Published:Updated:

ஆடு, மாடு வளர்த்தவர்... இன்று ஆர்மி ஆபீஸர்!

சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா

சாதித்த விவசாயி மகள்

ஆடு, மாடு வளர்த்தவர்... இன்று ஆர்மி ஆபீஸர்!

சாதித்த விவசாயி மகள்

Published:Updated:
சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா

நஞ்சமடைக்குட்டை... ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம். திரும்பிய பக்கமெல்லாம் வயல்கள், மலைகள், கால்நடைகள், வனவிலங்குகள். நல்ல சாலை களோ, முறையான போக்குவரத்து வசதியோ கூட இல்லாத அந்த கிராமத்தின் எல்லையான மலையடிவாரத்தில் இருக்கிறது சரண்யாவின் வீடு. குடும்பம், விவசாயம், கால்நடைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் 23 வயதேயான சரண்யா, மிக விரைவில் இந்திய ராணு வத்தில் அதிகாரியாக நுழையவிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.பி (Service Selection Board) எனப்படும் ராணுவ உயரதிகாரி களுக்கான தேர்வில் நாடு முழுவதும் இருந்து 190 பேர் கலந்து கொண்டனர்; ஐந்து பேர்தான் வெற்றி பெற்றனர். அதில் சரண்யாவும் ஒருவர். விரைவில் பயிற்சிக் காக, சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு செல்ல உள்ளார். ஓர் அதிகாலையில், சூரியன் உதயமாகி சில நிமிடங்களில் சரண்யாவின் வீட்டுக்குச் சென் றோம். மாட்டை மேய்ச்சலுக்குக் கட்டிவிட்டு வந்து நம்மிடம் பேசினார் சரண்யா.

ஆடு, மாடு வளர்த்தவர்... இன்று ஆர்மி ஆபீஸர்!

“அப்பா, அம்மா, நான் தங்கச்சி... இதுதான் எங்க வீடு. விவசாயக் குடும்பம். அப்பா, அம்மா எட்டாம் வகுப்புவரை படிச்சிருக்காங்க. தங்கச்சி ஸ்கூல் படிக்கிறா. ஆடு, மாடுகளை மேய்ச் சலுக்கு விடுறது, தண்ணி காட்டுறது, சொட்டு நீர் டியூப் இழுக்கறது, களை எடுக்கறதுனு எல்லா விவசாய வேலைகளையும் செய்வேன். சின்ன வயசுல இருந்தே கபடியில ஆர்வம் அதிகம். ஸ்கூல், காலேஜ், அண்ணா யுனிவர்சிட்டினு நிறைய டீம்ல விளையாண்டிருக்கேன்’’ என்றவர், ராணுவப் பயிற்சிக்குச் சென்றது ஒரு திருப்புமுனை.

‘`காலேஜ் படிக்கறப்ப நான் என்.சி.சி உறுப்பினரா இல்ல. இருந்தாலும் மிலிட்டரினா என்ன, எப்படி இருக்கும்னு நிறைய பேர்கிட்ட கேட்டுட்டே இருப் பேன். சிவில் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, ஒரு ஐ.டி கம்பெனில வேலைபார்த்தேன். நல்ல சம்பளம். ஆனாலும், அங்க வேலை செஞ்சப்போ கபடி விளையாட முடியல. எனக்கு ஒரே இடத்துல உக்காரப் புடிக் காது என்பதால், வேலை என் இயல்பை ரொம்ப பாதிச்சது. அதனால வேலைய விட்டுட்டு மறுபடியும் கபடி விளையாட ஆரம்பிச்சுட்டேன். ஸ்டேட் மேட்ச் வரை ஆடினேன். வேலையை விட்ட துக்கு வீட்ல ஒண்ணும் சொல்ல லையானு கேட்குறீங்களா? அதை எங்க அப்பா, அம்மாகிட்டயே கேளுங்க...’’ என்றவாறு சரண்யா தன் பெற்றோருடன் இணைந்து சின்ன வெங்காயத்தின் தோலை உரிக்க ஆரம்பிக்க, சரண்யாவின் தந்தை மோகனசுந்தரம் பேசினார்.

“கபடி, ஐ.டி வேலை, மறுபடியும் கபடி, அப்புறம் ராணுவம்னு... இப்படி சின்ன வயசுல இருந்தே சரண்யா விருப்பத்துக்கே அவங்களை விட்டுட்டோம். இன்னொரு பக்கம், தோட்டத்துல எல்லா வேலையும் செஞ்சுகொடுப்பாங்க. திறமையும் தெம்பும் அவங்களுக்கு நிறைய. அதைப் பார்த்து எனக்கும் தைரியம் வந்துடும். ராணுவத்துல சேர்றதுக்கான பயிற்சி அகாடமியில சேர்ந்ததுக்கு அப்புறம், தேர்வுக்காக மத்தியப்பிரதேசம், பெங்களூர்னு நிறைய இடங்களுக்கு அவங்க போயிட்டு வரும்போது, பெருமையா இருக்கும். எங்க கிராமத்துல யாரும் ராணுவத்துல சேர்ந்தது இல்ல. இப்போ ஊரே சரண்யாவை பெருமையா பேசுறாங்க’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

 பெற்றோருடன்...
பெற்றோருடன்...

சரண்யாவின் அம்மா தவலட்சுமி, “சரண் எப்பவுமே போல்டு. பயிற்சி அகாடமியில சேர்ந்தப்போ ரொம்பக் கஷ்டப்பட்டா. நைட் 12, 1 மணி வரை ஏதாவது வேலை இருக்கும். காலைல 4 மணிக்கு எல்லாம் எந்திருச்சு கிளம்பிப்போகணும். இங்க போக்குவரத்து வசதியும் பெருசா இல்ல. அந்தக் கடின உழைப்பெல்லாம்தான் இப்போ அவளுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கு. ‘உயிர் பயமில்லாம ராணுவத்துக்குப் புள்ளைய அனுப்புறியா?’னு சிலர் கேட்குறாங்க. சாவு எங்க இருந்தாலும் வரும். ராணுவத்துக்கு போய்தான் உயிர் போகும்னு இல்ல. கூடவே, அதைப்பத்தியெல்லாம் நாங்க யோசிக்கவே இல்ல. இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம். ராணுவத்துல அவ நல்ல அதிகாரினு பேரு வாங்குறதுதான் முழு சந்தோஷம்’’ என்றார் கம்பீரமாக.

பெற்றோர் பேசிக்கொண்டிருக்கும்போதே சரண்யாவின் கண்களில் நீர் துளிர்க்க, தன்னை நிதானப்படுத்திக்கொண்டு ராணுவப் பயணம் பற்றித் தொடர்ந்தார். “வேலைய ரிசைன் பண்ணிட்டு, ஆறு மாசம் கபடி விளையாடிட்டு இருந்தேன். போன ஜூன் மாசம், ராணுவத்துக்கான தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிற, கோவையில் உள்ள தனியார் ‘ஆபீசர்ஸ் ப்ரிபேரிங் அகாடமி’யில சேர்ந்தேன். ஆரம்பத்துல ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. மூணு நிமிஷத்துக்குத் தொடர்ச்சியா இங்கிலீஷ்ல பேசி தினமும் வீடியோ எடுத்து அனுப்பணும். ஆரம்பத்துல நான் 50, 60 முறையெல்லாம் வீடியோ டேக் எடுத்திருக் கேன். வெளியிலயும் நிறைய டாஸ்க் கொடுப் பாங்க. சில டாஸ்க்குக்கு நான் போகலைன்னு, என்னை அகாடமியில இருந்து தூக்கிட்டாங்க.

ஈசன்
ஈசன்

மூணு மாசம் கழிச்சு, மறுபடியும் போய் சேர்ந்தேன். இதுக்கப்புறம் அவங்க நம்மைத் தூக்கக் கூடாதுனு உறுதியோட, ஒவ்வொரு டாஸ்க்கையும் பண்ணினேன். என் முன்னேற்றத்தை என்னாலேயே உணர முடிஞ்சது. அகாடமியில எனக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுத்தாங்க. போபால், பெங்களூர்னு அடுத்தடுத்து ரெண்டு தேர்வுகள். ஆனா, ரெண்டுலயும் ஸ்கிரீன்டு அவுட் (Screened out) ஆகிட்டேன். என்ன தப்பெல்லாம் பண்ணினேனோ அதை யெல்லாம் சரிபண்ணிட்டு மூணாவது அட்டெம்ப்ட்டுக்காக அலகாபாத் போனேன். ஸ்கிரீனிங், கான்ஃபரன்ஸ்னு ரெண்டு தேதிகள்லயும் ரிட்டர்ன் டிக்கெட் புக் பண்ணிருந்தேன். ஸ்கிரீன்டு இன் ஆனப்போ, அவ்ளோ சந்தோஷத்தோட அன்னிக்கு புக் பண்ணியிருந்த டிக்கெட்டை கேன்சல் பண்ணினேன். மொத்தம் 4 நாள்ல 17 டெஸ்ட். ஒவ்வொரு டெஸ்ட்டையும் முடிச்சப்போ என் நம்பிக்கை வளர்ந்துக்கிட்டே வந்து, எல்லா டெஸ்ட்டையும் முடிச்சப்போ வேற லெவல் கான்ஃபிடன்ஸ் கிடைச்சிருந்தது’’ என்ற சரண்யா, நன்றியுடன் தன் பயிற்சியாளர், முன்னாள் ராணுவ வீரர் லெப்டினன்ட் ஈசனைப் பார்த்தார்.

“எங்க அகாடமி டிரெய்னிங்ல ஆண், பெண் பேதம் எல்லாம் இல்ல, எல்லாரும் ஒண்ணு தான்’’ என்று ஆரம்பித்த ஈசன், ‘`ராணுவத்துல ஆண்களைவிட பெண்களுக்கு வேக்கன்ஸி கம்மி; அதனால போட்டி அதிகமா இருக்கும். இன்னொரு பக்கம், தலைமுறை தலைமுறையா ராணுவத்துல இருக்கிறவங்க வாரிசு எல்லாரும் வருவாங்க. சரண்யா எங்க அகாடமில சேர்ந்தப்போ, கொரோனா பொது முடக்கத்தால ஆன் லைன்லதான் டிரெய்னிங் போச்சு. நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அப்போதான் ஆர்மிக்குள்ள போறப்போ அந்த சுழலுக்கு இவங்க பொருந்து வாங்க. ஆரம்பத்துல அந்தக் கண்டிப்புலதான், சொல்ற விஷயங்களை கடைப்பிடிக்கலைனு சரண்யாவை அகாடமியில இருந்து தூக்கிட் டேன். மூணு மாசத்துல திரும்பி வந்தப்போ, சரண்யாகிட்ட பெரிய மாற்றம். பேச்சைவிட செயல்ல பல மடங்கு கில்லியா இருந்தாங்க. கொரோனா நேரத்துல, கிட்டத்தட்ட 400 நோயாளிகளை கண்காணிச்சு கோவை மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டுற வகையில செயல்பட்டாங்க. ராணுவத்துல இருக்குற அதிகாரிகளை இணைச்சு நிறைய பயிற்சி வகுப்புகள் நடத்தி அவங்க கவனத்தையும் ஈர்த் தாங்க. என்கிட்ட பயிற்சி எடுத்த ஒரு பையன், 23 முறை முயற்சி பண்ணி எஸ்.எஸ்.பி (SSB) தேர்வுல செலக்ட் ஆகிருக் கான். அந்தளவுக்கு இது கஷ்டம். சரண்யா முதல் முயற்சியிலேயே அதை க்ளியர் பண்ணி ருக்காங்க. இது மிகப்பெரிய சாதனை” என்றார் குருவுக்கான பெருமையுடன்.

சரண்யா, “190 பேர் அலகாபாத்ல ரிப்போர்ட் பண்ணினோம். 26 பேர்தான் ஸ்க்ரீன்டு இன் ஆனோம். அதுல அஞ்சு பேர் தான் க்ளியர் பண்ணி ராணுவப் பணிக்கு ரெக்கமண்ட் ஆகிருக்கோம். அந்த அஞ்சு பேர்லயும் மூணு பேர் ராணுவப் பின்னணியில இருந்து வந்தவங்க. இன்னொருத்தரோட அப்பா பிசினஸ்மேன். கிராமத்து விவசாயக் குடும்பத்துல இருந்து போய் அந்த அஞ்சு பேருல நானும் ஒருத்தியா நிக்குறது கெத்தா இருக்கு. என் பெயரை அறிவிச்சப்போ, கண்ல இருந்து தண்ணி நிக்காம வந்துட்டே இருந்துச்சு’’ என்று பரவச மானவர்,

‘`அடுத்து மெரிட் பயிற்சி. டாப் மெரிட்ல வரணும். எல்லை ஒருங் கிணைப்புல இன்ஜினீயர்ஸ் பிரிவுக்குப் போகணும். யாருமே போக முடியாத காட்டுக்குள்ள எல்லாம் போய் நம்ம ராணுவத்துக்காக ரோடு போடுறது, அவங்க ஆற்றைக் கடக்கப் பாலம் போடுறது, கன்னி வெடி எடுக்குறதுனு நிறைய வேலைகள் இருக் கும். சவால்கள் அதிகரிக்க அதிகரிக்கத்தான் என் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்” - தயாராக இருக்கிறார் சரண்யா.

வயல் அளந்த கால்கள் நாட்டின் எல்லையில் நின்றாடட்டும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பேட்டியின் முழு வடிவத்தை https://bit.ly/3KpPYTf லிங்க்கில் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism