Published:Updated:

அவள் பதில்கள் - 3

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

#Utility

அவள் பதில்கள் - 3

#Utility

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

டெய்லர் அமைவதுகூட இறைவன் கொடுத்த வரம்தானோ என்று நினைக்கும் அளவுக்கு பலருக்கும் சரியான டெய்லர் வாய்ப்பதில்லை. சரியான டெய்லரை அடையாளம் காண்பது எப்படி? - திக்‌ஷிகா, சென்னை-19

பதில் சொல்கிறார் காஸ்டியூம் டிசைனர் சௌபர்ணிகா

முதலில் ஆன்லைனில் ரிசர்ச் செய்யலாம். உங்கள் தேவைக்கேற்ப, உதாரணத்துக்கு டிசைனர் பிளவுஸ் தைக்க வேண்டுமென்றால், உங்கள் வசிப்பிடத்திலுள்ள டிசைனர் பிளவுஸ் டெய்லர்களைத் தேடலாம். அப்படித் தேடிக் கண்டுபிடித்துவிட்டால் அவர் களது வெப்சைட் அல்லது சமூக வலைதளங்களில் அவர்களின் டிசைன்கள் படங்களுடனும், கஸ்டமர் ரெவ்யூக்களுடனும் வரும். பாசிட்டிவ் கமென்ட்ஸ் அதிகமிருந்தால் அந்த டெய்லரைத் தேர்ந்தெடுக்கலாம்.

நன்றாக உடை அணிகிற உங்கள் தோழிகளிடம் அவர்கள் எங்கே தைக்கக் கொடுக்கிறார்கள் என்ற விவரங்கள் கேட்கலாம். பட்ஜெட் ஓகே என்றால் டிரையல் கொடுத்துப் பார்க்கலாம். சின்ன கடையில் ஒரே ஒரு டெய்லர் தைத்துக்கொண்டிருப்பார். ஆனால், அவர் தைக்கும் உடைகளின் ஃபிட்டிங் சூப்பராக இருக்கலாம் என்பதால் அவரைத் தவிர்க்க வேண்டியதில்லை.

புதிய டெய்லர்களை அணுகும்போது அவர்களுக்கு உங்கள் உடல் அமைப்புக்கேற்ப தைப்பது புரிபட நேரமெடுக்கும். உதாரணத்துக்குச் சிலருக்கு வலது, இடது கைகளின் அளவும், வலது, இடது மார்பக அளவும் வேறுபடும். அதற்கேற்ப அளவெடுத்து தைக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். புதிய டெய்லரை அணுகும் போது முதன்முறையே பர்ஃபெக்ட் ஸ்டிச்சிங்கை எதிர்பார்க்க முடியாது.

`போஸ்ட் டெலிவரி சர்வீஸ்' என ஒன்று உண்டு. தைத்து வாங்கிக் கொண்டு போன பிறகு, சிலர் உடைகளில் மாற்றங்கள் செய்து தர மாட்டார்கள். அப்படியே செய்தாலும் அதற்குத் தனியே கட்டணம் வாங்கு வார்கள். சிலர் குறிப்பிட்ட நாள்கள் வரை இலவச ஆல்ட்ரேஷன் செய்து தருவதாகச் சொல்வார்கள். இந்த வாக்குறுதி கொடுப்பவர்களைத் தேர்ந் தெடுக்கலாம்.

உங்கள் டெய்லர் எத்தனை வருட அனுபவம் உள்ளவர், கட்டணம் எவ்வளவு, என்ன மெட்டீரியல் பயன் படுத்தப்போகிறார், நிறம், லைனிங் துணி, ஜரிகை வேலைப்பாடுகளுக்கான உத்தரவாதம் உண்டா, எத்தனை நாள்களில் டெலிவரி, ஆல்ட்ரேஷன் வசதி உண்டா என்ற கேள்விகளைக் கேட்டுத் தேர்வு செய்யுங்கள்.

அவள் பதில்கள் - 3

என் மகள் 2 வருடங்களாக நீட் தேர்வு எழுதி அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க அனுப்பச் சொல்கிறார் எங்கள் ஏரியாவில் உள்ள மருத்துவர் ஒருவர். அவரும் ரஷ்யாவில் மருத்துவம் படித்துவிட்டு பிராக்டிஸ் செய்பவர்தான். ரஷ்யா எந்தளவு பாதுகாப்பானது?

- ஜி.சங்கரி, சென்னை-21

பதில் சொல்கிறார் அயல்நாட்டுக் கல்வி ஆலோசகர் சுரேஷ்

உலகிலேயே பெண்கள் தினத்துக்கு விடுமுறை அளித்து, விமரிசையாகக் கொண்டாடும் நாடு ரஷ்யா. குழந்தைகளுக்குச் சிறுவயதி லிருந்தே பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுத்து வளர்க்கும் நாடு. எனவே, பாதுகாப்பு குறித்து பயப்படத் தேவையில்லை. சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தை அணுகினால், மருத்துவம் படிப்பது தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும் விளக்கமாகச் சொல்வார்கள். இப்போதைய நிலவரப்படி, வெளி நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வரும் மாணவர்கள், இந்தியாவில் FMGE (Foreign Medical Graduates Examination) என்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவராகப் பணியாற்ற முடியும். ஆனால்,

2022-ம் ஆண்டு முதல் தேர்ச்சி பெறுகிற மருத்துவ மாணவர்கள், அவர்கள் இந்தியாவில் படித்தாலும் சரி, வெளிநாட்டில் படித்தவர்களானாலும் சரி, ‘நெக்ஸ்ட்’ எனப்படும் National Exit Test எழுதித் தேர்ச்சிபெற்ற பிறகுதான் மருத்துவராகப் பதிவு செய்துகொள்ள முடியும். இதுவரை இந்தியாவில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு உடனே லைசென்ஸ் கிடைக்கிறது. ஆனால், வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் எஃப்.எம்.ஜி.ஈ எழுதினால்தான் லைசென்ஸ் என்ற பாகுபாடு இதுவரை இருந்தது. இனி இருவரையும் வேறு வேறாகப் பார்க்கும் நிலை இருக்காது.

வீட்டிலுள்ள சாமி விக்ரஹங்களைப் பளபளப்பாக, புதிதாக மாற்ற ஏதேனும் வழிகள் உண்டா?

- மங்கையர்க்கரசி, திருச்சி-1

பதில் சொல்கிறார் ஆன்மிகப் பொருள்கள் விற்பனையாளர் பங்கஜ் பண்டாரி

பித்தளை, வெள்ளி, தாமிரப் பொருள்களின் இயல்பே பளபளப்பு குறைவதுதான். புளி, வினிகர் அல்லது மெழுகு சேர்த்த பிரத்யேக கரைசல் கொண்டு இவற்றை மீண்டும் புதுப்பொலிவடையச் செய்யலாம். இப்படிச் செய்த பிறகு, கிளியர் நெயில் பாலிஷ் பூசியோ, கிளியர் பெயின்ட்டை ஸ்பிரே செய்தோ விடலாம். இதைச் செய்த பிறகு, வெயில்படும்படி 6 முதல் 7 மணி நேரமும், மீண்டும் 9 முதல் 12 மணி நேரத்துக்கு தூசு படியாத, உலர்ந்த இடத்திலும் வைத்தெடுக்க வேண்டும். விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்யும் தண்ணீரானது முற்றிலும் வடிந்து உலரும்படி பார்த்துக்கொள்ளவும். விளக்கேற்றும்போது விக்ரஹத்தின் பக்கவாட்டில் விளக்கை வைத்தால், அது ஈரப்பதத்தை எடுத்துக்கொள் வதால் விக்ரஹங்கள் நிறமும் பொலிவும் இழப்பது தவிர்க்கப்படும்.

சற்றே பெரிய விக்ரஹங்கள் என்றால் 24 காரட் தங்க முலாம் பூசி, கோல்டு பிளேட் செய்துகொள்ளலாம். கோயில்களில் எல்லாம் இப்படித்தான் கோல்டு பிளேட் செய்து விக்ரஹங்களை பொலிவோடு பாதுகாக்கிறார்கள்.

அவள் பதில்கள் - 3

நீரிழிவு பிரச்னைக்காக மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், விசேஷங்களின்போது அதிகமாக ஸ்வீட் சாப்பிட நேர்ந்தால், அதை ஈடுகட்ட என்ன செய்வது?

- என்.கோமதி, திருநெல்வேலி.

பதில் சொல்கிறார் நீரிழிவு மருத்துவர் சஃபி எம்.சுலைமான்

திருமணம், பண்டிகை என விசேஷங்களின்போது நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் இனிப்புகளைச் சாப்பிடுவதைக் கட்டாயமாகத் தவிர்ப்பது ஒன்றுதான் இதற்குத் தீர்வு. இனிப்புகள், உடனடியாக ரத்தத்தில் குளூக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்து பிரச்னையை மேலும் தீவிரமாக்கிவிடும். ‘அதுதான் சுகருக்கான மாத்திரைகளைச் சாப்பிடுகிறோமே’ என்று சிலர் இப்படி இனிப்புகளைச் சாப்பிட்டுவிட்டு, பிறகு கடும் அவதிக்குள்ளாவார்கள். ஒருவேளை கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டுவிட்டால், வழக்கமான மாத்திரைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் எடுத்துக்கொள்வதோடு, அடுத்த நாளே வெறும் வயிற்றிலும், உணவு உண்ட பிறகும் சர்க்கரையின் அளவைப் பரி சோதித்துப் பார்த்து அளவு கூடுதலாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவ ஆலோ சனை பெறுவது நல்லது.

அவள் பதில்கள் - 3

டல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.