Published:Updated:

அவள் பதில்கள் 24 - அப்பள பிசினஸ்... அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல என்ன வழி?

கொரோனா காலத்தில் நிறைய பிள்ளைகள் வீட்டிலிருந்தே படிக்கும் ஓப்பன் ஸ்கூல் முறைக்கு மாறினார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லித் தரவும் ஆசிரியர்களுக்கான தேவை இருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

எனக்கு டீச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் திருமணம், குழந்தை என அடுத்தடுத்து பொறுப்புகள் கூடியதால் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு முழுநேர இல்லத்தரசியாக மாறினேன். இப்போது குழந்தைகள் ஓரளவு வளர்ந்து விட்டபடியால் திரும்பவும் என் டீச்சர் வேலை ஆசை தலைதூக்கியிருக்கிறது. ஆனால், கொரோனா பாதிப்பால், ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன, சம்பளமும் பாதிதான் கிடைக்கும் என்கிறார்கள். ஆன்லைன் தொழில்நுட்பமும் அவசியம் தெரிந்திருக்க வேண்டுமாம். நான் என்ன செய்யலாம்?

- விமலா சுப்ரமணியன், சத்தியமங்கலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மதுமதி நாராயணன்

திருமணம், மகப்பேறு என ஒரு பிரேக்குக்கு பிறகு வேலை பார்க்க நினைக்கிற பெரும்பாலான படித்த பெண்கள் ஆசிரியர் பணிக்கு ஆசைப்படுகிறார்கள். தன் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்தது போல இருக்கும், பிள்ளைகள் பள்ளி சென்று திரும்பும் நேரத்திலேயே வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பவும் முடியும் என்பது அவர்கள் சொல்லும் காரணம். ஆனால் இப்போதைய சூழலில் ஒரு பள்ளிக்கூடத்தில் முழுநேர ஆசிரியராகப் பணிபுரிய வாய்ப்புகள் குறைவுதான். முழுநேர ஆசிரியராக வேலை பார்க்க பி.எட் கல்வித் தகுதியும் அவசியம்.

எனவே உங்களைப் போன்ற படித்த, கற்பித்தலில் ஆர்வமுள்ள பெண்கள் வேறு மாதிரி யோசிக்கலாம். பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு பெரும்பாலான பிள்ளைகளுக்கு படிப்பில் பெரிய சப்போர்ட் தேவைப்படுகிறது. அதற்கு உங்களால் உதவ முடியும். கொரோனாவுக்குப் பிறகு ஆன்லைன் கல்வி விஸ்வரூபம் எடுத்திருப்பதால் எல்லா ஆசிரியர்களும் அதைக் கற்றுக்கொண்டு பழக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருப்பதும் உண்மைதான். ஆசிரியராகும் ஆசை இருப்போர் அந்த விஷயத்திலும் தங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற விஷயங்களில் பயிற்சியளிக்க ஷார்ட் டேர்ம் பயிற்சிகள் இன்று நிறைய உள்ளன. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க ஆஃப்டர் ஸ்கூல் டீச்சிங் பயிற்சிகளும் வந்துவிட்டன.

அவள் பதில்கள் 24 - அப்பள பிசினஸ்... அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல என்ன வழி?

கொரோனா காலத்தில் நிறைய பிள்ளைகள் வீட்டிலிருந்தே படிக்கும் ஓப்பன் ஸ்கூல் முறைக்கு மாறினார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லித் தரவும் ஆசிரியர்களுக்கான தேவை இருக்கிறது. எனவே முதலில் இந்த விஷயங்களில் உங்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள். ஆசிரியராகத் தேவையான அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, பிள்ளைகளை எப்படிக் கையாள்வது என கற்றுக்கொள்ளுங்கள். டெக்னாலஜி அப்டேட் மிகமிக அவசியம். பள்ளிக்கூடத்தில் சேராமலேயே உங்கள் ஆசிரியர் கனவை நனவாக்கிக் கொள்ள இன்று நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வாழ்த்துகள்.

நான் வீட்டில் இருந்தபடியே அப்பளம், வற்றல், வடகம், ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். என் வீட்டைச் சுற்றி உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு இவற்றை சப்ளை செய்கிறேன். ஓரளவு லாபம் வருகிறது. ஆனால் இந்தத் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது எப்படி என்று தெரியவில்லை. இதே பிசினஸை எனக்குத் தெரிந்த வட்டத்திலேயே நிறைய பேர் செய்கிறார்கள். போட்டிகளை மீறி பிராண்டிங் செய்து பல இடங்களுக்கும் பொருள்களை சப்ளை செய்ய விரும்புகிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

- எஸ். உமாதேவி, குமாரபாளையம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த விளம்பர ஆலோசகர் கே.வி.கதிரவன்

உங்களுடைய பிசினஸ் ஓரளவு நன்றாகப் போவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுவே முதல் வெற்றிதான். இந்த பிசினஸை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோக நினைக்கிற உங்கள் ஆசை நியாயமானதுதான். அடுத்தகட்டத்துக்கு நகர்வதற்கு முன் உங்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை பலமாக இருக்க வேண்டும். பலரும்தான் அப்பளம், வற்றல், ஊறுகாய் விற்கிறார்கள். அதில் உங்கள் தயாரிப்புகளின் தனித்துவம் என்ன என்பது மிக முக்கியம். அந்த தனித்துவத்தைக் கண்டுபிடித்து, அதையே உங்கள் தயாரிப்புகளின் லேபிளில் குறிப்பிட்டு விற்கத் தொடங்கினால், வாடிக்கையாளர்கள் அதைக் குறிப்பிட்டுக் கேட்டு வாங்க ஆரம்பிப்பார்கள்.

அவள் பதில்கள் 24 - அப்பள பிசினஸ்... அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல என்ன வழி?

உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். அந்த மார்க்கெட்டில் பல கடைகளில் உருளைக்கிழங்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு கடையில் மட்டும் வியாபாரம் சரியாக இல்லை. வியாபாரத்தை அதிகரிக்க என்ன செய்வது என யோசித்தான் அந்தக் கடைக்காரரின் மகன். தங்களிடம் உள்ள உருளைக் கிழங்குகளை பெரியது, மீடியம், பேபி பொட்டேட்டோ என மூன்று சைஸ்களில் பிரித்து தனித்தனியாக விற்க ஆரம்பித்தான். இந்தக் கடையில்தான் நம் விருப்பத்துக் கேற்ற அளவில் உருளைக்கிழங்கு கிடைக்கும் என மக்கள் வர ஆரம்பித் தார்கள். அதே டெக்னிக்கை அடுத்தடுத்த கடைகளும் காப்பி அடித்தார்கள். அடுத்த கட்டமாக அந்தக் கடைக்காரரின் மகன், உருளைக் கிழங்குகளை நன்கு கழுவி, சுத்தப் படுத்தி தனியே விற்க ஆரம்பித்தான். அதற்காகவே மக்கள் வர ஆரம்பித்தார்கள். அதையும் மற்ற கடைக்காரர்கள் காப்பியடித்தார்கள். உங்கள் தயாரிப்பில் நிச்சயம் ஏதோ ஒரு தனித்துவம் இருக்கும். எளிதில் ஜீரணமாக குறிப்பிட்ட ஒன்றைச் சேர்த்திருக்கலாம். செக்கு எண்ணெயில் தயாரித்திருக்கலாம். இப்படி உங்கள் தனித்துவத்தைச் சொல்லி விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் தனித்து நிற்பீர்கள்.

எந்த ஒரு தொழிலிலும் ரிஸ்க் நிச்சயம் இருக்கும். எடுத்த உடனேயே தமிழ்நாடு மார்க்கெட், இந்தியா மார்க்கெட் என நினைக்காமல் சின்னச் சின்ன அடிகளாக எடுத்துவையுங்கள். இன்று பிரபலமாக இருக்கும் பல பிராண்டுகளும் அப்படித்தான் சிறிய அளவில் தொடங்கி, பெரிய அளவில் வளர்ந்தவர்கள், பிரபலமானவர்கள். அது உங்களுக்கும் சாத்தியம். முதலில் தோல்விகள் வரும். பயப்படாதீர்கள். பெரிய அளவில் ஆரம்பித்து, பெரிய ரிஸ்க்கையும் பெரிய தோல்விகளையும் சந்தித்தால் மீண்டு எழுந்திருப்பது சிரமமாக இருக்கலாம். எனவே சின்ன அளவில் தொடங்குங்கள். சின்ன அளவில் அடிபட்டால் சமாளித்துவிடலாம். ஆரம்பகாலத்தில் முடிந்த அளவுக்கு கடன் வாங்கி ரிஸ்க் எடுக்காமல் கையிருப்பை வைத்துச் சமாளிப்பது பாதுகாப்பானது. அதிலும் தனியாரிடம் கடன் வாங்கவே வேண்டாம். தேவைப்பட்டால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி பிசினஸை நடத்தலாம். உங்களிடம் இருக்கும் தேடல் உங்களை நிச்சயம் உயரத்துக்கு கொண்டு போகும். வாழ்த்துகள்.

அவள் பதில்கள் 24 - அப்பள பிசினஸ்... அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல என்ன வழி?

என் வயது 82. என் 26 வயதிலிருந்து நீரிழிவு பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். கடந்த ஆறு மாதங்களாக தலையில் அரிப்பு இருக்கிறது. தலைக்கு அடிக்கடி ஷாம்பூ உபயோகித்து சுத்தமாகத்தான் வைத்துக்கொள்கிறேன். ஆனாலும் அரிப்பு நின்றபாடாக இல்லை. இதற் கொரு தீர்வு சொல்லுங்கள்.

- என். திலகம், திருநெல்வேலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியல் மருத்துவர் ரவிகிரண்

82 வயதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அரிப்பு பிரச்னைக்கு பொடுகு, `சீபோசோரியாசிஸ்' (Sebopsoriasis) எனப்படும் சரும பிரச்னை, `மாஸ்டோசைட்டோசிஸ்' (Mastocytosis) எனப்படும் அரிதான இம்யூன் டிஸ்ஆர்டர் என பல காரணங்கள் இருக்கலாம். அதிக டென்ஷனிலோ, பதற்றத்திலோ இருக்கும்போதுகூட சிலர் இப்படி உணர்வார்கள். உடனடியாக நீங்கள் சரும மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். அவர் பரிந்துரைக்கும் டெஸ்ட்டுகளை எடுத்து, அதற்கேற்ப சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடனடியாக அரிப்பு பிரச்னையிலிருந்து விடுபட உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நீங்கள் சிகிச்சை மேற் கொள்ளும் நீரிழிவு மருத்துவரை அணுகி, ஆன்டிஹிஸ்டமைன் மாத்திரைகளை, குறிப் பிட்ட நாள்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டியது மிக முக்கியம். அது கட்டுப்பாட்டில் இருந்தால் அரிப்புக்கான மற்ற காரணங்களைப் பற்றி ஆராயலாம். மற்றபடி ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் முதலில் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு, பிறகு சரும மருத்துவரை பார்க்கலாம்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு