Published:Updated:

அவள் பதில்கள் - 5 - நெய்யா, வெண்ணெயா... குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?

#Utility

பிரீமியம் ஸ்டோரி

சிறு குழந்தைகளுக்கு உணவில் சிறிது வெண்ணெய் சேர்த்துக் கொடுக்கச் சொல்கிறார்களே... வெண்ணெய், நெய் இரண்டில் எது சிறந்தது? எவ்வளவு சேர்க்கலாம்?

- சுசீலா ராஜேந்திரன், திருச்சி-3

பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என வைட்டமின்களில் இரு வகை உண்டு. வைட்டமின் பி, சி போன்றவை நீரில் கரைபவை. வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை கொழுப்பில் கரைபவை.

தினமும் பருப்பு சாதத்திலும் சாம்பார், ரசம் சாதத்திலும் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் வழக்கம் காலம்காலமாக நம்மிடையே இருப்பதுதான். கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உடலில் சேரவே நம் முன்னோர்கள் இப்படிச் செய்தார்கள். அந்த வகையில் சின்ன குழந்தை களுக்கும் கொழுப்புச்சத்து மிக அவசியம். ஆனால், அதன் அளவு முக்கியம். குழந்தைகளுக்கு வெண் ணெயைவிட நெய் சிறந்தது.

அவள் பதில்கள் - 5 - நெய்யா, வெண்ணெயா... குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?

கொழுப்புச்சத்து என்பதை நெகட்டிவ்வாக பார்க்க வேண்டியதில்லை. உடலுக்கு ஆற்றல் கிடைக்க கொழுப்புச்சத்து அவசியம். அது உணவுக்குச் சுவை கூட்டுவதோடு, வயிறு நிறைந்த உணர்வையும் ஏற்படுத்தும். மேற்குறிப்பிட்ட ஏ, டி, ஈ, கே போன்ற வைட் டமின்கள் கரைந்து உடலுக் குச் சேர கொழுப்புச்சத்து தேவை. கரோட்டின் சத் தானது வைட்டமின் ஏ ஆக மாறவும் கொழுப்புச்சத்து அவசியம். ஏழு மாதங்கள் முதல் 6 வயது வரை குழந்தைக்கு தினமும் 25 கிராம் அளவு கொழுப்புச்சத்து தேவை. ஏழு முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளுக்கு 30 கிராம் அளவு தேவை.

35 வயது இல்லத்தரசி. எனக்கு மாதவிடாய் காலத்துக்கு முன்பு கடுமையான தலைவலி வருகிறது... இந்த வயதில் ஹார்மோன் மாறுதல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? இதற்கு என்ன தீர்வு?

- ரம்யா சோமசுந்தரம், சென்னை-19

பதில் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

 மாலா ராஜ்
மாலா ராஜ்

இந்தப் பிரச்னையை ‘மென்ஸ்ட்ருவல் மைக்ரேன்’ என்று சொல்வோம். ‘ப்ரீமென்ஸ் ட்ருவல் சிண்ட்ரோம்’ மாதிரியான ஒன்றுதான் இதுவும். பீரியட்ஸ் முடிந்ததும் தலைவலி தானாகச் சரியாகிவிடும். மற்ற நாள்களைவிட மாதவிடாய் நாள்களில் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். புரொ ஜெஸ்ட்ரான் ஹார்மோனின் தன்மைகளில் தலைவலியைத் தருவதும் ஒன்று. இந்த நாள்களில் மசாலா அதிகம் சேர்த்த, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உப்பின் அளவைக் குறைத்து, ஜங்க் உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

அவள் பதில்கள் - 5 - நெய்யா, வெண்ணெயா... குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?

பழங்கள் நிறைய சாப்பிடுவதும் தண்ணீர் அதிகம் குடிப்பதும் அவசியம். பி காம்ப்ளெக்ஸ் உள்ள மல்ட்டி வைட்டமின் மாத்திரை தினமும் ஒன்று எனத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு எடுத்துக்கொள்ளவும்.

பெயின் கில்லர் தேவையில்லை. தாங்க முடியாத வலி என்றால் பாராசிட்டமால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். சின்னச் சின்ன உடற் பயிற்சிகள், யோகா பயிற்சிகள் செய்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழப் பழகுவது போன்றவற்றைப் பின்பற்றலாம்.

பெண்கள் செய்யும் சிறு, குறு தொழில்களுக்கு நிதி உதவி பெறுவது எப்படி? என்ன ஃபார்மாலிட்டீஸ்? யாரை, எப்படி அணுக வேண்டும்?

- மாளவிகா மேனன், கோயம்புத்தூர் - 9

பதில் சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.ராம கிருஷ்ணன்

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் தொடங்க விரும்பும் பெண்களுக்கு இரண்டு வகையான முதலீடு தேவைப்படும். ஒன்று, குறுகிய கால முதலீடு. குறுகிய கால முதலீட்டில் மூலப் பொருள்கள் வாங்குதல், சம்பளம் - வாடகை போன்ற செலவுகளுக்குத் தேவைப்படும் நிதியில் ஒரு பகுதியை வங்கிகளிலிருந்து ஓடி, (Over Draft) சிசி (Cash Credit) போன்றவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டாவது நீண்ட கால முதலீடு. நீண்ட கால முதலீட்டுத் தொகையின் ஒரு பகுதியை சொந்தமாகக் கையிலிருந்து போட வேண்டும். மற்ற பகுதியை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிலிருந்து 7 முதல் 10 ஆண்டுகள் வரையில் திரும்பக் கட்டும் விதமாக நீண்ட காலக் கடனாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தொழிற்சாலையைத் தொடங்கு வதற்கும், எந்திரங்கள் வாங்குவதற்கும் இதுபோன்ற முதலீடு பயன்படும்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வட்டித் தொகையைவிட குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான வட்டி குறைவாக இருக்கும். அதாவது, அரசு மானியம் வழங்குவதால், வட்டி விகிதம் சற்று குறைவாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் சில தொழில்களுக்கு முதல் இரண்டு ஆண்டு களுக்கு அசலையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு கடன் தவணை சலுகைக் காலம் (Moratorium) என்று பெயர். பின்னர் நீங்கள் வட்டியும் முதலுமாக சேர்த்துச் செலுத்த வேண்டும்.

பெண்கள் ஒன்றிணைந்து சுய உதவிக் குழுக்களாகத் தொழில்களைத் தொடங்கினால் அதற்கும் வங்கிகள் கடன்களை வழங்கி ஊக்கப்படுத்துகின்றன. குறிப்பாக, விவசாயம் சார்ந்த பொருள்களுக்கு பெரிய அளவில் இந்திய அரசு ஊக்கமளித்து வருகிறது. உங்கள் அருகில் உள்ள மாவட்டத் தொழில் மையம் அல்லது குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைப்பு அல்லது இந்த அமைப்புகளின் இணையதளங்கள் மூலமாக இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை என்று தொடர்ந்து கேள்விப்படுகிறோம். இன்ஜினீயரிங்தான் படிப்பேன் என அடம்பிடிக்கும் பிள்ளைகளுக்கு இதை எப்படிப் புரியவைப்பது? இன்ஜினீயரிங் துறையில் எதிர்காலமுள்ள பிரிவுகள் என்னென்ன?

- வி.லட்சிதா, பொன்னேரி

பதில் சொல்கிறார் கல்வி ஆலோசகர் சிவகுமார்

சிவகுமார்
சிவகுமார்

கோவிட் 19 பெருந்தொற்றால் உலகமே சில மாதங்களுக்கு முடங்கியிருந்தது. ஆனாலும், கோவிட் தொற்றுக்கு முன்பு பல முன்னணி ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இன்ஜினீயரிங் முடித்த மாணவர்களை எந்த அளவுக்கு ப்ளேஸ் மென்ட்டில் தேர்வு செய்தனவோ, அதைவிட அதிகமாக கொரோனாவுக்குப் பிறகான இன்றைய சூழலிலும் ப்ளேஸ்மென்ட் நடக்கிறது. முன்பு நேரில் நடந்த இன்டர்வியூ இப்போது ஆன்லைனில் நடக்கிறது. ஆனால், வேகமாக நடக்கிறது. ஐ.டி மற்றும் டெக்னாலஜி தொடர்பான எல்லா பெரிய நிறுவனங்களும் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர்களுக்கான வருமானமும் (பே பேக்கேஜ்) அதிகரித்திருப் பதை மறுப்பதற்கில்லை.

கோவிட் தொற்றுக்குப் பிறகு, டெக்னாலஜி யின் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறார்கள். அதற்கு முன்பு இண்டஸ்ட்ரி 4.O என்ற பெயரில் டேட்டா சயின்ஸ், கிளவுட், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் போன்றவை பிரபலமாகத் தொடங்கிவிட்டன. இந்தத் தொழில்நுட்ப ஏரியாக்களில் வரும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினீயரிங்கில் டிசைனிங் தொடர்பான துறைகளில் எதிர்கால வேலை வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. தனியே தொழில் தொடங்க நினைக்கும் மாணவர் களுக்கும் இன்ஜினீயரிங்கில் இந்தத் துறைகள் ஏற்றவை.

உங்கள் மகனோ, மகளோ இன்ஜினீயரிங் தான் படிப்பேன் என அடம்பிடித்தால் முதலில் அவர்களுக்கு ஒரு விஷயத்தைப் புரிய வையுங்கள். அவர்களுக்கு எதிர்காலத்தில் என்னவாகப் போகிறோம் என ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவை நனவாக்கும் துறையைத் தேர்ந்தெடுப்பதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். தன் நண்பர்கள் இன்ஜினீயரிங் படிக்கிறார்கள் என்பதற்காக தானும் அதைத் தேர்ந்தெடுக்க விரும்பாமல், தன் இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றிநடை போட அவர்களுக்கு பெற்றோர் மற்றும் கல்வி ஆலோசகர்களின் வழிகாட்டுதல்கள் முக்கியம். அதற்கான உதவிகளை அவர்களுக்குச் செய்யுங்கள். இன்ஜினீயரிங் படிப்புக்கு எதிர்காலம் இல்லை என்ற எண்ணத்தை நீங்களும் மாற்றிக்கொள்ளுங்கள்.

அவள் பதில்கள் - 5 - நெய்யா, வெண்ணெயா... குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ, avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு