ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் 52: வீட்டின் மரச்சாமான்களை அரிக்கும் கறையான்... மாற்றுவழி உண்டா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

- சாஹா

என் வயது 21. எனக்கு பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி வருகிறது. என் தோழி தனக்கும் இதேபோல இருப்பதாகவும், பிசிஓடி பாதிப்பு உள்ளதை ஸ்கேன் மூலம் தெரிந்துகொண்டதாகவும் சொல்லி, என்னையும் அந்த ஸ்கேன் செய்து பார்க்கச் சொல்கிறாள். நானும் அந்த ஸ்கேனை செய்து பார்க்கலாமா? -எஸ்.ஷாலினி, திருச்சி

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

உங்கள் தோழியைப் போல பல பெண்களும் பிசிஓடி பாதிப்பை உறுதிசெய்யும் ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் மருத்துவர்களைச் சந்திக்க வருவதைப் பார்க்கிறோம். ஆனால், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பை உறுதிசெய்ய ஸ்கேன் பரிசோதனை மட்டும் போதாது. பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் பாதிப்பை உறுதிசெய்ய மருத் துவத்துறையைச் சேர்ந்த பலரும் நம்புவது ‘ராட்டர்டாம் க்ரைட்டீரியா’வின் (The Rotterdam criteria) கைடுலைன்களைதான். அதில், பிசிஓடி பாதிப்புக்கான மூன்று பிரச்னைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவள் பதில்கள் 52: வீட்டின் மரச்சாமான்களை அரிக்கும் கறையான்... மாற்றுவழி உண்டா?

அந்த மூன்று விஷயங்கள்... முறைதவறிய பீரியட்ஸ் சுழற்சி. அடுத்தது, ஆண் ஹார்மோன்களான ஆண்ட்ரோஜென் ஹார்மோன்கள் பெண் உடலில் அதிகமிருப்பது. இதன் விளைவாக முகம் உள்பட உடலின் பல பகுதிகளிலும் ரோம வளர்ச்சி, பருக்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும். மூன்றாவதாக, சினைப்பையில் காணப்படும் கட்டிகள். அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்யும்போது இதைக் கண்டு பிடிக்கலாம். இந்த மூன்றில் இரண்டு பாதிப்புகளாவது இருக்கும் பட்சத்தில்தான் அது பிசிஓடி பாதிப்பாகக் கருதப்படும்.

எனவே முறைதவறிய பீரியட்ஸ் சுழற்சி என்ற ஓர் அறிகுறியை மட்டும் பார்த்துவிட்டு, அதற்கு பிசிஓடி பாதிப்புதான் காரணம் என நீங்களாக நினைத்துக்கொண்டு தேவையற்ற பரிசோதனைகளைச் செய்து பார்க்காதீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். அறிகுறிகளைவைத்து, தேவையான பரிசோதனைகளைச் செய்து, பிசிஓடி இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அதற்கேற்ற சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

வீட்டின் உள் அறைகளுக்கு, கபோர்டுகளுக்கு, பாத்ரூம்களுக்கெல்லாம் மரக்கதவுகள் போட்டிருந்தோம். கறையான் அரித்ததால் அவற்றை மாற்ற வேண்டியிருக்கிறது. மீண்டும் மரக்கதவு போட்டால் மறுபடியும் கறையான் அரிக்கும் என்கிறார்கள். பிவிசி மெட்டீரியலில் கதவுகள் போடலாமா? அது வீட்டின் உள் வெப்பத்தை அதிகரிக்குமா? இந்தப் பிரச்னைக்கு மாற்றுவழி உண்டா? - கே.ஜெயந்தி, சென்னை-111

சரோஜினி திரு
சரோஜினி திரு

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர் சரோஜினி திரு.

உங்கள் கேள்வியின் முதல் பிரச்னைக்கு வருவோம். கறையானை எப்படிக் கட்டுப்படுத்துவது? புது வீடு கட்டும் போது கட்டுமானத்தை ஆரம்பிக்கும் நிலையிலேயே ‘டெர்மைட் ப்ரூஃப்’ செய்துவிட்டால் கறையான் தாக்குதல் குறைந்துவிடும். கறையான் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்நிலையில் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனங்களைத் தொடர்புகொண்டால், அவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து, சுவர்களில் துளையிட்டு கறையானை அழிக்கும் மருந்தைச் செலுத்துவார்கள். ஆனால், இது நிரந்தர தீர்வல்ல. மூன்று வருடங்களுக்கொரு முறை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருப்போர், அவர்களது வீட்டுக்கு மட்டும் பெஸ்ட் கன்ட்ரோல் செய்து கொண்டால் பலன் கிடைக்காது. பெஸ்ட் கன்ட்ரோல் செய்யாத தளங்களிலிருந்து உடனே கறையான் பரவல் மற்ற தளங்களுக்கும் போகும். எனவே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருப்போர், எல்லோரும் சேர்ந்துபேசி, ஒரே நேரத்தில் எல்லா வீடுகளுக்கும் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யும்போதுதான் பலன் கிடைக்கும்.

ஆரம்பத்தில் கதவுகள், ஜன்னல்களை அரித்திருக்கும் கறையான், போகப்போக உங்கள் வீட்டு கட்டில், டைனிங் டேபிள் என அனைத்து மரச்சாமான்களையும் அரிக்கத் தொடங்கும். அதற்குமுன் டெர்மைட் ப்ரூஃப் செய்து விடுவது சிறந்தது. இப்போது மார்க்கெட்டில் கறையான் அரிக்காத டெர்மைட் ப்ரூஃப் மெட்டீரியல்கள் நிறைய வந்துள்ளன. இண்டோவுட் என ஒன்று கிடைக்கிறது. பிளைவுட் போன்றே இருக்கும். பிளைவுட்டுக்கு பதில் இதைப் பயன்படுத்தலாம். இதை கதவுகளுக்கு மட்டு மன்றி, வார்ட்ரோப் உள்ளிட்ட தேவைகளுக்கும் பயன் படுத்தலாம். இதன் மேல் பெயின்ட்டோ, டெர்மைட் ப்ரூஃப் லேமினேஷனோ செய்துகொள்ளலாம்.

வீட்டுவாசலில் நிலைப்படிகளை பெரும்பாலும் மரத்தில் செய்வதையே விரும்புவோம். அதற்கு தேக்கு மரத்தைப் பயன்படுத்தலாம். தேக்கு இயல்பிலேயே டெர்மைட் ப்ரூஃப் தன்மை கொண்டது.

பிவிசி பற்றி கேட்டிருக்கிறீர்கள். அதைவிட சிறந்த ‘டபிள்யூபிசி’ (Wooden Plastic Composite) மெட்டீரியல் இப்போது வருகிறது. பிளாஸ்டிக்கும் பிவிசியும் கலந்த இது, பார்ப்பதற்கும் பிவிசியைவிட நன்றாக இருக்கும். வீட்டின் உள் அறைகளுக்கு இதே மெட்டீரியலில் ரெடிமேடு கதவுகள் கிடைக்கின்றன. கதவுகளின் அளவுக் கேற்ப அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பொருத்திக் கொள்ளலாம். நீங்கள் நினைப்பதுபோல இந்த மெட்டீரியல்களில் கதவுகள் பொருத்துவதால் வீட்டுக்குள் வெப்பம் அதிகரிக்கவெல்லாம் வாய்ப்பில்லை. ஆனால், பராமரிப்பு ரொம்ப முக்கியம். அதேபோல இதற்கான சர்வீஸை சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் ஒரு தடவைக்கு இரு தடவை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. வழக்கமான மரத்தச்சர்கள் போல, இந்த பிவிசி உள்ளிட்டவற்றுக்கு அவ்வளவு எளிதில் தச்சர்கள் கிடைத்துவிட மாட்டார்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.