Published:Updated:

அவள் பதில்கள் - 7 - அன்பான மாமியார்... ‘அவனா நீ’ கணவன்... சட்டம் பதில் சொல்லுமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

சாஹா

அவள் பதில்கள் - 7 - அன்பான மாமியார்... ‘அவனா நீ’ கணவன்... சட்டம் பதில் சொல்லுமா?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

கொரோனா இந்தியாவுக்குள் நுழைவதற்கு சில நாள்கள் முன்புதான் எனக்குத் திருமணமானது. அடுத்த சில நாள்களில் லாக்டௌன்... அந்தப் பதற்றமான சூழ்நிலையில் எங்களுக்குள் அந்தரங்க உறவு என்ற ஒன்று நடக்கவில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவரை அந்தரங்க உறவுக்குள் நுழைய தடுக்கிறது, காலப் போக்கில் சரியாகும் என்று பொறுத்துக்கொண்டேன். என் கணவரின் அம்மா என்மேல் மிகுந்த அன்பு கொண்டவர். வொர்க் ஃப்ரம் ஹோமில் கணவரும் அவரின் நண்பரும் எங்கள் வீட்டிலேயே ஒன்றாக வேலை பார்க்கத் தொடங்கினார்கள். நண்பர் அங்கேயே தங்கினார். ஒருநாள் அவர்கள் இருவரையும் மிக நெருக்கமாக, பார்க்க சகிக்காத கோலத்தில் பார்த்த பிறகுதான் அவர்கள் ஓரின ஈர்ப்பாளர்கள் என்பதும், உறவைத் தவிர்க்க அதுதான் காரணம் என்பதும் புரிந்தது. என் வாழ்க்கைக்கு சட்டம் பதில் சொல்லுமா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

அவள் பதில்கள் - 7 - அன்பான மாமியார்... ‘அவனா நீ’ கணவன்... சட்டம் பதில் சொல்லுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி

இடது கை பழக்கமுள்ளவர்களை வலது கை பழக்கத்துக்கு மாற்றுவது, மனநிலை சரியில்லாதவர் களுக்குத் திருமணம் செய்து வைப்பது போன்று நம் சமூகத்தில் காலம் காலமாகச் சில நம்பிக்கைகள் தொடர்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் ஓரின ஈர்ப்பாளர்களைப் புரிந்துகொள்ளாமல் புறக்கணிப்பதும். இந்தப் புரிந்துணர்வு இல்லாமல்தான் ஓரின ஈர்ப்பு கொண்டவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு எதிர்ப்பாலினத்தவரோடு திருமணம் செய்து வைப்பதும் நடக்கிறது. சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் (IPC செக் ஷன் 377-partially unconstitutional)படி இத்தகைய உறவை சட்டம் ஏற்றுக்கொண்டாலும் சமூகம் இன்னும் ஏற்கவில்லை.

முதல் வேலையாக இரு குடும்பத்தாரிடமும் பேசுங்கள். மருத்துவ சிகிச்சை அல்லது கவுன் சலிங்கில் சரி செய்துவிடலாம் என்றால் ஏற்காதீர்கள். இருவரும் சம்மதிக்கும்பட்சத்தில் மியூச்சுவல் கன்சென்ட்டின் அடிப்படையில் விவாகரத்து கோரி, உங்கள் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடும் கேட் கலாம். விவாகரத்துக்கு மறுத்தால் ஓரின ஈர்ப்பாளர் என்பதை மறைத்து உங்களைத் திருமணம் செய்து, தாம்பத்திய உறவை மறுத்ததை

Cruelty என்ற வரைவுக்குள் கொண்டுவந்து விவாகரத்தும் நஷ்டஈடும் கேட்கலாம். எந்தக் குற்ற உணர்வும் இன்றி இந்த உறவிலிருந்து சட்டப்படி வெளியேறி, புது வாழ்க்கையைத் தொடங்க வாழ்த்துகள்.

டைல்ஸ், மார்பிள் தரைகளில் நடந்தால் கால்வலி வருவதாக நிறைய பேர் சொல்கிறார்கள். இன்றைய வீடுகளில் இந்த இரண்டையும் தவிர்க்க முடியாத நிலையில் வேறு என்ன ஆப்ஷன்?

- கே.மங்கையர்க்கரசி, விருதுநகர்

அவள் பதில்கள் - 7 - அன்பான மாமியார்... ‘அவனா நீ’ கணவன்... சட்டம் பதில் சொல்லுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர் சரோஜினி திரு.

ஒரு கட்டடத்துக்கு அஸ்திவாரம், கூரை, சுவர் எல்லாம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு கட்டடத்தின் தரையும் முக்கியம். அந்தத் தரை பார்க்கவும் அழகாக இருக்க வேண்டும். கட்டடத்தின் தன்மைக்கேற்பவும் இருக்க வேண்டும்.

சமீப காலமாக ‘பாலிஷ்டு கான்கிரீட் ஃபுளோர்’ என்பது பிரபலமாகி வருகிறது. இது இப்போதுதான் டிரெண்டானது என்று சொல்ல முடியாது. சிமென்ட் தரையில் ரெட் ஆக்ஸைடு கலந்த அந்தக் காலத்து சிவப்பு நிறத் தரை நினைவிருக்கிறதா? பழைய வீடுகளில் இப்போதும் பார்க்கலாம். அதையே புது மெட்டீரியல்கள் மற்றும் டெக்னிக்குகளைப் பயன்படுத்தி இன்னும் அழகாகவும் ஸ்ட்ராங்காகவும் பல்வேறு நிறங்களில் கிடைக்குமாறு உருவாக்கியிருக்கிறார்கள். அதுதான் பாலிஷ்டு கான்கிரீட் ஃபுளோர். டைல்ஸ் அல்லது மார்பிள் தரைக்கு ரெடி செய்வதுபோல இதற்கும் பேஸ் ரெடி செய்ய வேண்டும். 25 முதல் 40 மி.மீ கனமுள்ள பிரத்யேக கான்கிரீட் கலவையை அதன் மேல் ஊற்றுகிறார்கள். அந்தக் கலவையில் வொயிட் சிமென்ட்டும், நமக்குத் தேவையான நிறமும், சில கெமிக்கல்களும் இருக்கும்.தேவைப்பட்டால் மார்பிள் சிப்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். அந்த கான்கிரீட் செட் ஆனதும் சமதளமற்ற பகுதிகள் சீராக்கப்படும். பிறகு, அதை இன்னும் ஸ்ட்ராங் ஆக்க டென்ஸிஃபிகேஷன் என்றொரு புராசஸ் செய்யப்படும். பிறகு, பாலிஷ் செய்யப்பட்டு, அந்த பாலிஷ் மங்காமலிருக்க சீல் செய்யப்படும். அதிக பளபளப்புடன் அல்லது மேட் ஃபினிஷில் அல்லது சாட்டின் ஃபினிஷில்... இப்படி நமக்குத் தேவையான அளவுக்கு இந்த பாலிஷை நாம் தீர்மானித்துக்கொள்ளலாம். மார்பிள், கிரானைட்டைவிடவும் இதில் செலவு குறைவு. பராமரிப்பது எளிது.

இது சூழலுக்கு உகந்தது என்பது கூடுதல் சிறப்பு. வெயில் காலத்தில் குளுமையையும், குளிர் காலத்தில் இதமானதாகவும் இருக்கும். மற்ற தரைகளைப் பயன் படுத்தும்போது வருவதாகச் சொல்லப்படும் மூட்டுவலி போன்ற பிரச்னைகளும் இந்தத் தரையில் வராது. தரமான தரையா, அதைப் பதிக்கும் நபர்கள் வேலை தெரிந்தவர்களா என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 ஆதிலட்சுமி லோகமூர்த்தி -  சரோஜினி திரு -  ஷைனி சுரேந்திரன் -  வெங்கடேஷ்
ஆதிலட்சுமி லோகமூர்த்தி - சரோஜினி திரு - ஷைனி சுரேந்திரன் - வெங்கடேஷ்

எனக்கு 12 வருடங்களாக நீரிழிவு உள்ளது. உடல் எடை வெகுவாகக் குறைந்துவிட்டது. நீரிழிவு உள்ளவர்கள் உடல் எடை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் என்ன?

- ஜி.சுதா, சென்னை

பதில் சொல்கிறார் சென்னை யைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

நீரிழிவு இருக்கிறது என்றால் முதலில் ரத்தச் சர்க்கரையின் அளவுகள் பரிசோதிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற உணவுத்திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். புரதமும் நார்ச்சத்தும் அதிகமுள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் உட்கொள்கிற உணவுகளின் கார்போஹைட்ரேட் தன்மையையும் கவனிக்க வேண்டும். புரதம் நிறைந்த நட்ஸ், சீட்ஸ், பருப்புகள், பயறு வகைகள், சோயா மற்றும் சோயா உணவுகள், பால் மற்றும் பால் உணவுகள், முட்டை, சிக்கன், மீன் போன்ற வற்றையும், நார்ச்சத்துள்ள கீரைகள், பீன்ஸ், கொத்தவரங்காய், புரொக்கோலி, கோவைக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கிழங்குவகைகளைத் தவிர்ப்பது நல்லது.

நான்காம் வகுப்பு படிக்கும் என் குழந்தைக்கு லேப் டாப் வாங்க வேண்டும். அவன் வயதுக்கு, அவனுக்கான தேவைக்கு வாங்கும்போது எந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? பிராண்டா, விலையா, வேறு ஃபீச்சர்களையா?

- காயத்ரி பார்த்திபன், சேலம்-7

அவள் பதில்கள் - 7 - அன்பான மாமியார்... ‘அவனா நீ’ கணவன்... சட்டம் பதில் சொல்லுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கணினி ஆலோசகர் வெங்கடேஷ்.

நான்காம் வகுப்பா, காலேஜா என்பது முக்கியமல்ல. இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு உபயோகிக்கக் கூடியதாகப் பார்த்து வாங்குவதே சிறந்தது. பிராண்டைவிடவும் பட்ஜெட்டுக்கேற்ப வாங்கலாம். உங்களுக்கு பட்ஜெட் பிரச்னையில்லை என்று நினைத்தால் பிரபலமான பிராண்டுகளை வாங்கலாம். இன்றைய சூழலில் படிக்கும் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் என்பது அத்தியாவசியம் என்றாகிவிட்டது.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் என்பது நாளுக்குநாள் முன்னேறிக்கொண்டே போகும். அவ்வப்போது தேவைக்கேற்ப அதை அப்கிரேடு செய்துகொள்வதுதான் சரியான முடிவாக இருக்கும்.

லேப்டாப் வாங்கியதும் ஆன்டிவைரஸ் போட்டுவிட்டு, அதை டிஸ்ஏபிள் செய்யும் ஆப்ஷனை பயன்படுத்தி டிஸ்ஏபிள் செய்ய வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் தவறான இணைய தளங்களுக்குச் செல்லாமல் குழந்தைகளை மீட்டுவிடலாம். லைசென்ஸ்டு வெர்ஷன் ஆன்டிவைரஸாக போட வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ளவும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை `அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ, avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.