ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“அவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங் இருந்துச்சு, அவங்களுக்குள்ள!”

சரோஜா பாலசுப்ரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
சரோஜா பாலசுப்ரமணியன்

ஃபேமிலி மெம்பர்ல ஆரம்பிச்சு வீட்டுல வேலை பார்க்கிறவங்கவரைக்கும், எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி அன்பு காட்டுவாங்க. அவங்களைப் பார்த்து சிரிக்கிறதுலகூட வித்தியாசம் தெரியாது

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரும், ஜூனியர் விகடன் இதழின் நிறுவனருமான அமரர் எஸ்.பாலசுப்ரமணியனின் மனைவி, ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசனின் அம்மா சரோஜா, கடந்த 6.11.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை இயற்கை எய்தினார். 84 வயதான சரோஜா, பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு, நிறைவாழ்வு வாழ்ந்து, மறைந்திருக்கிறார்.

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், தீவிர விவசாயி, பறவை ஆர்வலர் என்று பன்முகம் கொண்டவரான பாலசுப்ரமணியனின் மனைவி சரோஜா, கணவரின் அத்தனை முகங்களுமாக தானும் இருந்ததுதான் அவர்களுடைய அந்நியோன்ய வாழ்க்கைக்கு சாட்சி.

தம்பதிக்கு மொத்தம் ஆறு மகள்கள், ஒரு மகன். ஒன்றிரண்டு பெண் குழந்தைகளை வளர்த்தெடுப்பதே பெரும்பாடு என்று நினைக்கும் சமூகத்தில், ஆறு பெண் குழந்தைகளையும் அற்புதமாக வளர்த்தெடுத் திருக்கிறார் சரோஜா. ஒவ்வொரு பெண்ணும் தமக்கென சுய அடையாளத்தோடு, சுய விருப்பத்தோடு வளர்ந்து ஆளாவதற்கு அவர்களுடைய ஒவ்வோர் அசைவிலும் துணைநின்றிருக்கிறார் சரோஜா. அதையேதான் செய்திருக்கிறார் தன்னுடைய ஒரே ஒரு மருமகளுக்கும்.

சரோஜா - பாலசுப்ரமணியன்
சரோஜா - பாலசுப்ரமணியன்

மகள்கள் மற்றும் மருமகளிடம் பேசப்பேச... ‘தன்னம்பிக்கைக்கும், பெண் சுதந்திரத்துக்கும் அற்புதமான அடையாளம் சரோஜா’ என்பது நமக்குள் நன்றாகவே ஊடுருவுகிறது!

‘`ஃபேமிலி மெம்பர்ல ஆரம்பிச்சு வீட்டுல வேலை பார்க்கிறவங்கவரைக்கும், எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி அன்பு காட்டுவாங்க. அவங்களைப் பார்த்து சிரிக்கிறதுலகூட வித்தியாசம் தெரியாது. ஒரேயொரு முறை ஒருத்தரைப் பார்த்தாலும், அடுத்த முறை பார்க்கிறப்போ அவங்க குடும்பத்தாரோட பேரையெல்லாம் ஞாபகம் வெச்சிட்டு விசாரிப்பாங்க. அம்மாவைப்பத்தி ஒரு வார்த்தையில சொல்லணும்னா... கொஞ்சம்கூட சுயநலமில்லாத மனுஷி. அப்பா மாதிரியே அம்மாவுக்கும் விலங்குகள், பறவைகள் மேல லவ் இருந்துச்சு. அவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங் இருந்துச்சு அவங்களுக்குள்ள’’ என்று சிலாகிக்கிறார் மூத்த மகள் ராதா. இவர், ஆனந்த விகடன் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் செயல்பாடுகள் துறைக்கான இயக்குநர்.

பல் மருத்துவராக இருக்கும் மற்றொரு மகளான கீதா சாம், ‘`அதிர்ந்து பேசாத இயல்பு அம்மாவுக்கு. கல்யாணமான புதுசுல நடந்த ஒரு சம்பவத்தையே இதுக்கு உதாரணமா சொல்லலாம். அன்னிக்கு பூண்டு ரசம், தக்காளி ரசம்னு ரெண்டு வகை ரசம் வெச்சிருந்தாங்களாம் எங்க பாட்டி (மாமியார்). அம்மாவுக்கு பூண்டு ரசம் சாப்பிட்டுப் பழக்கமில்லை. ‘உனக்குப் பிடிச்சதைப் போட்டுக்கோ’ன்னு பாட்டி சொல்ல, ‘எதுன்னாலும் பரவாயில்லை’ன்னு அம்மா சொல்லியிருக்காங்க. பூண்டு ரசம் ரொம்ப நல்லதாச்சேன்னு மருமக தட்டுல விட்டிருக்காங்க. சாதத் தைப் பிசைஞ்சு ஒரு வாய் வெச்சப்புறம்தான் பூண்டு ரசம்னு தெரிஞ்சிருக்கு. அப்படியே தலையை குனிஞ்சிட்டு அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். பாட்டி பதறிப்போய் என்னன்னு கேட்டப்புறம்தான், ‘எனக்கு பூண்டு ரசம் சாப்பிட்டுப் பழக்கமில்லை’ன்னு சொல்லி யிருக்காங்க. கூடவே, பாட்டியும் பதறிப்போய் பலமா சமாதானப் படுத்தியிருக்காங்க.

அன்னிக்கு அவங்களுக்குள்ள ஆரம்பிச்ச அந்நியோன்ய பந்தம், கடைசிவரைக்கும் மாறவே இல்ல. அம்மா-மகள் மாதிரியேதான் இருந்தாங்க, அதைப்பத்தி பேசும்போது, ‘அவங்க எனக்கு அம்மா மாதிரியில்ல. அம்மாவேதான்’ன்னு அடிக்கடி எங்கம்மா சொல்வாங்க. அம்மா பேசின ஒவ்வொரு வார்த்தையும் இப்பவும் காதுக்குள்ள கேட்டுக் கிட்டே இருக்கு’’ என்று சொல்லும்போதே கீதாவின் குரல் கம்முகிறது.

‘`அம்மாகிட்ட நெகட்டிவிட்டி சுத்தமா கிடையாது. உடம்பு முடியாதப்போ பொதுவா எல்லோருக்கும் கோபம் வரும். ஆன, அவங்க அந்த நேரத்துலயும் கோபப்பட்டு பார்த்ததே இல்லை. பேரப் பசங்க, அம்மாவை சாப்பிட வைக்கிறதுக்காக மொக்கை ஜோக் அடிப் பாங்க. அவங்களுக்கு சிரிச்சா முதுகு வலிக்கும். அதைப் பொறுத்துக்கிட்டு பேரப் பிள்ளைகளோட சேர்ந்து சிரிப்பாங்க. உடம்பு முடியலங்கறத ஒருபோதும் அம்மா காட்டிக்கவே மாட்டாங்க. அம்மாவோட டிரஸ்ஸிங் கம்பீரமா இருக்கும். உடம்பு சரியில்லாதப்போகூட அந்த இயல்பு மாறவே இல்லை’’ என்று வார்த்தைக்கு வார்த்தை மாமியாரை அம்மா என்றே விளித்துச் சிலிர்க்கிறார் மருமகளான ராதிகா சீனிவாசன். இவர், விகடன் தொலைக்காட்சி மற்றும் OTT புரொடக்‌ஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட் பொறுப்பை வகிப்பதோடு, ஆனந்த விகடன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் இருக்கிறார்.

‘டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ஐந்தாவது மகளான சுதா தினேஷ். ‘`எங்கம்மாவை நான் ஒரு போர் வீராங்கனையா பார்க்கிறேன். அப்பா தவறினப்போ அந்த இயல்பை நான் பார்த்தேன். விகடன் குடும்பத்துக்குள்ள மருமகளா வந்த பிறகும் அவங்க இயல்பு மாறாம இருந்தாங்க. அது ரொம்ப கஷ்டம். பவர், பணம் ரெண்டும் மனுஷங்களோட இயல்பை மாத்திடும். ஆனா, அம்மா மாறவே இல்ல’’ என்று சுதா சொல்லி முடிக்க, அதை ஆமோதித்தபடி அமைதி காக்கிறார்கள் மற்ற மகள்களான ப்ரீத்தா குரு மற்றும் லதா சசி. இவர்களில் ப்ரீத்தா அமெரிக்காவில் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். லதா, அதே அமெரிக் காவில் ஃப்ரீலான்ஸ டிசைனர்!

அன்பின் சொரூபமான அன்னைக்கு, விகடன் குடும்பத்தின் கண்ணீர் அஞ்சலி.