சமூக விமர்சனத்துக்கு பயந்து கர்ப்பிணி வேடமிட்ட பெண்... ஆந்திராவில் நடந்தது என்ன?

என்னம்மா..! கொழந்தை பெத்துக்கலையா தள்ளி போட்டுக்கிட்டே போகாதே என ஆரம்பித்து 'மலடி' என்னும் பட்டம் கட்டப்படுதலுக்கு மிக எளிமையாக ஆளாகிவிடுகிறாள் பெண்.
கர்ப்பிணி ஒருவருக்கு ஆறாவது மாதத்தில் கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. கருச்சிதைவு ஏற்பட்டதையே காட்டிக்கொள்ளாமல் மறைத்து மாமியார் வீட்டில் தான் கர்ப்பமாக இருப்பது போலவே பத்தாவது மாதம் வரை நாடகமாடியிருக்கிறார் அவர். நாடகத்தின் க்ளைமாக்ஸ் ஆந்திராவில் ஒரு மருத்துவமனையில் அரங்கேறியிருக்கிறது. இல்லாத கர்ப்பத்துடன் பிரசவத்துக்காக அட்மிட் ஆன ஆஸ்பத்திரியில் தனக்குப் பிறந்த குழந்தையை யாரோ திருடிவிட்டதாகப் பிரச்னை செய்திருக்கிறார் அவர். விசாரணையில் அவர் பொய் சொல்லியிருந்திருக்கிறார் என்றும் குழந்தை ஆறாவது மாதத்திலேயே இறந்துவிட்டதும் தெரிய வந்திருக்கிறது.

ஏமாற்றுவேலை செய்தவரை தண்டிக்க யோசிக்கும் அதே வேளையில் இப்படிச் செய்ய அவரை உந்தியது என்ன என்பதை யோசிப்பதும் அவசியமாகிறது.
என்னம்மா, கொழந்தை பெத்துக்கலையா... தள்ளி போட்டுக்கிட்டே போகாதே என ஆரம்பித்து 'மலடி' என்னும் பட்டம் கட்டப்படுதலுக்கும் மிக எளிமையாக ஆளாகிவிடுகிறாள் பெண். மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு சமூக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்திலா இப்படி எல்லாம் நடக்குதுன்னு சொல்றீங்க... சும்மா கதை விடாதீங்க... என்பவர்களுக்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு!
கரு வளர்ச்சியடைவது தெரிந்த உடனேயே குழந்தையைக் கையில் தூக்கி நெஞ்சோடு அணைத்து முத்தமிடும் அந்த நாளுக்காகப் பெண் ஏங்க ஆரம்பித்துவிடுகிறாள். அப்படியிருக்க திடீரென அதுவும் ஆறாவது மாதத்தில் ஏற்பட்டிருக்கும் கருச்சிதைவு உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் அவளைப் புரட்டிப் போட்டுவிடுகிறது.
திடீரென அபார்ஷன் நடக்கும் பட்சத்தில் மனைவியின் நிலைமையைப் புரிந்து எமோஷனல் சப்போர்ட்டும் கொடுக்கும் கணவனாக இருந்தால் பெண் அந்தக் கட்டத்தை ஓரளவுக்கு எளிமையாகக் கடந்துவிடுகிறாள். இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் பேசினோம்.

``சமீபத்தில் திருமணமான தன் தோழிகள் எல்லாம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள, நமக்குத்தான் உடலில் ஏதாவது பிரச்னை இருக்குமோ என யோசிக்கும் நேரத்தில்தான் துளிர்விடுகிறது நிஜமான பிரச்னை. அதுவரை இப்போது என்ன அவசரம் என மகப்பேற்றைத் தள்ளிப்போட்டவர்கள்கூட சமூக அழுத்தத்தின் காரணத்தாலேயே ஒருவித ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளாகிறார்கள்.
குழந்தை பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் முதல் மருந்து மாத்திரைகள் வரை பெண்ணின் உடலை ஒரு வழி செய்துவிடுகின்றன. போதாக்குறைக்கு மற்றவர்களின் அழுத்தமும் ஸ்ட்ரெஸ்ஸுடன் சேர்ந்து ஒரு காட்டு காட்டிவிட்டுச் செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனாலேயே பெரும்பாலான பெண்கள் Pseudocyesis எனும் நிலையால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிகளுக்கு நிகழும் உடல் மாற்றங்களைப் போலவே அறிகுறிகளும் தோற்றங்களும் உடலில் நிகழ்வதுதான் Pseudocyesis . இதன் ஆணிவேரே ஸ்ட்ரெஸ் தான்.
ஸ்ட்ரெஸ் காரணத்தால் உருவாகும் இந்த நோய் வாந்தி, மயக்கம் எனக் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அறிகுறிகளை உடலில் உண்டுபண்ணுகிறது. வயிற்றில் அதிகப்படியான கொழுப்பைச் சேர்த்து போலி கர்ப்பத்தை உருவாக்குகிறது. பீரியட்ஸ் வருவதும் குறைந்துவிட கர்ப்பம் என்றே நம்பி ஆரம்பத்தில் ஏமாந்தும் போகின்றனர் பெண்கள். ஏற்கெனவே மனரீதியாகக் குழந்தைப்பேறு இல்லையே என ஏங்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் அழுத்தத்தின் உச்சமே Pseudocyesis.

இது ஒருபக்கம் இருக்க, வயிற்றில் நிஜ குழந்தையைச் சுமப்பது போலவும் அதன் அசைவுகள் தெரிவது போலவும் குஜராத்தில் போலி மாற்றுகள் செய்து கொடுக்கிறார்கள். அதிகமாக விற்பனையாகும் இதற்கு குழந்தைபேற்றுக்காக ஏங்கும் பெண்களிடையே வெளிமாநிலங்களிலும் மவுசு அதிகரித்து வருகிறது. இத்தனை விலைகொடுத்து நாடகமாடித்தான் சமூகத்தில் நிம்மதியாக வாழ்வதாகப் பெண் காட்டிக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுகிறது.
தம்பதியினர் கருவுறவில்லை என்றால் பிரச்னை பெண்ணிடம் தான் இருக்க வேண்டும் என்னும் நிச்சயம் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஏன் பெண் மட்டுமே சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்கிறாள்... உட்படுத்திக்கொள்ளத் தள்ளப்படுகிறாள்!?'' கோபத்துடன் முடிக்கிறார் டாக்டர் சசித்ரா.
மாறட்டும் சமூகம்.