என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

அவள் பதில்கள் - 4 - கொரோனா காலத்தில் புதிய பிசினஸ் ஆரம்பிக்கலாமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

#Utility

பெரிய பெரிய பியூட்டி பார்லர்களிலேயே பிசினஸ் இல்லை எனக் கேள்விப்படுகிறேன். சொந்தமாக பார்லர் தொடங்குவதாக இருந்த என் திட்டம் ஒரு வருடமாகத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இன்றைய நிலையில் புதிதாக பார்லர் தொடங்குவது சரியானதுதானா?

- என்.அலமேலுமங்கை, திருச்சி

பதில் சொல்கிறார் நேச்சுரல்ஸ் ஃபேமிலி சலூன் அண்டு ஸ்பாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சி.கே.குமாரவேல்

சி.கே.குமாரவேல்
சி.கே.குமாரவேல்

நீங்கள் குறிப்பிட்டது போல கொரோனா காலத்தில் பெரிய பியூட்டி சலூன்களில் முன்பிருந்த அளவு பிசினஸ் இல்லை என்பது உண்மைதான். ஆனால், தீபாவளிக்குப் பிறகு, மெள்ள மெள்ள பிசினஸ் பிக்கப் ஆகிக்கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. இன்னும் மூன்று மாதங்களில் பழைய நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையும் துளிர்த்திருக்கிறது.

அவள் பதில்கள் - 4 - கொரோனா காலத்தில் புதிய பிசினஸ் ஆரம்பிக்கலாமா?

பியூட்டி பார்லர் மட்டுமல்ல, எந்த பிசினஸ் ஆரம்பிக்கவும் இதுதான் சரியான நேரம். ஏன் தெரியுமா? கொரோனாவுக்கு முந்தைய நிலை வேறு. கொரோனாவுக்குப் பிறகு, உங்கள் அலுவலகம் அல்லது பிசினஸ் நடக்குமிடத்தின் டிசைன், பணியாளர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் கொரோனா சூழலுக்கேற்ப மாற்றி பிசினஸ் தொடங்குவீர்கள். நீங்கள் ஆரம்பிக்கவிருக்கும் பார்லர் இப்படி அமையும்போது மக்கள் மத்தியில் உங்கள் பார்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். எந்த பிசினஸும் கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என மாறிவிட்டது. இந்த நிலையில், கொரோனாவுக்கு பின் என்ற விதிமுறைகளைப் பின்பற்றி பிசினஸ் ஆரம்பிப்பவர்கள் 100 சதவிகிதம் அவற்றைப் பின்பற்ற முடியும். எனவே, எல்லா புதிய முயற்சிகளுக்கும் ஏற்ற நேரம் இதுவே. ரீஇன்வென்ட்... ரீஇன்வென்ட்... ரீஇன்வென்ட்... இதுதான் உங்களுக்கான மந்திரமாக இருக்க வேண்டும். அதாவது உடல்ரீதியாக, மனரீதியாக, பொருளாதார ரீதியாக உங்களை ரீஇன்வென்ட் செய்வ தோடு, உங்கள் பிசினஸ் மாடலையும் ரீஇன்வென்ட் செய்துகொண்டால் வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.

என் கணவருக்கு 30 வருடங்களாக சிகரெட் பழக்கம் இருக்கிறது. என் நெருங்கிய வட்டத்தில் புற்றுநோய் பாதித்து உயிரிழந்த நபர்களை நிறைய பார்த்துவிட்டேன். சிகரெட்டை நிறுத்தச் சொன்னால் மறுக்கிறார். அதனால் குடும்பத்தில் சண்டை அதிகமாகிறது. அவரைவிட்டுப் பிரியும் முடிவுக்கு வந்துவிட்டேன். ஆலோசனை தேவை.

- பெயர் குறிப்பிட விரும்பாத வாசகி

பதில் சொல்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

சுபா சார்லஸ்
சுபா சார்லஸ்

மனைவியாக உங்களுடைய வேதனை புரிகிறது. ஆனால், நீங்கள் உங்கள் கணவரின் செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உண்மை யான பிரச்னையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டீர்கள். அணுகுமுறையை மாற்றினாலே இதை எளிதாகக் கையாளலாம்.

முதல் வேலையாக அவர் எப்போ தெல்லாம் சிகரெட் பிடிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். உதா ரணத்துக்கு டென்ஷன் அதிகமான நேரத்தில் பிடிக்கிறார் என்றால் டென்ஷனான சூழல்களிலிருந்து அவரை விடுவிக்க முயற்சி செய்யலாம். அவர் புகை பிடிக்கும்போதெல்லாம் கோபப்பட்டு, சண்டை போடுவதால் நிலைமை இன்னும் மோசமாகுமே தவிர, தீர்வு கிடைக்காது. உங்கள் கோபமும் சண்டையும் அவரை இன்னும் டென்ஷனாக்கி, கூடுதலாக மேலும் சில சிகரெட்டுகளைப் புகைக்கவைக்கும். அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பேசி, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

30 வருடப் பழக்கம் நிச்சயம் அவருக்கு நுரையீரல் மற்றும் கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தி யிருக்கும். முழு உடல் மருத்துவப் பரிசோதனை களைச் செய்யுங்கள். ஒருவேளை பாதிப்பு இருப்பது தெரிந்தால் அதற்குப் பிறகு, அவருக்கு பயம் வரலாம். அவர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட விரும்பினால் டீ அடிக்‌ஷன் மையங்களை நாடலாம். அதற்கு முன் சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவும் `நிகோடின் பேட்ச்' ஒட்டுவது போன்று எளிய வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

கடந்த சில தினங்களுக்கு முன் வந்த பத்திரிகைச் செய்தி இது. சூழல் மாசு அதிகமுள்ள டெல்லி போன்ற இடங்களில் வசிப்போருக்கு ஒருநாளைக்கு 100 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு இணையான ஆபத்து இருக்கிறதாம். சூழல் மாசுக்கு சென்னையும் தப்பவில்லை. சூழல் மாசு காரணமாக எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நபருக்குக்கூட புற்றுநோய் தாக்குகிறது. அதற்காக உங்கள் கணவரின் புகைப் பழக்கத்தை நியாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம்.

தெரிந்தவர்களின் குடும்பங்களில் நிகழ்ந்த புற்றுநோய் மரணங்களை நினைத்து இத்துடன் குழப்பி பயப்பட வேண்டாம். இந்தப் பழக்கத்திலிருந்து கணவரை மீட்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டுமே தவிர, பிரிவு பற்றி சிந்திப்பது தேவை யில்லாத முடிவு.

பெண்கள் சிறிய அளவில் செய்கிற பிசினஸை டிஜிட்டல் மீடியாவில் எப்படி மார்க்கெட்டிங் செய்யலாம்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

வத்சலா குமார், கோவை-9

பதில் சொல்கிறார் சமூக வலைதள பிசினஸ் ஆலோசகர் தரணீதரன்

தரணீதரன்
தரணீதரன்

பிசினஸ் செய்யும் பெண்களின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் ABOUT என்ற பகுதி இருக்கும். அதில் உங்கள் வெப் லிங்க்கைக் கொடுக்கலாம். அந்த லிங்க், நீங்கள் உங்கள் பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்கிற பக்கமாக இருக்கலாம் அல்லது உங்கள் இணையதளமாக இருக்க லாம் அல்லது அமேஸான் லிங்க்காக இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட அந்தப் பொருள்களைப் பற்றி நிறைய தகவல்கள் கொடுக்கும் லேண்டிங் பேஜாக இருக்கலாம்.

புரொஃபைலில் `கவர் இமேஜ்' என ஒரு பகுதி இருக்கும். அதில் உங்கள் பிசினஸில் நீங்கள் மிக முக்கியமாகக் கருதும் ஒன்றின் படத்தையும், இந்த பிசினஸ் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த புரொஃபைலில் பாருங்கள் என லிங்க் உள்ள இடத்தில் அம்புக்குறியிடுகிற மாதிரியும் வைக்கலாம்.

அவள் பதில்கள் - 4 - கொரோனா காலத்தில் புதிய பிசினஸ் ஆரம்பிக்கலாமா?

இவற்றைத் தாண்டி `Linktree' என ஆன்லைன் லிங்க்கிங் டூல் ஒன்று இருக்கிறது. அதன் மூலம் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எத்தனை லிங்க்குகளை வேண்டுமானாலும் அதில் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தை இலவசமாகக் கொடுக்க வேண்டும். அது வீடியோவாக இருக்கலாம். தகவல்கள் அடங்கிய பிடிஎஃப்பாக இருக்கலாம். உதாரணத்துக்கு நீங்கள் நிதி நிர்வாகம் தொடர்பான பிசினஸில் இருந்தால், 2021-ல் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு 10 காரணங்கள் என பிடிஎஃப் இணைக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் அதற்குள் சென்று பார்ப்பார்கள்.

2020-2021ஐ ‘இயர் ஆஃப் வீடியோ’ என்றே சொல்லலாம். உங்கள் தயாரிப்பு, சர்வீஸ் எதுவானாலும் அதை வீடியோவாக மாற்றலாம். `InShot' என ஒரு டூல் இருக்கிறது. உங்கள் மொபைல் கேமராவிலேயே வீடியோ எடுத்துவிட்டு, InShot-ல் எடிட் செய்து ஃபேஸ்புக்கில் 3 நிமிட கன்டென்ட், இன்ஸ்டாகிராமில் 15 செகண்ட் கன்டென்ட் கொடுத்துவிட்டு, மேலும் தகவல்களுக்கு யூடியூப் பார்க்கவும் என வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

யூடியூபில் 10 நிமிடங்களுக்கு அதிகமான கன்டென்ட் கொடுக்கலாம். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை வைத்தே பிசினஸ் செய்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் உங்கள் துறை சார்ந்த குழுவினர் இருந்தால், அவர்களின் பதிவு களுக்கு நீங்கள் கமென்ட் செய்யலாம். அதன் மூலமாகவும் உங்கள் புரொஃபைலுக்கு வருவார்கள். அதிலிருந்து உங்கள் வெப் சைட்டுக்கு போகலாம். இப்படியும் உங்கள் பிசினஸ் வாய்ப்புகள் வளரும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை `அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ, avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.