Published:Updated:

பாலியல் வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்பட்ட நபர்; 40 ஆண்டுகளுக்குப் பின் மன்னிப்பு கேட்ட எழுத்தாளர்!

Alice Sebold
News
Alice Sebold ( Katrina Tulloch/The Post-Standard via AP, File )

40 ஆண்டுகள் கழித்து சில நாள்களுக்கு முன்பு பிராட்வாட்டரின் இரண்டு வழக்கறிஞர்கள், அவர் குற்றவாளி இல்லை என்றும் ஆலிஸும் ப்ராடவாட்டரும் ஓரு முறைகூட சந்தித்ததே இல்லை என்றும் நிரூபிக்கின்றனர்.

1981-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி, நீல நிற சட்டை அணிந்த ஐந்து கறுப்பின ஆண்கள் நியூயார்க் மாகாணத்தின் சிரக்யூஸ் நகரில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். 19 வயதே நிரம்பிய ஆலிஸ் செபோல்டு என்ற இளம் மாணவி, இந்த ஐவரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என குற்றவாளியை அடையாளம் காட்ட முயன்று கொண்டிருந்தார்.

வரிசையாக நின்றிருந்த ஐந்து பேரில் நான்காவதாக நின்றுகொண்டிருந்தவனை நோக்கி விரலைச்சுட்டி இவன்தான் குற்றவாளி என்று போலீசாரிடம் அடையாளம் காட்டினார் ஆலிஸ். ஆலிஸ் அடையாளம் காட்டிய நபரின் பெயர் ஆண்டனி ப்ராட்வாட்டர். 20 வயதே ஆன மிகவும் பொறுப்பான இளைஞன் ஆண்டனி. கப்பலில் சில காலம் வேலை செய்துவிட்டு, நோய்வாய்ப்பட்ட தன் தந்தையைக் காண்பதற்கு அப்போதுதான் சிரக்யூஸ் நகருக்கு வந்திருந்தான்.

Sexual Harassment  (Representational Image)
Sexual Harassment (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசாரும், பாதிக்கப்பட்ட ஆலிஸும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த நேரம் அது. ஆலிஸுக்கு ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். தன்னைத் துன்புறுத்தியவன் ஒரு கறுப்பின இளைஞன் என்பது. ப்ராட்வாட்டரும் கறுப்பின இளைஞன்தான். இப்படித்தான் இந்த வழக்குக்குள் நுழைகிறார் ஆண்டனி ப்ராட்வாட்டர்.

ஆலிஸால் அடையாளம் காட்டப்பட்டதால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஒன்றல்ல இரண்டல்ல 16 வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கிறார் ஆண்டனி ப்ராட்வாட்டர். ஆரம்பத்திலிருந்தே தான் நிரபராதி என்றே அவர் கூறி வந்தார். அவர் குரல் எந்தச் சுவரையும் உடைக்கவில்லை. ஐந்து முறை பரோல் மறுக்கப்பட்டு மீண்டும் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்படுகிறது. சிறையில் இருக்கும்போதே அவரின் தந்தையும் இறந்துவிடுகிறார்.

Anthony Broadwater
Anthony Broadwater
AP Photo/Tina Fineberg, File

காலச்சக்கரம் சுழல்கிறது. பிற்காலத்தில் ஆலிஸ் செபோல்டு புகழ்பெற்ற எழுதாளராக மாறுகிறார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட `Lucky' என்ற புத்தகம்தான், அவரை மிகப்பெரிய எழுத்துலக ஆளுமையாக அடையாளம் காட்டியது. ஆலிஸின் புத்தகம் ஒரு மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்ந்தன.

மறுபக்கம், 16 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு வெளியே வந்த ப்ராட்வட்டர்க்கு கண்ணியமான வேலை கிடைப்பதற்கே மிகப்பெரிய திண்டாட்டமாகப் போய்விட்டது. பாலியல் குற்றவாளி என்ற முத்திரை அவரின் வாழ்வாதாரத்துக்கே பிரச்னையாக மாறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சூழலில் சில நாள்களுக்கு முன்பு ப்ராட்வாட்டரின் இரண்டு வழக்கறிஞர்கள், அவர் குற்றவாளி இல்லை என்றும், அடையாளம் காட்டுவதற்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வருவதற்க்கு முன்பு வரை ஆலிஸும் ப்ராட்வாட்டரும் ஓரு முறைகூட சந்தித்ததே இல்லை என்றும் நிரூபிக்கின்றனர். ப்ராட்வாட்டர் நிரபராதியாக அறிவிக்கப்படுகிறார். மறுநொடியே, கண்ணீரை அடக்க முடியாமல் தன் வழக்கறிஞர்களைக் கட்டியணைத்துக்கொண்டு அழுதார் ப்ராட்வாட்டர். அவர் நிரபராதி என்று நம்பிய ஒரு சிலரில் அவர் மனைவியும் ஒருவர்.

Alice Sebold
Alice Sebold
Katrina Tulloch/The Post-Standard via AP, File

இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. ``இப்படி ஒரு பழியைச் சுமக்கும் நான், என் குழந்தைகளை இவ்வுலகத்திற்கு கொண்டுவர விரும்பவில்லை" என குழந்தை பெற்றுக்கொள்ளாததற்கான காரணத்தை துயரத்துடன் பகிர்கிறார் ப்ராட்வாட்டர்.

வழக்கு நிறைவடைந்த சில தினங்களில், ``நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை உங்களிடமிருந்து திருடியதற்கு என்னை மன்னித்து விடுங்கள்” என ப்ராட்வாட்டரிடம் மன்னிப்பு கோரி அறிக்கையை வெளியிட்டார் 58 வயதாகும் ஆலிஸ். சம்பவம் நடந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கோரியிருக்கிறார் ஆலிஸ். இதுபற்றி ப்ராட்வாட்டர் கூறும்போது, ``நான் இப்போதுதான் மனநிம்மதி அடைந்திருக்கிறேன். இப்படியொரு மன்னிப்பைக் கேட்பதற்கு ஆலிஸுக்கு அலாதி தைரியம் இருந்திருக்கிறது" என நிம்மதியுடன் தெரிவிக்கிறார் 61 வயதாகும் ப்ராட்வாட்டர்.