாஞ்சையாக அணைத்துக்கொள்கிறார் பாகீரதி.

கல்வி... மருத்துவம்...

‘ஆனந்தம்’ இல்லத்திலுள்ள பெரியவர்களில் பலர் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள். அவர்கள், இன்னும் சில ஆசிரியர்களுடன் சேர்ந்து 270 ஏழைக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கின்றனர். இதற்காகவே இரண்டாவது மாடியில் 15 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஸ்மார்ட் வகுப்புகளும் உள்ளன.

தினமும் 60 முதல் 80 நோயாளிகள் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் பெற்றுச்செல்கின்றனர்.

இங்கிருக்கும் முதியோர்களில் ஐந்து பேர் சிறப்புக் கல்விப் பயிற்சி எடுத்துக்கொண்டு, சிறப்புக் குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். ‘‘இங்கே 3 - 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் படிக்க வர்றாங்க. அவர்களுக்கு தினமும் மாலை ஸ்நாக்ஸ், டீ உண்டு. ஸ்கூல் பேக், நோட் புக்ஸ், ஒரு செட் யூனிஃபார்ம், தீபாவளி டிரஸ் எல்லாம் கொடுக்கிறோம். நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நாங்களே கல்லூரியில் சீட் வாங்கிக்கொடுத்து, முடியாதவர்களுக்குக் கல்லூரிக் கட்டணமும் கட்டிடறோம்’’ என்கிறார் நாராயணன்.

‘ஆனந்தம்’ டிரஸ்ட்டின் இன்னொரு புராஜெக்ட், இலவச மருத்துவ மையம். அதற்கென ஒரு வீடு எடுத்து, காலையும் மாலையும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 60 முதல் 80 நோயாளிகள் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் பெற்றுச்செல்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு